செய்திகள்

மோசடி செய்த பொறியியல் கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து; பேராசிரியர்கள் தொடர்ந்து பணியாற்ற தடை

Makkal Kural Official

அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் வேல்ராஜ் தகவல்

சென்னை, ஆக. 1–

மோசடி செய்த பொறியியல் கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும் பேராசிரியர்கள் தொடர்ந்து பணியாற்ற தடை விதிக்கப்படும் என்று அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் வேல்ராஜ் கூறினார்.

அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகள் ஒவ்வொரு ஆண்டும் தங்கள் அங்கீகாரம் மற்றும் இணைப்பு சான்றிதழை புதுப்பிக்க வேண்டும். இதற்கு உள்கட்டமைப்பு பேராசிரியர்கள், பணியாளர்கள் விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும். இவற்றை அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான ஏ.ஐ.சி.டி.இ. மற்றும் அண்ணா பல்கலைக் கழக குழுவினர் ஆய்வு செய்து அனுமதி அளிப்பார்கள்.

இந்த நிலையில் என்ஜினீயரிங் கல்லூரிகளில் மொத்தம் உள்ள 52 ஆயிரத்து 500 பேராசிரியர்களில் 1,900 காலி இடங்கள் இருந்த நிலையில், அதை சரிகட்ட ஒரே பேராசிரியர் பல கல்லூரிகளில் தில்லு முல்லு செய்து வேலை பார்த்து வந்தது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக அறப்போர் இயக்கம் எழுப்பிய குற்றச்சாட்டை வைத்து அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய விசாரணையில் இந்த ஆண்டு இணைப்புச் சான்றிதழ் பெற்ற கல்லூரிகளை சேர்ந்த 180-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், பல என்ஜினீயரிங் கல்லூரிகளில் போலி ஆதார் அட்டையை சமர்ப்பித்து முறைகேடாக பணி புரிந்தது போல் கணக்கு காட்டி இருப்பதை கண்டுபிடித்தனர்.

இந்த விவகாரம் விசுவரூபம் எடுத்த நிலையில் பேராசிரியர் நியமன விவகாரம் குறித்து விரிவான தகவல் அளிக்குமாறு, கவர்னர் ஆர்.என்.ரவி விளக்கம் கேட்டிருந்தார். உயர் கல்வித்துறையும் துணை வேந்தரிடம் விளக்கம் கேட்டுள்ளது. இதைத்தொடர்ந்து 3 பேர் கொண்ட குழுவை அரசு அமைத்துள்ளது. இதற்கிடையே அண்ணா பல்கலைக்கழகம் தனது ஆரம்பக்கட்ட விசாரணையில் கிடைத்த தகவல்களை அறிக்கையாக தயாரித்து பல்கலைக்கழக வேந்தராக உள்ள கவர்னருக்கு சமர்ப்பித்துள்ளது.

துணை வேந்தர் வேல்ராஜ்

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

போலி பேராசிரியர்கள் மூலம் மோசடி செய்த பொறியியல் கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். போலி பேராசிரியர்கள் மூலம் மோசடியில் ஈடுபட்டதாக 295 பொறியியல் கல்லூரிகள் சிக்கி உள்ளன. விளக்கம் கேட்டு 180 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. உரிய விளக்கம் அறிக்காத பொறியியல் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். போலி பேராசிரியர்கள் மூலம் மோசடி செய்த பொறியியல் கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். மோசடியில் ஈடுபட்டுள்ளதாக 972 பேராசிரியர்கள் முதற்கட்டமாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஒரே பேராசிரியர் பல்வேறு பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றுவது போல் மோசடி செய்துள்ளனர். மோசடியில் ஈடுபட்ட பேராசிரியர்கள் தொடர்ந்து பணியாற்ற தடை விதிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *