செய்திகள்

மோட்டார் சைக்கிள் ஓட்ட ரூ.1 லட்சம்: ஏடிஎம் கொள்ளையன் வாக்குமூலம்

சென்னை, ஜூலை 1–

ஸ்டேட் பேங்க் ஏடிஎம் கொள்ளை வழக்கில் கைதான விரேந்தர் கொடுத்த வாக்குமூலத்தில், தன்னை மோட்டார் சைக்கிள் ஓட்ட 1 லட்சம் ரூபாய் தருவதாக அழைத்து வந்தனர் என்று கூறியுள்ளார்.

தமிழகத்திலுள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையங்களில் டெபாசிட் இயந்திரங்களில் ஒரு கும்பல், நூதன முறையில் சுமார் ரூ.45 லட்சம் கொள்ளையடித்தது அம்பலமானது. இந்த வழக்கில் அரியானாவை சேர்ந்த அமீர் என்பவர் கடந்த 24ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வீரேந்தர் என்பவர் கடந்த 26-ம் தேதி கைது செய்யப்பட்டார்.

4 நாட்கள் விசாரணை

டெல்லியில் கைது செய்யப்பட்ட வீரேந்தர் சென்னை அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சைதாப்பேட்டை சிறையில் அடைக்கப்பட்டார். அவரை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, தரமணி போலீசார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிமன்றம் வீரேந்தரை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தது.

அதன்படி சைதாப்பேட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்த வீரேந்தரை தரமணி காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில், மோட்டார் சைக்கிள் ஓட்ட, சம்பளம் கொடுப்பதாக கூறியதாலேயே தமிழ்நாட்டுக்கு வந்ததாக வீரேந்தர் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிள் ஓட்ட ஒரு லட்ச ரூபாய் சம்பளம் கொடுத்ததாகவும் கொள்ளை நடந்த அன்று அமீருடன் மோட்டார்சைக்களில் சென்றது, நான்தான் என்று அவர் ஒப்புக் கொண்டதாகவும் போலீசார் கூறியுள்ளனர். இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *