சிறுகதை

மொழி | ராஜா செல்லமுத்து

வாரத்தின் முதல் நாள் என்பதால் அந்த பிரதான வங்கியில் கூட்டம் பிதுங்கி வழிந்தது. எல்லோர் கையிலும் பாஸ் புத்தகம். செக், டிடி என்று வந்திருந்த அத்தனை பேர்களும் வரிசை கட்டிக் கொண்டு நின்றிருந்தார்கள். சமூக இடைவெளியை பலர் கடைப்பிடித்தாலும் அந்த வங்கியில் சமூக இடைவெளி சற்று சரிந்திருந்தது.

எல்லாரும் முகக் கவசம் போடுங்க. முகக்கவசம் இல்லாதவர்கள் வெளியே போங்க என்று விரட்டிக் கொண்டிருந்தார் அந்த வங்கியின் ஊழியர்.

சந்தையை போல சத்தம் அங்கு மேலோங்கி நின்று கொண்டிருந்தது.

நான் காலையிலேயே வந்துட்டேன். இன்னும் எனக்கு பணம் தரலே சார். என்னுடைய செக்க டெலிவரி பண்ணி குடுங்க சார்.

எனக்கு ஒரு டிடி கொடுங்க என்று ஆளாளுக்கு பேசிக் கொண்டிருந்தார்கள்.

அது ஒரு அரசு வங்கி போல இல்லாமல் ,காய்கறி மார்க்கெட் போல கலவரமாக இருந்தது.

ஒரு பெரியவர் அந்தச் சந்தடியில் வந்தார். ஏற்கனவே அவர் அனுப்பி வைத்த பெண்ணை பார்த்து என்னமா இன்னும் செக்க மாற்றி தரலயா ? என்று கேட்டார்.

அதற்கு அந்த பெண் இல்லை என்று தலையாட்டினாள்.

ஏன் இவ்வளவு லேட் பண்றாங்க. தெரியாத ஆளா இருந்தா பரவால்ல தெரிந்த ஆள் தானே? ஏன் இவ்வளவு நேரம் உட்கார வைக்கணும் ? என்று அவர் பாட்டுக்கு பேசிக்கொண்டிருந்தார்.

ஏன் தெரியுமா? முன்னாலே வந்தவங்க; பின்னால் வந்தவன் என்ற சீனியாரிட்டி இல்லையா? யாராயிருந்தாலும் உட்கார்ந்து தான் ஆகணும் என்று ராஜா அத்தனையும் கவனித்துக் கொண்டு பேசினான்.

அந்தப் பெரியவர் அந்தப் பெண்ணை கையோடு அழைத்து சென்றார். வங்கி அலுவலர்கள் அந்தப் பெரியவரை வியப்பாக பார்த்துக் கொண்டிருந்தார்கள். அந்தப் பெரியவரின் செய்கையை வங்கிக்கு வந்திருந்த வாடிக்கையாளர்களும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அனுமதியின்றி யாரும் உள்ளே நுழையக் கூடாது என்று எழுதப்பட்டிருந்த வாசகத்தை அவர் மதிக்கவில்லை. அந்தப் பெண்ணைக் கூப்பிட்டு கொண்டு சரசரவென்று உள்ளே நுழைந்தார்

ஏங்க…. நாம எல்லாம் மனுசனா தெரியலையா? அவர் பேசாம கூட்டுட்டு போறாரு என்று சிலர் அங்கே முணுமுணுத்தார்கள்.

சார்… இந்தப் பொண்ண நா அனுப்பி வைத்து இரண்டு மணி நேரம் ஆச்சு. ஏன் பணம் கொடுக்காம உட்கார வச்சு இருக்கீங்க என்று கேட்டார்.

கூட்டமா இருக்கு ; உட்கார்ந்து தான் ஆகணும் என்று ஒரு வங்கி ஊழியர் சொல்ல

என்ன தெரிந்த ஆள் தான். அங்க தெரியாத ஆளா இருந்தா பரவால்ல,: உட்கார வைக்கலாம் என்று முன்னால் சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தார் அந்தப் பெரியவர்.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த ஒரு வாடிக்கையாளர்

ஹலோ தெரிஞ்சவங்க தெரியாதவங்க, அப்படி எல்லாம் கிடையாது. யாரு முன்ன வர்றாங்களோ அவர்களுக்குத் தான் முன்னுரிமை. க்யூல நில்லுங்க என்று அதட்டினார் அவர்.

இதை கேட்டுக்கொண்டிருந்த பெரியவர்,

ஹலோ நீங்க சும்மா இருங்க. எங்களுக்கு தெரியும் என்று அந்தப் பெரியவர் சொன்னார்.

வங்கி அவர் வீட்டு அடுப்படி போல என்று சிலர் முணுமுணுத்தனர்.

அவர் நெற்றியில் குங்குமக்கோடு இருந்தது. வேட்டியை லங்கோடு போல கட்டிக் கொண்டிருந்தார். அவருடைய செய்கையை பார்த்த அவர் உடையை பார்த்த சிலர் பேசப் பயந்தார்கள் அந்தப் பெரியவர் எதை எதையோ பேசி சாதித்துவிட்டு தான் வெளியே வந்தார்.

