சிறுகதை

மைத்துனி |ஆவடி ரமேஷ்குமார்

“பொண்ணு கூட கொஞ்சம் தனியா பேசனும்” என்றார் மாப்பிள்ளை திவாகர்.

பெண் பார்க்கும் நிகழ்ச்சி இன்னும் முடியவில்லை.

அதற்குள் மாப்பிள்ளையிடமிருந்து இப்படி ஒரு கோரிக்கை வரவே ராஜகுரு நெளிந்தபடி சம்மதித்தார்.

மனைவியையும் மகள் சுப்ரியாவையும் பார்த்தார் ராஜகுரு .

தனியாக பேச ஏற்பாடாகியது.” நீங்க முதல்ல என்னை மன்னிக்கனும் சுப்ரியா. தரகர் காட்டிய உங்கள் போட்டோ பிடிச்சுப்போய் தான் இங்க வந்தேன். உங்களுக்கு ஒரு தங்கை இருக்கிறதா தரகர் சொன்னாரு. ஆனா தங்கையோட போட்டோவை காட்டல. இப்பத்தான் ஹால்ல மாட்டியிருந்த உங்க தங்கையோட போட்டோவை பார்த்தேன்; அதிர்ச்சியாகிட்டேன்.

‘‘என்னது அதிர்ச்சியாகிட்டீங்களா?”

” ஆமாங்க. நான் காலேஜ்ல தேர்ட் இயர் படிக்கும் போது உங்க தங்கை எனக்கு ஜூனியர். அவரிடம் நான் என் லவ்வை முதன் முதலா புரபோஸ் பண்ணினேன். நிராகரிச்சிட்டாங்க. தொடர்ந்து அவங்க காதலை பெறனும்னு லவ் டார்ச்சர் கொடுத்தேன். அப்போது ஒரு நாள் உங்க தங்கை ,’ எனக்கு ஒரு அக்கா இருக்கா. அப்பா அம்மாவெல்லாம் ரொம்ப ஸ்ட்ரிக்ட். அவங்களுக்கு இந்த காதல் கத்திரிக்காயெல்லாம் பிடிக்காது. வெட்டிப் போட்டுடுவாங்க. ப்ளீஸ் என்னை விட்டுடுங்க’ னு கெஞ்சினாங்க. நானும் நான் டார்ச்சர் பண்ணினது நியாயமில்லைனு புரிஞ்சிட்டு அதோட அவங்களை விட்டுட்டேன். அதற்கு பிறகு எந்த பொண்ணையும் நான் விரும்பல. இப்ப நான் பேங்க் மேனஜரா இருக்கிறதால எங்கப்பா அம்மா சம்மதத்தோட உங்களை பெண் பார்க்க வந்திருக்கேன். வந்த இடத்துல உங்க தங்கச்சி யார்ங்கிறதை தெரிஞ்சுக்கிட்டேன். ஸோ நீங்க ‘ என்னை பிடிக்கலை’ னு சொல்லி இந்த சம்மதத்தை நிறுத்திடுங்களேன்.

ப்ளீஸ்!”

திவாகரி்ன் பேச்சு சுப்ரியாவுக்கு அதிர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியது.

என்ன பேசுவது,எப்படி பேசுவது என்று தெரியாமல் ,”பெரிய தப்பு ஒண்ணும் நடக்கலையே..அப்புறம் ஏன் இந்த சம்மந்தத்தை நிறுத்தச் சொல்றீங்க?” என்று கேட்டாள்.”

என்னங்க இது, உங்களை நான் கல்யாணம் பண்ணினால் உங்க தங்கச்சியை நான் ஒரு தலையாய் காதலிச்ச விசயம் எனக்கும் உங்க தங்கைக்கும் நெருடலாய் இருக்காதா.

.அதான் வேண்டாம்கிறேன்.இதை நான் என் அம்மா அப்பாகிட்ட சொல்ல முடியாத தர்மசங்கடத்தில் இருக்கிறேன்.

நீங்களே நாசூக்கா சொல்லி நிறுத்திடுங்களேன்.

ப்ளீஸ்!”தலையை பிடித்துக்கொண்டாள் சுப்ரியா.” ஏங்க, என்னாச்சு ஒண்ணுமே பேசமாட்டேங்கிறீங்க?” கேட்டார் மாப்பிள்ளை.

” அது வந்துங்க…நாங்க தரகர்கிட்ட ஒரு உண்மையை மறைச்சிட்டோம்.அதை உங்ககிட்ட மட்டும் இப்ப சொல்லிடறேன்.என் தங்கச்சியை நீங்க காதலிச்ச போது அதை மறுத்து உங்ககிட்ட பேசினாளே ஒரு வசனம்…அதை அவள் தேர்ட் இயர் படிக்கும் போது காற்றில் பறக்க விட்டுட்டாள்! “மீண்டும் அமைதியானாள் சுப்ரியா.

” அப்படினா…அதுக்கு என்ன அர்த்தம்?”” என் தங்கை இப்ப எங்க கூட இல்லைங்க”” என்னது இல்லையா..

ஓ..ஐ ஏம் வெரி சாரி!””

அய்யய்யோ…நீங்க வேற மாதிரி கற்பனை பண்ணிடாதீங்க.

அவள் தேர்ட் இயர் படிக்கும் போது வேறொருத்தனை லவ் பண்ணிட்டு மூத்தவள் நானிருக்கும் போது ஊரறிய கல்யாணம் பண்ண முடியாத நிலையில் வீட்டை விட்டு ஓடிப்போய்ட்டாள்.

இப்ப பாண்டிச்சேரியில புருஷன்,ரெண்டு குழந்தைகள் கூட நல்லா இருக்கிறாள். எங்க கூட போக்குவரத்து இல்ல. என் கல்யாணம் முடிஞ்சதும் அவளை வீட்டுக்கு கூப்பிட்டுக்கலாம்னு இருக்கோம். அவ்வளவுதான்.”” ஓ…ஐ…ஸீ..”” ஓ.கே. இப்ப சொல்லுங்க, நான் எங்கப்பா அம்மாகிட்ட என்ன சொல்லனும்?.. உங்களைப் பிடிக்கலைனா… இல்லே.. அழகான தங்கமான மாப்பிள்ளை; எனக்கு ரொம்ப பிடிச்சுப்போச்சு; கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க .அப்படின்னா? “சட்டென்று சுப்ரியாவின் கைகளை பிடித்த திவாகர்,” உங்களை இழக்க எனக்கு இப்ப மனசு வரலைங்க” என்றார்.

” எனக்கும் தான்!” என்றாள் சுப்ரியா.

இருவர் கரங்களும் இணைந்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *