செய்திகள்

மே 5–ம் தேதி வணிகர்கள் சங்க பேரமைப்பு மாநில மாநாடு

சென்னை, ஏப்.25

ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் மே 5 ம் தேதி நடைபெறும் வணிகர் சங்க மாநில மாநாட்டில் வணிகர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கூறியுள்ளார்.

இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

வணிகர்கள் முழுமையாக ஊதியமில்லா அரசு சேவகர்கள் என்பதை மத்திய மாநில அரசுகள் உணர்ந்து, வணிகர்களை இழிவுபடுத்தும் தண்டனை மற்றும் அபராதங்கள் முழுமையாக களைத்திட பேரமைப்பு உறுதி கொண்டிருக்கிறது.

மாநிலத்தில் எந்தவொரு வணிகர்களுக்கும் குந்தகம் ஏற்படாமல் பாதுகாத்து மத்திய, மாநில வருவாய் பெருக்கத்திற்கு பேரமைப்பு முழு ஒத்துழைப்பை அளிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

பேரிடர் கால இழப்பீடுகள் ஏனைய விவசாயிகள், மீனவ மக்களுக்கு அளிக்கப்படுவதை போல், பாதிக்கப்பட்ட வணிகர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறது.

வணிக விரோத செயல்கள், சட்டங்கள் போன்றவற்றை மறுஆய்வு செய்து நீக்கிட வலியுறுத்தி பேரமைப்பின் 36 வது மாநில மாநாடு வெற்றி மாநாடாக நடத்திட அகில இந்திய வணிகர் சம்மேளன நிர்வாகிகள் சிறப்பு அழைப்பாளர்களாகவும், அண்டை மாநிலத்தின் ஏனைய வணிகர் சங்க நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கிடவும் சிறப்பு செய்திடவும் வருகை தர இருக்கிறார்கள்.

ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் காலை 9 மணிக்கு வணிகக் கொடி ஏற்றும் நிகழ்ச்சியுடன் துவங்கி இரவு 7 மணி வரை தொடர்ந்து மாநாடு நடைபெறும். மாநாட்டில் பங்கேற்கும் லட்சக்கணக்கான வணிகர்களுக்கு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வெளியூரிலிருந்து வரும் வணிகர்களின் வாகனங்கள் நிறுத்தும் வசதி மற்றும் இதர வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 36 வது மாநில மாநாடு, வீழ்ந்து கிடக்கும் வணிகச்சமுதாயம் எழுச்சி பெற உத்வேகத்துடன் செயல்பட அடித்தள மாக அமையும் என்பது உறுதி.

இம்மாநாட்டில் நீதியரசர் டாக்டர் ஜோதிமணி, விஞ்ஞானி டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை, ஆன்மீக வள்ளல் செ. ராஜேந்திரன், தொழிலதிபர் ஜெ.எம். ஆருண் மற்றும் தொழிலதிபர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர் என்றார்.

இந்தப் பேட்டியின் போது வி.கோவிந்தராஜுலு, ஏ.எம்.சதக்கத்துல்லா, கே.ஜோதிலிங்கம், வி.பி.மணி, ஆர். ராஜ்குமார், என்.டி.மோகன், ஆதி குருசாமி, எஸ்.சாமுவேல், என்.ஜெயபால், எம்.அமல்ராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *