செய்திகள்

மோடியை விமர்சித்த மாணவரின் தகுதி நீக்கம்: டெல்லி உயர்நீதி மன்றம் தடை

டெல்லி, செப். 11–

மோடியின் ஆட்சியை விமர்சிக்கும் வகையில் பல்கலைக்கழக வளாகத்திற்குள் பக்கோடா விற்ற மாணவர்களுள் ஒருவரான இந்திய தேசிய மாணவர் சங்க (NSUI) வேட்பாளர் விகாஸை தகுதி நீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவுக்கு டெல்லி நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இந்தியாவின் வேலைவாய்ப்பு அதலபாதாளத்தில் சென்றுகொண்டிருப்பது குறித்து எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பியபோது, பக்கோடா விற்பதுகூட ஒரு வேலைவாய்ப்புதான் என்று பிரதமர் மோடி கூறியிருந்தார். இதையடுத்து நாடு முழுவதும் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், எதிர்க்கட்சியைச் சேர்ந்தோர் மோடி பக்கோடா என்றும் அமித் ஷா பக்கோடா என்றும் கடைகள் போட்டு தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். மாணவர்களின் இந்த நடவடிக்கைகளுக்கு நாடு தழுவிய ஆதரவு இருந்தது. ஜேஎன்யூ வளாகத்திலும் விகாஸ் யாதவ் மற்றும் அவரின் இரண்டு நண்பர்களும் பக்கோடா விற்பனை செய்தனர். இதற்காக அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

தகுதி நீக்கத்துக்கு தடை

இந்த நிலையில், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் தேர்தலில் விகாஸ் யாதவ் போட்டியிட விண்ணப்பம் செய்திருந்தார். மேற்கூறிய நிகழ்வைக் காரணம் காட்டி, மாணவர் சங்கத் தேர்தலில் போட்டியிடத் தாக்கல் செய்யப்பட்ட விகாஸின் விண்ணப்பத்தைப் பல்கலைக்கழகத்தின் குறைதீர் பிரிவு தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை நேற்று விசாரித்த நீதிபதி சித்தார்த் மிர்துல், மாணவரின் விண்ணப்பத்தை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவுக்குத் தடை விதித்தார்.

விண்ணப்பம் தகுதி நீக்கப்பட்டதற்கான புகார் தொடர்பாக சம்பந்தப்பட்ட மாணவருக்குத் தகவல் தெரிவிக்கவில்லை என்று கண்டனம் தெரிவித்த நீதிபதி, “விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை மாணவரிடம் தெரிவிக்கவில்லை என்றால் அவர் எப்படிப் பதிலளிப்பார்? எது தொடர்பாக பதிலளிப்பார்?” என்றும் கேள்வி எழுப்பினார்.

ஜேஎன்யூ தலைமைச் செயலர் மற்றும் பல்கலைக்கழகக் குறைதீர்ப்பு பிரிவு செயலாளர் ஆகியோருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *