செய்திகள்

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் மாசி தேரோட்டம்

விழுப்புரம், மார்ச் 19–

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயிலில் மாசி தேரோட்டத்தில் ஆயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தளமாக உள்ள அருள்மிகு அங்காளம்மன் கோயிலில் ஆண்டு தோறும் மாசி பெருவிழா நடைபெற்று வருவது வழக்கம். இந்த ஆண்டு மாசி பெருவிழா 12-ம்தேதி மகா சிவராத்திரி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் மயானக் கொள்ளை, தீ மிதி திருவிழா நடைபெற்றது.

7-ம் நாள் திருவிழாவான திருத்தேர் வடம் பிடித்தல் நேற்று மாலை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நேற்று காலை மூலவர் அங்காளம்மனுக்கு பால், தயிர், தேன், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்று, பல்வேறு மலர்களை கொண்டு அலங்காரம் செய்விக்கப்பெற்று, தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து உற்சவர் அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பல்வேறு மலர்களை கொண்டு அலங்காரம் செய்விக்கப்பெற்று, சரியாக பகல் 3 மணிக்கு அம்மன் அலங்கரிக்கப்பட்ட புதிய திருத்தேரில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பின்னர் அம்மனுக்கு மகா தீபாரதனை நடைபெற்றது தொடர்ந்து தேர் சக்கரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்துதொடர்ந்து 3.45மணிக்கு தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அறங்காவலர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர் . பக்தர்கள் அங்காளம்மா என பக்தி கரகோஷத்துடன் தேரினை வடம் பிடித்து இழுத்து வேண்டுதலை நிறைவேற்றினர். பக்தர்கள் தங்கள் விளை நிலங்களில் விளைந்த காய்கறிகள், தானிய வகைகள், நாணயங்கள் ஆகியவற்றை தேரின் மீது வீசி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

இதில் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், சென்னை, சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களிலிருந்தும், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.

விழுப்பும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவின் பேரில், செஞ்சி டி.எஸ்.சி. இளங்கோவன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கொரோனா நோய்தொற்று மீண்டும் வரவாய்ப்பு உள்ளதால் சிறப்பு பஸ்கள் இயக்க அனுமதிக்கவில்லை. இதனால் பக்தர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் மேல்மலையனூர் ராமு, கோவில் அறங்காவல் குழு தலைவர் சரவணன், அறங்காவலர்கள் செந்தில்குமார், தேவராஜ், ராமலிங்கம், செல்வம், வடிவேல், சந்தானம் மற்றும் மேலாளர் மணி உள்ளிட்ட கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *