…
வெப்பம் கொதிக்கும் வெயில் வேளையிலும் நடுநடுங்கும் குளிர்காலத்திலும் எப்போதும் சட்டையின் மேல்பட்டனைப் போட மாட்டான் வைத்தீஸ்வரன் .
அது சின்ன வயதிலிருந்து அவனுக்குப் பழக்கமாகிப் போனதால் மேல் பட்டனை போடுவதை அவன் விரும்புவதில்லை.
பள்ளி செல்லும் போது கூட மேல்பட்டனை அவிழ்த்து விட்டுத் தான் போவான்.
மேல் பட்டனப் போடு அத திறந்து விடக்கூடாது என்று ஆசிரியர்கள் சொன்னதும் பேச்சுக்காக மட்டுமே மேல் பட்டனை போட்டுவிட்டு பள்ளியை முடித்து வெளியேவந்ததும் மேல் பட்டனை அவிழ்த்து விட்டு விடுவான்.
ஏன் எல்லாரும் மேல்பட்டன பாேடச் சொல்றாங்க ஏன் சட்டையில மேல் பட்டன போடணும்னு சொல்றாங்க. அத போடாம இருக்கிறது என்ன தப்பு ? என்று சக நண்பர்களிடம் கேட்டான் வைத்தீஸ்வரன்.
அது ரவுடி மாதிரி இருக்கும். அதுதான் மேல் பட்டனை போட சொல்றாங்க என்று நண்பன் சொன்னபோது
ரவுடிக்கும் மேல்பட்டன போடுறதுக்கும் என்ன சம்பந்தம் இருக்கு? எனக்கு மேல் பட்டனைத் திறந்து விடுறதில்ல ஒரு வசதி இருக்கு. சட்ட டைட்டா இல்ல. அது மட்டும் இல்லாம கழுத்து வரைக்கும் பட்டன போட்டுட்டு காத்து உள்ள நுழையாம இருக்கறதுல எனக்கு விருப்பமும் இல்ல. அதனால தான் நான் மேல் பட்டன போடுறதில்ல. ஆனா எல்லாரும் ஏன் மேல் பட்டனைத் திறந்து விட்டிருக்கேன்னு கேட்டுக் கேட்டு பட்டன் போடச் சொல்றாங்க. அதுதான் எனக்கு என்னன்னு புரியல என்றான் வைத்தீஸ்வரன்.
வீரம்ங்கிறது நெஞ்சில இருக்கணும் அப்படின்னு சொல்லுவாங்க. அந்த நெஞ்சைத் திறந்து காட்டும் போது, நான் வீரமா இருக்கேன்; என் கூட யாராவது மோதுவதற்கு தயாரா ? அப்படின்னு கேட்கிற மாதிரி இருக்குமாம். அதனால் தான் எல்லாரும் மேல் பட்டனைப் போடுங்கன்னு சொல்றாங்க என்று மறுபடியும் மேல்பட்டன் பற்றிய அறிவுரைகள் வைத்தீஸ்வரன் காதில் வந்து விழுந்தன. இதையெல்லாம் ஏற்றுக்கொள்ள மறுத்த வைத்தீஸ்வரன் மேல் பட்டனை திறந்து விடறதும் மேல் பட்டன போடுறதும் ரவுடித்தனத்திற்கும் சாதாரண குணத்துக்கும் சம்பந்தம் இல்ல. அதுக்கும் இதுக்கும் முடிச்சுப் போட்டு பேசுறது ரொம்பத் தப்பு என்றான் வைத்தீஸ்வரன்.
நீ என்ன சொன்னாலும் கேட்க மாட்ட. உயர் அதிகாரிககிட்ட போகும்போது பெரிய மனுஷனுங்கள பாக்கும் போதும் வயசுல பெரியவங்க கிட்ட பேசும்போதும் மேல்பட்டன திறந்து விட்டு பேசுறது அவ்வளவு மரியாதை இல்ல. அது மரியாதைக் குறைவு என்று வைத்தீஸ்வரன் சொன்னான்.
அதை முற்றிலும் ஏற்றுக்கொள்ள மறுத்த வைத்தீஸ்வரன், நண்பர்கள் சொன்னதை ஒரு நாள் கூடக் கடைப்பிடித்தது கிடையாது.
மேல்பட்டனை திறந்து விட்டுத் தான் திரிவான் .பள்ளி, கல்லூரிகளில் படித்த போது ஆசிரியர்களின் வார்த்தைக்கு எதிர்வார்த்தை பேசாமல் மேல்பட்டனைப் போட்டிருந்தவன் பள்ளி, கல்லூரி நேரம் முடியவும் மறுபடியும் மேல்பட்டனைத் திறந்து விடுவான் .
அவனுக்கு அது தவறாகத் தோன்றவில்லை. நான் ஒன்னும் ரவுடி இல்ல. எளிய மனிதன் எனக்கு இந்த மேல் பட்டன திறந்து விடறது பிடிச்சிருக்கு. அவ்வளவுதான் என்று மேல் பட்டன் திறந்ததைப் பற்றி பேசுபவர்களிடம் பதில் சொல்வான் வைத்தீஸ்வரன்
ஒரு முறை அரசியலில் முதிர்ச்சி அடைந்த ஒரு பெரியவரைச் சந்திக்க அழைக்கப்பட்டான் வைத்தீஸ்வரன்.
பல பரிசோதனைகளுக்குப் பிறகு அந்த அரசியல் தலைவரை சந்தித்தான்.
இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள் .தலைமுதல் கால் வரை வைத்தீஸ்வரனை அளந்த அந்த அரசியல் தலைவர் நீங்க தான் இந்த தொகுதிக்கு சரியான வேட்பாளர் என்று வைத்தீஸ்வரனை இந்தத் தேர்தலில் நிற்க வைக்க முடிவு செய்தார் அந்த அரசியல் தலைவர். அதை வைத்தீஸ்வரனிடம் சொல்ல அவனும் ஆமோதித்தான்.
என்ன சார் இப்படி பண்ணிட்டீங்க ?அந்த வைத்தீஸ்வரன எதுக்கு நம்ம தொகுதியில நிக்க வச்சீங்க? என்று உடன் இருந்த அரசியல்வாதிகள் கேட்டபோது சிரித்துக் கொண்டே சொன்னார் அந்த அரசியல் தலைவர்
அந்தப் பையனோட தைரியம் எனக்குப் பிடிச்சிருக்கு. கூனிக்குறுகி, குனிஞ்சு கும்பிடு போட்டு ,வணக்கம் சொல்லி முதுகு வளஞ்சு வணங்கி வாழறவன விட இயல்பா உண்மையா என் கூட உட்கார்ந்து பேசினான் பாரு அந்த வைத்தீஸ்வரன். அவனுடைய நேர்மை துணிவு எனக்கு புடிச்சிருக்கு. அதுதான் அவன இந்தத் தேர்தல்ல நிக்க வச்சேன் என்று தலைவர் சொன்னபோது
இதைக்கேட்ட அரசியல்வாதிகளுக்கு ரொம்பவே வருத்தமாக இருந்தது.
நம்மளும் மேல்பட்டன அவுத்து விட்டிருந்தா நமக்குங் கூட ஒரு தொகுதி கெடச்சிருக்கும் பாேல கழுத்து பட்டன் வரைக்கும் போட்டுட்டு தலைவருக்கு விசுவாசமாக இருக்கிறோம்னு நாம நடந்து கிட்டது தப்பா போச்சு. இந்த மனுங்க எப்பவுமே இப்படித்தான் பணிவா இருக்கிற யாரையும் பிடிக்காது. திமிரா இருக்கிற ஆளுகளத் தான் பிடிக்குது. அதுவும் யாரையும் மதிக்காத குணம் இருக்கிற ஆட்களத் தான் பெரியவன் அப்படின்னு நினைக்கிறாங்க. அவனத்தான் நல்லவனென்று நினைக்கிறாங்க. வந்தான் ஒரு தொகுதியோட சீட்ட வாங்கிட்டான்; இதுதான் நேரம். என்று முணுமுணுத்துக் கொண்டார்கள் அரசியல்வாதிகள்.
தன்னை ஏன் அந்த அரசியல் தலைவர் தேர்ந்தெடுத்து ஒரு தொகுதியைக் கொடுத்திருக்கிறார் என்று விளங்காத வைத்தீஸ்வரனிடம்
உனக்கு சீட்டு கெடச்சதே நீ மேல் பட்டன திறந்து விட்டதால தான் என்று யாரோ ஒரு அரசியல்வாதி சொல்ல, இது கேட்டதும் வைத்தீஸ்வரனுக்கு சிரிப்பு பொங்கியது .
என்னடா இது ஒரு பக்கம் மேல் பட்டன் திறந்து இருக்கிறது ரவுடித்தனம் பிரச்சனைக்குரிய விஷயம்னு சொல்றாங்க. இன்னொரு பக்கம் துணிவு, தைரியமான ஆளு அப்படின்னு சொல்றாங்க. இதுல எதை நாம கடைபிடிக்கிறது? என்று நினைத்துச் சிரித்தான் வைத்தீஸ்வரன்.
அன்றிலிருந்து அந்த அரசியல் தலைவரிடம் சென்ற ஆட்கள் எல்லாம் மேல்பட்டனைத் திறந்து விட்டே அமர்ந்தார்கள்.
இதைக் கவனித்த ஒரு அரசியல்வாதிக்கு கோபம் வந்தது . நேரடியாகச் சொல்ல முடியாத அரசியல் தலைவர் தன்னுடைய உதவியாளரிடம் சொல்லி அனுப்பினார் .
பெரிய மனுஷங்கள சந்திக்கும் போதும் நம்ம விட வயசுல பெரியவங்கள சந்திக்கும் போதும் ரொம்ப மரியாதையா பவ்யமா இருக்கணும். நீங்க மேல் பட்டன திறந்து விட்டு உட்கார்ந்திருக்கீங்க. இது தப்பு . மேல் பட்டனை போடுங்க என்று அரசியல் தலைவரின் உதவியாளர் சொன்னபோது ‘
என்னடா இது? அப்படி இருந்தா அதுவும் தப்பு .இப்படி இருந்தா இதுவும் தப்பு. பெறகு எப்படித்தான் இருக்கிறது ? என்று குழம்பினார்கள் அங்கு இருந்த தொண்டர்கள்.அப்போது தலைவர் பேசுவது காதில் விழுந்தது:
‘‘ அதோ நேற்று வந்த வைத்தீஸ்வரனைப் பாருங்கள்’’
எதற்கு எப்போது மரியாதை தர வேண்டும் என்பதை நன்கு உணர்ந்திருக்கிறவன்தான் மனிதன்.
‘ அந்த வைத்தீஸ்வரனைப் பாருங்கள். அவனிடம் உள்ள உண்மை நேர்மை துணிச்சல்தான் நம் கட்சிக்கு வேண்டும் .’’ என்று தலைவர் பேசிக்கொண்டிருந்த போது ….
அனைவரும் வைத்தீஸ்வரனைப் பார்த்தார்கள்.
அங்கே வைத்தீஸ்வரன் தன் மேல்ச்சட்டைப் பட்டனைப்
போட்டுக்கொண்டு நெஞ்சை நிமிர்த்தி உட்கார்ந்திருந்தான்.
ஆச்சரியப்பட்ட தொண்டர்கள் தங்கள் கழுத்து வரை பட்டனைப் போட்டுக் கொண்டு தலைவர் பேச்சைக் கேட்டார்கள்.