கொல்கத்தா, ஜூலை 10-
மேற்கு வங்கத்தில் கடந்த சனிக்கிழமை நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் காரணமாக 696 வாக்குச் சாவடிகளில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இந்நிலையில் மாநிலம் முழுவதும் 19 மாவட்டங்களில் 696 வாக்குச்சாவடிகளில் இன்று மீண்டும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இந்நிலையில் கூச்பெஹார் மாவட்டத்தில் மீண்டும் புதிதாக வன்முறை வெடித்துள்ளது.
நேற்றிரவு காங்கிரஸ் தொண்டர் ஒருவர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசி காங்கிரஸ் கட்சியினர் அட்டூழியம் செய்ததாகக் கூறி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் காங்கிரஸ் – திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
நாடியாவில் 89 வாக்குச்சாவடிகள், நார்த் 24 பர்கானாஸில் 46, உத்தர் தினாஜ்பூரில் 42, தெற்கு 24 பர்கானாஸில் 36, பூர்பா மேதின்பூரில் 31, ஹூக்ளியில் 29 என மொத்தம் 696 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. பாதுகாப்புக்காக 4 மத்தியப் படைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. அவர்களுடன் மாநிலப் போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக கடந்த சனிக்கிழமை நடந்த வன்முறையில் 19 பேர் உயிரிழந்தனர். இதில் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், சுயேட்சை தொண்டர்கள் அடங்குவர். 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு இந்த உள்ளாட்சித் தேர்தல் ஒரு முன்னோட்டமாகக் கருதப்படும் சூழலில் அங்கு வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.