செய்திகள் நாடும் நடப்பும்

மேலும் வளர்ச்சிக்கு அரசின் உதவிகரத்தை எதிர்பார்க்கும் திருப்பூர்


ஆர்.முத்துக்குமார்


தீபாவளி கொண்டாடிய தமிழகம் கடந்த சில வாரங்களாக கண்ட சாப்பிங் வர்த்தகத்தை உற்று கவனித்தாக வேண்டிய தருணம் இது. ஆடை, ஆபரண விற்பனை மிக அமோகமாக நடந்து முடிந்து விட்ட நிலையில் எந்த ரகம் அதிகம் விற்பனையாகி சாதித்தது என்பதை பார்த்தாக வேண்டும்.

சர்வதேச சந்தையில் நமது பாரம்பரிய ஆடை ஆபணரங்களுக்கு அங்கீகாரம் இருந்தும் சீனா, பங்களாதேஷ் நாடுகளின் ஆடை ஏற்றுமதி அளவுகளை விட நாம் பின் தங்கியிருக்கிறோம்.

உலக வர்த்தக மையத்தின் கட்டுப்பாடுகள் சிறுவரை பணியமர்த்த கூடாது என்பன துவங்கி பல்வேறு கட்டுப்பாடுகள் இருப்பதால் ஐரோப்பிய எல்லைகள் நமது ஆடை தயாரிப்புகள் விற்க முடியாத நிலை நிலவுகிறது.

தரம் மற்றும் ஆடைகள் வடிவமைப்புக்களை வாங்குவோர் நிர்ணயித்து வாங்க வந்தாலும் அதே தரத்தை நிரந்தரமாகத் தர முடிவதில்லை.

நமது ஆடை தயாரிப்பு முறைகளில் உள்ள குறைபாடுகளை அகற்ற மாநில அரசின் உதவிக்கரம் மிக அவசியம் தேவைப்படுகிறது.

ஆனால் திருப்பூர் உட்பட ஆடை ஏற்றுமதி மையங்களின் அடிப்படை தேவைகள் சரியான வகையில் அமைத்துத் தரப்படவில்லை.

புதிதாக தொழில் துவங்குவோருக்கு கட்டணமில்லா முத்திரைத் தாள் வசதி, தொழிலாளர்களுக்கு மான்யம், தொழில்கூடங்களின் கட்டுமானத்திற்கு வரிச்சலுகை, மின்சாரத்திற்கு சலுகை எனப் பல ஆண்டுகளாக கோரப்படும் கோரிக்கைகளுக்கு தமிழக அரசு செவி சாய்த்து உரிய வகையில் திருப்பூருக்கு தரவில்லை.

பல ஆயிரம் கோடி ரூபாய் ஏற்றுமதி வருவாய் ஈட்டிய திருப்பூர் மெல்ல தனது பின்னலாடை துறையில் ஆதிக்கத்தை கை நழுவ விட்டு வருகிறது.

முன்பு இலங்கை, பங்களாதேஷ் நாடுகளிடம் நமது வர்த்தகத்தை இழந்தோம்! தற்போது வடமாநிலங்களுக்கு விட்டு கொடுத்து வருகிறோம்.

பீகார், மகாராஷ்டிரம் போன்ற பகுதிகளில் இருந்து திருப்பூருக்கு வந்த தொழிலாளர்கள் சமீபமாக குஜராத், பீகாருக்கே திரும்பி செல்கிறார்கள். அங்கு படு நவீன பின்னலாடை தயாரிப்பு மையங்கள் ஏற்றுமதி வருவாயை குறி வைத்து இத்துறைக்கு ஊக்கம் தந்து வருகிறது.

குறிப்பாக பீகாரில் அரசு ஏன் நமது மாநில சாமானியன் தென் பகுதிக்கு குடும்பமாய் சென்று விடுகின்றனர்? என்பதை தீவிரமாக கண்காணித்து ஆய்வு அறிக்கை தயார் செய்துள்ளது.

நம் மாநிலத்தில் இதே தயாரிப்பு துறைகள் உருவாகி வளர்ந்தால் குடிப்பெயர மாட்டார்கள். குடிப்பெயர்ந்த பலரும் மீண்டும் திரும்பி வருவர் என்பதை உணர்ந்து எடுத்த முடிவால் பாதிப்பை எதிர்நோக்குகிறது திருப்பூர்.

பின்னலாடை நகரமான திருப்பூரில் மிக தேவையான ஒன்று மின்சாரம், அதை வைத்துத் தான் தயாரிப்பாளர்கள் தங்களது தயாரிப்புகளுக்கு விலை நிர்ணயம் செய்கின்றனர்.

ஆனால் சோலார், மின்சார நிலைக் கட்டணம், உச்ச பயன்பாட்டுக் கட்டணம் என்பன இத்தொழில் கூடங்களின் லாபத்தை பாதிக்க வைத்தும் வருகிறது.

தொடர்ந்து மானியங்கள், சலுகைகள் தருவதால் இத்துறை மீண்டு எழுந்து முழு திறன் கொண்டு செயல்படுமா? என்ற அச்சக் கேள்விக்கு பதில் திருப்பூர் சில மாதங்களுக்கு முன்பு ‘டெக்ஸ்டைல் எக்ஸ்சேஞ்ச்’ கூட்டமைப்பில் சேர்ந்திருப்பதை பார்க்கும்போது நமது திருப்பூர் ஆடைத் தயாரிப்புகளுக்கு சர்வதேச அங்கீகாரம் இருப்பதை சுட்டிக் காட்டுகிறது.

நெதர்லாந்தில் தலைமை இடம் கொண்ட இந்த அமைப்பில் அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், இங்கிலாந்து ஆகிய நாடுகள் கொண்ட 800 உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.

தொழில்நுட்ப பகிர்வு, சர்வதேச கண்காட்சிகள், பிற பயனுள்ள தகவல் திரட்டு நொடிப் பொழுதில் திருப்பூர் தயாரிப்பாளர்களுக்கு கிடைத்து விடுகிறது.

மேலும் திருப்பூரில் 50வது சர்வதேச பின்னலாடை கண்காட்சி பற்றிய பல தகவல்கள் இந்த டெக்ஸ்டைல் எக்ஸ்சேஞ்ச் வலைதளத்தில் பதிவாகியும் இருக்கிறது.

மொத்தத்தில் திருப்பூருக்கு தரப்படும் ஊக்கம் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு நேரடியாக தரப்படும் ஊக்கம் என்பதை மறந்து விடாமல் இந்த நெருக்கடியான சூழலில் திருப்பூரை தத்தளித்து கொண்டிருக்கையில் வேண்டிய உதவிக்கரத்தை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு தந்து வளர வைக்க தயங்கக் கூடாது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *