செய்திகள் நாடும் நடப்பும்

‘மை’ தொட்டு எழுதியது முதல் தொடரும் மக்கள் குரலின் பயணம்…ஆர்.முத்துக்குமார்


உங்கள் கையில் தவழும் இந்த இதழ் ‘மலர் 50, இதழ் 1’ வரலாற்று சிறப்பு மிக்க ஒன்று!

எம்.சண்முகவேல் (எம்.எஸ்) முதலாளி என்று இன்றி உழைக்கும் தொழிலாளி என்ற ஒரு சாமானியனால் துவங்கப்பட்டது.

அவர் கண்ட ‘மக்கள் குரல்’ ஒரு பத்திரிக்கை என்று ஒரு வட்டத்தில் சேர்த்து விட முடியாது! இது ஓர் இயக்கமாகும்.

செய்திகளை தரும் தளம் மாறி போனாலும்… செய்திகளின் தரம் மாறிவிடக்கூடாது என்பது எம்.எஸ். எங்களுக்கு சொல்லிக் கொடுத்த மிகப்பெரிய பாடமாகும்.

1973ல் துவங்கிய நாளில் அச்சக்கோர்ப்பு, ரோட்டரி அச்சு இயந்திரம், பேனாவை மை பாட்டிலில் தொட்டு எழுதும் முறை இருந்தது.

1980களில் அன்றைய ஸ்டீரியோ முறை அச்சு முறைக்கான பிளேட் என மாற்றம் கண்ட போது எம்.எஸ். மக்கள்குரலுடன் ‘அலிபாபா’ என்ற மாதம் இருமுறை வெளிவந்த இதழை வண்ணமயமாய் கொண்டு வந்தார். கூடவே மாதாந்திர நாவல் புத்தகமும் ‘நவரத்தினம்’ என்ற பெயரில் வெளிவந்தது.

1982ல் நியூஸ் டுடே என்ற ஆங்கில மாலை இதழையும் அவரது நெருங்கிய நண்பரும் எழுத்துலக ஜாம்பவானுமான டி.ஆர்.ஆரை ஆசிரியர் பொறுப்பில் அமர்த்தி துவங்கினார்.

பின்னர் கால சக்கர ஓட்டத்தில் கணினியுக தொழில்நுட்பங்கள் பூக்க ஆரம்பித்த நாள் முதலாய் எங்கள் அச்சுப் பிரிவும், அச்சக பிரிவுகளும் பல்வேறு மாற்றங்களை கண்டது, அதை உடனுக்குடன் எம்.எஸ். செயல்படுத்திய வேகம் தேசிய பத்திரிக்கைகளை கூட அசர வைத்தது.

1995ல் எங்கள் குழுமத்தில் இருந்து ‘டிரினிட்டி மிரர்’ ஆங்கில நாளேடும் வெளிவர வழி வகுத்தார்.

உடனுக்குடன் செய்திகள் தமிழகம் எங்கும் சென்று சேர்ந்திட சென்னை மட்டுமின்றி கோவையிலும், மதுரையிலும் அச்சகப் பிரிவுகளையும், அங்கேயும் சிறு ஆசிரியர் குழுமத்தையும் ஏற்படுத்தி செயல்பட வைத்தார்.

காலத்தின் கட்டாயமாய் 2007–ல் தனது 80வது வயதில் எம்.எஸ். காலமானார்.

அவரது கனவும், கடும் உழைப்பால் வளர்ந்து விட்ட மக்கள் குரல், டிரினிட்டி மிரர் இன்றும் அவர் காட்டிய வழியில் சிறப்பாகவே நடைபோட்டு வருகிறது.

அவர் ஆசைப்பட்டது எல்லா செய்திகளையும் பாமரன் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் தலைப்புகள் தந்து அவர்களிடம் கொண்டு செல்வதே!

அதையே வேத வாக்காக கொண்டு அவரால் உருவான ஆசிரியர் குழுமம் இன்றும் எனக்கு உறுதுணையாக இருக்க, உங்களுக்கு செய்திகளை ரசித்து படிக்க தரமாய் உருவாக்கி அச்சடித்து உரிய நேரத்தில் உங்களிடம் கொண்டு சேர்த்து வருகிறோம் .

தமிழ் மீது அபிமானம் உள்ளவர்களுக்கு தினமும் ஒரு சிறுகதை பிரசுரித்து வருகிறோம். எங்கள் நோக்கம் செய்திகளுடன் உங்கள் சிந்தனா திறனுக்கு பயிற்சியாக இருக்கவே அவை!

பெரிய தொழில் குழுமங்கள் ஊடக துறையில் சாதித்து கொண்டு தான் இருக்கிறார்கள், பலர் கையை சுட்டுக் கொண்டு வெளியேறியும் உள்ளதை அறிவீர்கள்!

நாங்கள் எங்களுக்கென ஒரு அறிவுபூர்வ வாசகர்கள், ஆதரவு தரும் நட்பு வட்டம், என்றும் எங்களுக்கு ஊன்றுகோலாய் இருக்கும் விளம்பரதாரர்கள் ,,, நவீன தொழில்நுட்ப வல்லமையுடன் எங்கள் பயணம் புது தெம்புடன் தொடர்கிறது.

நல்ல செய்தி அதை உடனுக்குடன் உங்களுக்கு தருவதில் உறுதியாக இருக்கிறோம், அதுவே வாகர்களுக்கு எங்கள் 50 வது பிறந்த நாள் உத்திரவாதம்.


Leave a Reply

Your email address will not be published.