செய்திகள்

மோடி இந்துவா? இந்துத்துவவாதியா? காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி கேள்வி

லக்னோ, டிச. 19–

‘பிரதமர் நரேந்திர மோடி இந்துவா? இந்துத்துவவாதியா?’ என்று காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் அடுத்த ஆண்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதை முன்னிட்டு அங்கு அரசியல் கட்சிகளின் தேர்தல் பரப்புரை சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. இதனையொட்டி, அமேதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, அமேதி மக்களின் இதயங்களில், முன்பு போலவே எனக்கு இடம் உள்ளது. நான் எனது முதல் தேர்தலில் போட்டியிட்ட நகரம் அமேதி. அமேதி மக்கள் எனக்கு அரசியலைப் பற்றி நிறைய கற்றுக்கொடுத்துள்ளனர். அதற்காக அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “ஒரு இந்து தன் வாழ்நாள் முழுவதும் உண்மையின் பாதையில் நடப்பார். எல்லா சவால்களையும் எதிர்கொள்வார். அவர் தனது பயத்தை ஒருபோதும் கோபமாகவோ, வெறுப்பாகவோ காட்ட மாட்டார். ஆனால் ஒரு இந்துத்துவவாதி அதிகாரங்களை தக்கவைத்துக் கொள்வதற்காக பொய்களை மட்டுமே சொல்வார். ஒரு இந்துவின் பாதை சத்தியாகிரகம் என்று மகாத்மா காந்தி கூறியிருக்கிறார்.

இந்துவா? இந்துத்துவவாதியா?

ஒரு இந்துத்துவவாதி கங்கையில் தனிமையாகப் புனித நீராடுவார். ஆனால் ஒரு இந்து கோடிக்கணக்கான மக்களுடன் சேர்ந்துதான் புனித நீராடுவார். நரேந்திர மோடி நான் ஒரு இந்து என்று சொல்லிக் கொள்கிறார். ஆனால், அவர் என்றைக்கு உண்மையைப் பாதுகாத்தார். அப்படியென்றால் அவர் இந்துவா? இந்துத்துவவாதியா? என்பதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.

மேலும், பிரதமரின் சில முடிவுகளால் நடுத்தர மக்கள் மற்றும் ஏழை மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். இதன் விளைவாக பெரிய அளவிலான வேலைவாய்ப்பின்மையும் ஏற்பட்டது. பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி., கொரோனா நெருக்கடியின் போது எந்த உதவியும் இல்லாதது ஆகியவை இந்தியாவில் வேலையின்மைக்கான முக்கிய காரணங்களாக உள்ளன என்று பிரதமர் மோடியை, ராகுல்காந்தி சாடினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *