செய்திகள்

மோசமான டிரைவிங்கில் மைசூர் முதலிடம் ; சென்னை 6 வது இடம்

சிறந்த டிரைவிங்கில் முதலிடம் இந்தூர்

டெல்லி, மே 28–

மோசமாக வாகனம் ஓட்டும் நகரங்களில் மைசூரு முதலிடத்தில் உள்ள நிலையில், சிறப்பாக வாகனம் ஓட்டுபவர்களில் மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூர் நகரம் முதலிடம் பெற்றுள்ளது.

‘ஜூம்’ வாடகை கார் நிறுவனம், நவம்பர் 2020 முதல் 2021 வரை ஓர் ஆண்டு முழுக்க சுமார் இந்தியாவில் உள்ள 22 நகரங்களில் போக்குவரத்து குறித்து ஒரு சர்வே நடத்தியிருக்கிறது. அந்த ஆய்வில் சென்னையில் தினமும் 12 விபத்துகளுக்குக் குறையாமல் பதிவாகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மோசமான உயிரிழப்புகளும் அடக்கம். இந்த 12 விபத்துகளில் சுமார் 10 விபத்துகள் டிரைவர்களின் அலட்சியத்தாலும், மோசமான டிரைவிங்காலும்தான் ஏற்பட்டிருக்கின்றன என்றும் சொல்கிறது அந்தப் புள்ளி விவரம்.

சென்னையில் மோசமான வாகன ஓட்டிகள் 12.3 சதவிகிதமும், நல்ல டிரைவர்கள் 23.6 சதவிகிதப் பேரும், சுமாரான (ஆவரேஜ்) டிரைவர்கள் 64.1 சதவிகிதப் பேரும் இருக்கிறார்களாம்.

சென்னை 6 வது இடம்

இதில் 18.5 சதவிகிதம் என்ற கணக்கில் மோசமான டிரைவர்களுடன் முதலிடத்தில் மைசூரும், 14.8 சதவிகிதத்துடன் அகமதாபாத் இரண்டாவது இடத்திலும், 14.0 சதவிகிதத்துடன் மூன்றாவது இடத்தில் பெங்களூரும் இருக்கிறது. நான்காவது இடத்தில் ஜெய்ப்பூரும், ஐந்தாவது இடத்தில் விசாகப்பட்டினமும், ஆறாவது இடத்தில் சென்னையும் அடுத்து ஏழாவது இடத்தில் கோயம்புத்தூரும் இருக்கின்றன.

இதில் நல்ல டிரைவர்கள் கொண்ட மாவட்டமாக, மத்தியப்பிரதேசத்தில் உள்ள இந்தூர் முதலிடத்தில் இருக்கிறது. இங்கேதான் இந்தியாவிலேயே அதிகப்படியாக 35.4 சதவிகிதம் அருமையான டிரைவர்கள் இருக்கிறார்களாம். இதற்குக் காரணம், இங்கே டிரைவிங் லைசென்ஸ் வழங்கப்படும் விதம்.

மத்தியப்பிரதேசத்தில் ஆட்டோமேட்டட் டிரைவிங் டெஸ்ட் ட்ராக்குகளில் கார் / பைக் ஓட்டி நல்ல மதிப்பெண் எடுத்தால்தான் இங்கே டிரைவிங் லைசென்ஸ் எடுப்பதும் இதற்கு ஒரு முக்கியமான காரணமாகப் பார்க்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.