செய்திகள்

மே 3-ந் தேதிக்கு பிறகு புதிய கட்டுப்பாடுகளுடன் ரெயில், விமான போக்குவரத்து

சென்னை, ஏப். 18

கொரோனா பாதிப்பின் காரணமாக நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு மே 3-ந்தேதியுடன் முடிவுக்கு வருகிறது.

ஊரடங்கின் காரணமாக பஸ், ரெயில், விமான போக்குவரத்து முற்றிலும் முடங்கி இருப்பதால், மக்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்ல முடியாமல் தவிக்கிறார்கள்.

மே 3-ந் தேதிக்கு பிறகு போக்குவரத்து தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றாலும் கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் ரெயில், விமான போக்குவரத்துகளில் சில புதிய கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படும் என்று தெரிகிறது.

3-ந் தேதிக்கு பிறகு ரெயில்கள் ஓடினாலும், முதலில் குறைந்த எண்ணிக்கையிலான ரெயில்களே இயக்கப்படும் என்றும், இரு நகரங்களுக்கு இடையே செல்லும் ரெயில்கள் மட்டும் இயக்கப்படும் என்றும், அவை இடையில் எங்கும் நிற்காமல் செல்லும் என்றும் கூறப்படுகிறது.

ரெயில் நிலையங்களுக்கு வரும் பயணிகள் அனைவருக்கும் உடல் வெப்ப பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இருக்கைகளில் பயணிகள் தள்ளித் தள்ளி அமரும் வகையில் ஏற்பாடு செய்வது பற்றியும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைக்கப்படமாட்டாது என்றும் கூறப்படுகிறது. பயணிகளை வழியனுப்ப வருபவர்கள ரெயில் நிலையத்துக்குள் நுழைய தடை விதிப்பது பற்றியும் பரிசீலிக்கப்படுகிறது.

விமானங்கள்…

இதேபோல் விமான நிலையங்களிலும் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட இருக்கின்றன.

3-ந் தேதிக்கு பிறகு விமான போக்குவரத்து தொடங்கினாலும் முதலில் சில நாட்களுக்கு குறைந்த எண்ணிக்கையிலான விமானங்களே இயக்கப்படும் என்றும், கூட்டத்தை தவிர்க்கும் வகையில் விமானங்களின் புறப்பாடு, வருகை நேரங்கள் மாற்றி அமைக்கப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

விமானங்களில் முழு அளவில் பயணிகள் ஏற்றிச் செல்லப்படமாட்டார்கள் என்றும், ஒரு இருக்கை இடைவெளி விட்டுத்தான் பயணிகள் அமர வைக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

இப்படி பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருக்கும் என்பதால், செலவை ஈடுகட்டும் வகையில் விமான கட்டணம் அதிகரிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்றும் தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *