செய்திகள்

மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து – நடராசனுக்கு சென்னையில் சிலை

Makkal Kural Official

ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை, ஜன.25–

மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து – நடராசன் ஆகிய இருவருக்கும் சென்னை எழும்பூர் தாளமுத்து – -நடராசன் மாளிகை வளாகத்தில் திருவுருவச் சிலை நிறுவப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (25–ந் தேதி) தமிழ்மொழி தியாகிகள் நினைவு நாளையொட்டி, சென்னை, மூலக்கொத்தளத்தில் அமைந்துள்ள மொழிப்போரின் வெற்றி வெளிச்சத்திற்கு ஒளிவிளக்குகளாய் நின்று உயிர்துறந்த தாளமுத்து – நடராசன் ஆகியோரின் நினைவிடம் 34 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டு திறந்து வைத்தார். 1938–ம் ஆண்டு மதராஸ் மாகாணத்தின் அப்போதைய முதலமைச்சரான ராஜாஜி, தமிழ்நாட்டு மாணவர்கள் இனி இந்தி கட்டாயமாக கற்க வேண்டுமென்று வெளியிட்ட அறிவிப்பினை எதிர்த்து, 27.2.1938 அன்று காஞ்சிபுரத்தில் நடைபெற்ற முதல் இந்தி எதிர்ப்பு மாநாட்டில், தாய்மொழியை காக்க இந்தி திணிப்பினை எதிர்க்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டு அதனடிப்படையில், பெரியார், மறைமலை அடிகள், திரு.வி.க., நாவலர் சோமசுந்தர பாரதி, அண்ணா போன்ற தமிழறிஞர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் தாய்மொழி காக்க களம் கண்டனர்.

அப்போது, 14 வயதே ஆன பள்ளி மாணவர் கலைஞர், திருவாரூர் வீதியில் தன்னுடன் பயிலும் மாணவர்களை அணி திரட்டி, “கயல், வில், புலி” சின்னம் பொறித்த தமிழ்க் கொடியினை கையிலேந்தி,

“ஓடி வந்த இந்திப் பெண்ணே கேள்! நீ தேடி வந்த கோழையுள்ள நாடிதல்லவே!” என்று, இந்தித் திணிப்பு எதிர்ப்பு போர்ப்பரணி பாடி, தமிழ்மொழி காக்கும் போர் வீரராய் முன்வந்தார்.

அன்னைத் தமிழ் காக்க, முதற்கட்ட இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு, சிறை சென்ற நடராசன் 15.1.1939 அன்றும்: தாளமுத்து 11.3.1939 அன்றும் வீர மரணம் அடைந்தனர். தமிழக மக்களின் தொடர் போராட்டத்தினால், அரசு 21.2.1940ல் கட்டாய இந்தி திணிப்பை கைவிடும் முடிவுக்கு வந்தது.

“செந்தமிழுக்கு தீங்கொன்று வந்துற்ற பின்னும் இத்தேகம் இருந்தென்ன லாபம்?” என, தனக்குத் தானே கேள்வி எழுப்பிக் கொண்ட அன்னைத் தமிழின் அருந்தவப் புதல்வர்களாம் கீழுப் – பழூவூர் சின்னச்சாமி, விருகம்பாக்கம் அரங்கநாதன். கோடம்பாக்கம் சிவலிங்கம், மாயவரம் சாரங்கபாணி. விராலிமலை சண்முகம், கீரனூர் முத்து, பீளமேடு தண்டபாணி, சத்தியமங்கலம் முத்து, அய்யம்பாளையம் ஆசிரியர் வீரப்பன் தீக்குளித்தும், துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் ராஜேந்திரன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோரின் தீரத்தை நினைவு கூர்ந்திடும் நாள் தான் ஜனவரி 25–ம் நாள் ஆகும்.

இந்தியைத் திணிக்க முயன்றோருக்கும், முயல்வோருக்கும் அச்சத்தை உருவாக்கிவிட்டுச் சென்றுள்ள நடராசன், – தாளமுத்து ஆகிய இருவரின் தியாகத்தைப் போற்றும் வண்ணம் சென்னை, மூலக்கொத்தளத்தில் தந்தை பெரியாரால் திறந்து வைக்கப்பட்ட நினைவிடம் தற்போது சிறப்பான முறையில் புதுப்பிக்கப்பட்டு, தமிழ்மொழித் தியாகிகள் நினைவு நாளான இன்று முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது.

முதலமைச்சர் இன்றையதினம் மொழிப்போரின் வெற்றி வெளிச்சத்திற்கு ஒளிவிளக்குகளாய் நின்று உயிர்துறந்த தாளமுத்து – நடராசன் மற்றும் மொழிப்போர் தியாகி, சமூகப் போராளி எஸ். தர்மாம்பாள் ஆகியோரது திருவுருவப் படங்களுக்கு மலர் தூவியும், அவர்களின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்தும் மரியாதை செலுத்தினார்.

சிலைகள் அமைக்கப்படும்

தாளமுத்து – நடராசன் ஆகிய இருவருக்கும் சென்னை எழும்பூரில் உள்ள தாளமுத்து – -நடராசன் மாளிகை வளாகத்தில் திருவுருவச் சிலை நிறுவப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மு.பெ. சாமிநாதன், பி.கே. சேகர்பாபு, மேயர் ஆர். பிரியா, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசு செயலாளர் வே.ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் இரா.வைத்திநாதன், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ந.அருள், அரசு உயர் அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர் என்று அரசு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *