இந்தியா – -எகிப்து இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து
கெய்ரோ, ஜூன் 26-–
பிரதமர் மோடிக்கு எகிப்து நாட்டின் மிக உயரிய விருதான ‘ஆர்டர் ஆப் தி நைல்’ விருதை அதிபர் எல்சிசி வழங்கிக் கவுரவித்தார். இந்தியா – -எகிப்து இடையே முக்கிய ஒப்பந்தங்கள் நேற்று கையெழுத்தானது.
பிரதமர் மோடி நேற்று முன்தினம் 2 நாள் அரசு முறைப்பயணமாக எகிப்து நாட்டுக்குச் சென்றார். 26 ஆண்டுகளில் இந்திய பிரதமர் ஒருவர், எகிப்து நாட்டுக்கு சென்றது இதுவே முதல் முறை ஆகும்.
அங்குள்ள கெய்ரோ விமான நிலையத்துக்கு சென்று இறங்கிய பிரதமர் மோடியை ஒரு சிறப்பு நிகழ்வாக அந்த நாட்டின் பிரதமர் முஸ்தபா மட்புலி நேரில் வந்து வரவேற்றார். அங்கு பிரதமர் மோடிக்கு அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் பிரதமர் மோடி, நேற்று கெய்ரோவில் உள்ள எகிப்து அதிபர் மாளிகைக்கு சென்றார். அங்கு அவரை அதிபர் அப்தெல் பட்டா எல்சிசி உற்சாகமாக வரவேற்றார். அதைத் தொடர்ந்து இருவரும் மூடிய அறையில் சந்தித்துப் பேசினார்கள்.
இந்தச் சந்திப்பின்போது நடத்திய பேச்சுவார்த்தை மிகச்சிறப்பாக அமைந்ததாகவும், இரு தரப்பு உறவுகள் பற்றி விரிவான வகையில் ஆராயப்பட்டதாகவும், அத்துடன், இரு தரப்பு பொருளாதார, கலாசார தொடர்புகளை மேலும் வலுப்படுத்த இருவரும் ஒப்புக்கொண்டதாகவும் பிரதமர் மோடி தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பு, இரு தரப்பு உறவினை பாதுகாப்பு கூட்டுறவுக்கு வழிவகுக்கும் நிலைக்கு உயர்த்தியதாக கெய்ரோவில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவுக்கும், எகிப்துக்கும் இடையே பாதுகாப்பு துறை தொடர்பான கூட்டுக்கு உதவும் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும், விவசாயம் மற்றும் அதன் சார்புடைய துறைகள், நினைவுச்சின்னங்கள் மற்றும் தொன்மையான இடங்களைப் பாதுகாத்தல், போட்டி சட்டம் தொடர்பாகவும் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.
பிரதமர் மோடிக்கு எகிப்து நாட்டின் மிக உயரிய விருதான ‘ஆர்டர் ஆப் தி நைல்’ விருதை அதிபர் எல்சிசி வழங்கிக் கவுரவித்தார். இந்த விருது, அந்த நாட்டில் 1915–-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டதாகும். இது எகிப்து நாட்டுக்கு அல்லது மனித குலத்துக்கு மதிப்புக்குரிய சேவையாற்றுகிற நாடுகளின் ஜனாதிபதிகளுக்கும், பட்டத்து இளவரசர்களுக்கும், துணை அதிபர்களுக்கும் வழங்கக்கூடியதாகும்.
இந்த விருது, பிற நாடுகளில் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டுள்ள 13–-வது விருது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த விருது, 3 சதுர தங்க அலகுகளைக் கொண்ட தூய தங்க காலர் ஆகும், அதில் ‘பாரோனிக்’ சின்னங்கள் உள்ளன. முதல் அலகு தீமைகளுக்கு எதிராக அரசைப் பாதுகாக்கும் எண்ணத்தையும், இரண்டாவது அலகு நைல் நதியால் ஏற்படுகிற செழிப்பு மற்றும் மகிழ்ச்சியையும், மூன்றாவது அலகு செல்வத்தையும் சகிப்புத்தன்மையையும் குறிக்கின்றன.
இந்த அலகுகள் ஒவ்வொன்றும் ஒன்றுடன் ஒன்று ‘டர்க்கைஸ்’ மற்றும் மாணிக்கம் பதித்த வட்ட வடிவ மலரால் பிணைக்கப்பட்டுள்ளன.
காலரில் இருந்து தொங்குவது ‘பாரோனிக்’ பாணியின் பூக்கள் மற்றும் ‘டர்க்கைஸ்’ மற்றும் மாணிக்கக் கற்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு அறுகோண பதக்கமாகும். பதக்கத்தின் நடுவில், நைல் நதியைக் குறிக்கும் வகையில் நீண்டு நிற்கும் சின்னம் உள்ளது,
பிரதமர் மோடிக்கு கடந்த 9 ஆண்டுகளில் பப்புவா நியூகினியா, பிஜி, பாலாவ் குடியரசு, பூடான், அமெரிக்கா, பக்ரைன், மாலத்தீவுகள், ரஷியா, ஐக்கிய அரபு அமீரகம், பாலஸ்தீனம், ஆப்கானிஸ்தான், சவூதி அரேபியா ஆகிய நாடுகளைத் தொடர்ந்து தற்போது எகிப்து நாடும் அந்த நாட்டின் உயரிய விருதை வழங்கி சிறப்பு சேர்த்துள்ளது.
பிரதமர் மோடியும், எகிப்து அதிபர் எல்சிசியும் நடத்திய இரு தரப்பு பேச்சுவார்த்தை தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் வினய் கவத்ரா கூறுகையில்,
“26 ஆண்டுகளில் இந்திய பிரதமர் எகிப்து வந்தது இதுவே முதல் முறை. பாதுகாப்பு கூட்டு உள்பட 4 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இரு தரப்பு பேச்சுவார்த்தையும், ஒப்பந்தங்களும் அரசியல், பாதுகாப்பில் ஒத்துழைப்பு, ராணுவ ஒத்துழைப்பு, வர்த்தகம், முதலீட்டு உறவு, அறிவியல் மற்றும் கல்வி ஒத்துழைப்பு, மக்களுக்கு இடையேயான உறவை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்த உதவும்” என தெரிவித்தார்.
போர் நினைவிடத்தில் மரியாதை
பிரதமர் மோடி ஹெலியோபொலிஸ் காமன்வெல்த் போர் நினைவிடத்துக்கு சென்றார். அங்கு அவர், முதல் உலகப்போரின்போது, எகிப்திலும், பாலஸ்தீனத்திலும் தீரத்துடன் போரிட்டு வீரமரணம் அடைந்த இந்தியப் படைவீரர்கள் 3,799 பேர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
கெய்ரோ நகரில் அமைக்கப்பட்டுள்ள 1000 ஆண்டு பழமையான அல் ஹக்கீம் மசூதிக்கு பிரதமர் மோடி சென்றார். இந்த மசூதி இந்தியாவைச் சேர்ந்த தாவூதிபோரா சமூகத்தினரால்தான் புதுப்பிக்கப்பட்டுள்ளது. 1012-–ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த மசூதியின் சுவர்களிலும், கதவுகளிலும் உள்ள நுணுக்கமான செதுக்கப்பட்ட கல்வெட்டுகளை பிரதமர் பாராட்டினார்
பிரதமர் மோடி, கெய்ரோ புறநகர் கிசாவில் அமைந்து, உலக அதிசயங்களில் ஒன்றாகத் திகழ்கிற பிரமிடுகளை அந்த நாட்டின் பிரதமர் முஸ்தபா மட்புலியுடன் சென்று பார்வையிட்டார்.
குறிப்பாக, நைல் நதியின் மேற்குக்கரையில் பாறை பீட பூமியில் அமைக்கப்பட்டுள்ள 4-–வது வம்சத்தின் 3 பிரமிடுகளைப் பார்த்து வியந்தார்.