செய்திகள் போஸ்டர் செய்தி

மேற்கு வங்கத்தில் ‘அம்பன் புயல்’ சேதங்கள்: ஹெலிகாப்டரில் சென்று மோடி பார்வையிட்டார்

Spread the love

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் 83 நாட்களுக்குப் பின் முதல் பயணம்

மேற்கு வங்கத்தில் ‘அம்பன் புயல்’ சேதங்கள்:

ஹெலிகாப்டரில் சென்று மோடி பார்வையிட்டார்

முதல் கட்ட நிவாரணமாக ரூ.1000 கோடி நிதி உதவி

 

கொல்கத்தா, மே. 22

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் 83 நாட்களுக்கு பின் டெல்லியிலிருந்து முதல் பயணமாக மேற்கு வங்கம் சென்றார் பிரதமர் மோடி. அம்பன் புயல் சேதங்களை ஹெலிகாப்டரில் இருந்தபடி பார்வையிட்டார். முதல் கட்ட நிவாரணமாக ரூ.1000 கோடி நிதி உதவி வழங்கப்படும் என மோடி அறிவித்தார்.

வடமேற்கு வங்களா விரிகுடா கடல் பரப்பில் உருவான அம்பன் என அழைக்கப்படும் சூப்பர் புயல் 20-ம் தேதி பிற்பகலில் மேற்கு வங்கம் வங்கதேச கடல் பகுதி வழியாக கரையைக் கடந்தது.

அம்பன் புயலால் மேற்கு வங்கத்தில் உள்ள வடக்கு பர்கானா, தெற்கு பர்கானா மாவட்டங்கள் முற்றிலும் தேசமடைந்துள்ளன. இந்த மாவட்டத்தை மறுகட்டமைப்பு செய்யும் அளவு புயல் கடும் சேதத்தை ஏற்படுத்திச் சென்றுள்ளது. கொல்கத்தா, கிழக்கு மிட்னாபூர், ஹராவிலும் புயலால் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

புயலால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கிறார்கள். பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு உள்ளன. புயலுக்கு இதுவரை 80 பேர் பலியாகியுள்ளனர் என மேற்கு வங்க அரசு தெரிவித்துள்ளது.

தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால், தொடர்ந்து மீட்புப்பணிகள் நடந்து வருகின்றன. சுமார் ரூ.1 லட்சம் கோடிக்கு தேசங்கள் ஏற்பட்டிருக்கலாம் என மேற்கு வங்க அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் அம்பன் புயல் பாதிப்புகளைப் பார்வையிடுவதற்காக பிரதமர் மோடி இன்று காலை கொல்கத்தா வந்தார்.

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் 83 நாட்களுக்குப் பின் பிரதமர் மோடி டெல்லியை விட்டு வெளி மாநிலத்துக்குச் சென்றுள்ளார். கடைசியாக கடந்த பிப்ரவரி 29ம் தேதி உத்தரப்பிரதேசம் பிரயாக்ராஜ், சித்ரகூட் நகரங்களுக்கு மோடி பயணம் சென்றார். அதன்பின் இப்போதுதான் டெல்லியை விட்டு வெளி மாநிலம் வருகிறார்.

அம்பன் புயல் பாதிப்பை பார்வையிடுவதற்காக இன்று காலை கொல்கத்தா விமான நிலையத்தில் வந்து இறங்கிய பிரதமர் மோடியை முதலமைச்சர் மம்தா பானர்ஜி, கவர்னர் ஜக்தீப் தன்கர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வரவேற்றார். அதன்பின்னர் அவர்களுடன் சேர்ந்து, ஹெலிகாப்டரில் அமர்ந்தபடி அம்பன் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி பார்வையிட்டார். அதன்பின்னர் நிவாரணங்கள் குறித்து முதலமைச்சர் மம்தா பானர்ஜி மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

ரூ.1000 கோடி நிதி

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பிரதமர் மோடி கூறுகையில்,

புயலால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்க மக்களுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கும்.

முதல் கட்ட நிவாரணமாக ரூ.1000 கோடி நிதி உதவி வழங்கப்படும். புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழு நேரில் ஆய்வு செய்யும்.

மத்திய குழு ஆய்விக்கு பின் கூடுதல் நிதி ஒதுக்கீடு குறித்து மத்திய அரசு முடிவெடுக்கும் என்றார்.

ஒடிசா சென்றார்

மேற்கு வங்கப் பயணத்தை முடித்துக்கொண்டு ஒடிசாவுக்குச் செல்லும் பிரதமர் மோடி, அங்கு அம்பன் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் நவீன் பட்நாயக்குடன் சேர்ந்து பார்வையிடுகிறார். அதன்பின்னர் ஒடிசா மாநிலத்திற்கான நிவாரணங்களை அவர் அறிவிப்பார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *