மேல்மருவத்தூர், ஜன.2:
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆங்கிலப் புத்தாண்டு விழா மிக விமர்சையாக நடைபெற்றது. செவ்வாய்கிழமை காலை 3 மணி அளவில் மங்கல இசையுடன் நிகழ்ச்சியில் ஆதிபராசக்தி அம்மனுக்கு அபிஷேக ஆராதனையை ஆன்மீக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகார் துவக்கினார்.
அன்று மாலை 5 மணி அளவில் உலக நன்மைக்காகவும், இயற்கை வளம் பெறவும் கலச, விளக்கு, வேள்வி பூஜையை துணைத்தலைவர் ஸ்ரீதேவி ரமேஷ், அறங்காவலர் உமாதேவி ஆகியோர் கலந்து கொண்டு பிரதான யாக குண்டத்தில் கற்பூரமிட்டு வேள்வி பூஜையை தொடங்கி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து நேற்று காலை 9 மணி அளவில் ஆதிபராசக்தி சித்தர் பீடம் வந்தடைந்த ஆன்மிக இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளாருக்கு கர்நாடக மாநில பொறுப்பாளர்கள் வரவேற்பு அளித்தனர்.
மேலும் குரு பீடத்தில் உள்ள ஆன்மிக குரு பங்காரு அடிகளாரின் திருவுருவச் சிலைக்கு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடைபெற்றது.
ஆதிபராசக்தி அம்மனுக்கு
108 தமிழ் மந்திரங்கள் முழங்க பூஜை செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து 10 மணியளவில் அன்னதானம் வழங்கப்பட்டது.
அதில் துணைத்தலைவர்கள் கோ. ப. அன்பழகன், கோ. ப. செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டு அன்னதானம் வழங்கினர்.
மேலும் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் கடந்த டிசம்பர் 15ந் தேதி தொடங்கிய தைப்பூச சக்தி மாலை இருமுடி விழா பிப்ரவரி 10ந் தேதி வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதில் லட்சக்கணக்கான பக்தர்கள் தினமும் சக்தி மாலை இருமுடி செலுத்தி வருகின்றனர்.
இதில் புத்தாண்டு தினமான நேற்று கர்நாடக, ஆந்திரா, உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கருவறையில் உள்ள சுயம்பு அம்மனுக்கு அபிஷேகம் செய்து இருமுடி செலுத்தினர். மேலும் ஏராளமான பொதுமக்கள் ஆதிபராசக்தி அம்மனை தரிசித்தனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதான கூடத்தில் உணவு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கர்நாடக மாநில தலைவர் ராஜகோபால், செயலாளர் உதயகுமார் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.