பாரிஸ், ஜூலை 14–
‘கிராண்ட் கிராஸ் ஆப் தி லீஜியன் ஆப் ஹானர் எனும் பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரானால் வழங்கப்பட்டது.
பிரான்ஸ் அதிபரின் அழைப்பை ஏற்று, அந்நாட்டின் தேசிய தின கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி பாரிஸ் சென்றுள்ளார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்ன், பிரதமர் நரேந்திர மோடியை விமான நிலையத்திற்கு வந்து வரவேற்றார். அங்கு அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, பாரிசில் உள்ள ஹோட்டலுக்குச் சென்றார் மோடி. அங்கு, இந்திய வம்சாவளியினர் திரளாக குழுமியிருந்தனர். அவர்கள் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்களுடன் பிரதமர் மோடி பேசினார். தொடர்ந்து இந்திய சமூகத்தினர் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாடினார்.
இதனை தொடர்ந்து எலிசி அரண்மனைக்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு மோடிக்கு அதிபர் மேக்ரான் மற்றும் அவரது மனைவி பிரிகர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின் அரண்மனையில் பிரதமர் மோடிக்கு விருந்து அளிக்கப்பட்டது.
இதனையடுத்து தங்கள் நாட்டின் உயரிய விருதான கிராண்ட் கிராஸ் ஆப் தி லீஜியன் ஆப் ஹானர் விருதை பிரதமர் மோடிக்கு அதிபர் இம்மானுவேல் மேக்ரன் வழங்கி கவுரவித்தார்.
இதற்கு முன் இந்த விருதை, தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா, இங்கிலாந்தின் தற்போதைய அரசர் சார்லஸ், ஜெர்மனியின் முன்னாள் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் உள்ளிட்ட தலைவர்கள் பெற்றுள்ளனர்.
இது குறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இந்தியாவுடனான நட்புணர்வை உயர்ந்த நிலையில் வெளிப்படுத்தும் வகையில், பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான ‘கிராண்ட் கிராஸ் ஆப் தி லீஜியன் ஆப் ஹானர்’ விருது பிரதமர் மோடிக்கு அதிபர் இம்மானுவேல் மேக்ரானால் வழங்கப்பட்டது. இந்த சிறப்பு மரியாதைக்கு இந்திய மக்கள் சார்பாக அதிபர் மேக்ரானுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார்” என்று தெரிவித்துள்ளார்.