என்ன அநியாயமா இருக்கு. நாம் எல்லாம் சும்மாவா பேங்க்ல உட்கார்ந்து இருக்கம் என்று சிலர் மட்டும் பேசினார்கள்.

அப்போது ஒரு வெள்ளந்தி மனிதர்

என்ன சார் நான் வந்து காலிலிருந்து உட்கார்ந்து இருக்கேன். எனக்கு என்னன்னு கேக்க மாட்டேங்கறீங்க? இந்த செக்குக்கு பணம் கொடுங்க என்று அவர் கேட்டார்.

ப்ளீஸ் வெயிட். நோ டைம். யூகோ சிட் ஐ கால் யு. அண்ட் யூ கன் கலெக்ட் யூவர் மணி” என்று ஆங்கிலத்தில் பேசினார் தமிழ் தெரியாத ஒரு வங்கி ஊழியர்.

என்னய்யா பேசுற. எனக்கு ஒன்னும் புரியலை என்றார் அந்தப் பெரியவர்.

ஹலோ சிட். ஐ கால் யு அண்ட் கலெக்ட் யுவர் மணி என்று மறுபடியும் ஆங்கிலத்தில் பேச அந்த வெள்ளந்தி மனிதருக்கு ஒன்றும் புரியவில்லை.

அந்த மொழி தெரியாத மனிதர் பேசிய வார்த்தையை கேட்டு அங்கிருப்பவர்கள் சிரித்தார்கள். அந்த ஆங்கில பேச்சு இந்த வெள்ளந்தி மனிதனுக்குமான உரையாடல் வேறு வேறாக இருந்தது.

அவர் ஆங்கிலத்தில் பதில் சொல்லிக் கொண்டிருந்தா.ர் வெள்ளந்தி மனிதர் தமிழில் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார். இரண்டு பேருக்குமான இடைவெளி எங்கேயோ இருந்தது. அப்போது அந்த ஆங்கிலம் பேசிய ஊழியரின் ஆங்கிலத்தை அங்கிருந்த ஒரு பெண்மணி மொழிபெயர்த்தார்.

ஐயா உங்கள் அங்க உட்கார சொல்றாரு. அப்புறமா கூப்பிட்டு பணம் தருவாங்க. நீங்க உட்காருங்க என்று சொன்னார்.

இதை முதலிலேயே சொல்ல வேண்டியதுதானே என்று அவர் நெஞ்சு நிமிர்த்தி பதில் சொன்னார் .

அப்போது அங்கே நின்றுகொண்டிருந்த ராஜாவுக்கு சிரிப்பு வந்தது.

என்ன கொடுமை தமிழ்நாட்டில தமிழ்மொழி தெரிஞ்ச தமிழனை வேலைக்கு போடாம, வேற மொழியில போட்டிருக்கிறாங்க; படிச்சவங்க ஓகே. படிக்காதவங்க எப்படி பேச முடியும். இந்த அறிவு கூட இவங்களுக்கு இல்லையா என்று ராஜாவும் நண்பரும் பேசிக் கொண்டிருந்தார்கள்.

அந்த வெள்ளந்தி மனிதர் மேலேயும் கீழேயும் பார்த்துக் கொண்டிருந்தார் .

அந்த ஆங்கிலம் பேசுபவன் மறுபடியும் ஒரு நபரை பார்த்து பேசினார்.

வாட் டூ யு வாண்ட் டு யு ? என்று கேட்க

புரியலை என்றார் ஒரு தமிழ் பேசும் தமிழன் .

ஒய் ஆர் யூ ஸ்டாண்டிங் ஹியர் ? என்று அந்த ஆங்கிலம் பேச

இதைக் கேட்வர் திருதிருவென விழித்தார்.

அந்தத் தமிழ் பேசும் மனிதன் இல்லைங்க. எனக்குப் புரியல என்று சொல்ல

வாட் டூ யூ வான்ட் என்று மறுபடியும் ஆங்கிலத்தில் கேட்டான்.

நான் இப்பதான் வந்தேன் என்று அந்த வெள்ளந்தி மனிதர் சொல்ல , இரண்டு பேருக்குமான உரையாடல் நீட்டித்துக் கொண்டே சென்றது.

இதை கவனித்த வாடிக்கையாளர்கள் சிரிப்பதா? தமிழ்நாட்டில் தமிழ் தெரியாத ஊழியர்களை பணியில் அமர்த்தியது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பதை நினைத்து வருந்துவதா? என்று தெரியாமல் வருத்தத்தில் அங்கே பேசிக்கொண்டிருந்தார்கள்.

அந்த ஆங்கிலம் பேசும் ஊழியர் பேசியதை தமிழ் பேசும் ஒரு தமிழ் பெண் தமிழ் படுத்தி அந்த வெள்ளந்தி மனிதரிடம் சொன்னார்.

இன்னொரு தமிழ் பேசும் மனிதரிடம் சொன்னார். எனக்கு புது பாஸ்புக் வேணும் அதுதான் நிக்கிறேன் என்று அந்த தமிழ் பேசும் மனிதர் சொல்ல

அந்த வங்கியில் குழப்பம் குடிகொண்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *