ஆர். முத்துக்குமார்
ஆண்டுக்கு ஆண்டு மழைகாலம் வருவதும், அப்போது அதீத மழைபொழிவில் கேரள மாநிலத்தில் நில சரிவுகள் ஏற்படுவதும் வாடிக்கையாகி விட்டது, இம்முறை வயநாட்டில் உள்ள மேப்பாடி, சூரல்மலை, முண்டகை, அட்டமலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவால் 160 பேர் உயிரிழந்துள்ளனர்.
பசுமையான மலைச்சரிவுகள் மற்றும் செழிப்பான சாகுபடி நிலங்கள் மரண ஓலங்களுக்கிடையே வெறிச் சோடிக் கிடக்கின்றது.
உயிர் சேதம்மட்டுமின்றி அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு விவசாயம் செய்ய இயலாது; மக்கள் வாழ இயலாது என்ற நிலைமைக்கு இப்பகுதி தள்ளப்பட்டிருக்கின்றன.
தமிழ் நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலையில் ஜூலை 18 வரை கன மழை தொடர்ந்து கொட்டி தீர்த்தது.
வயநாடு எல்லையில் உள்ள நீர்நிலைகள் முழுமையாக நிறைந்துவிட்ட நிலையில் கடந்த பத்து நாட்களாக பெரும் மழை தொடர நிலச்சரிவுகள் ஏற்பட துவங்கி விட்டது.
பருவநிலை மாற்றம் ஏற்படுத்தும் விபரீதங்களை நமக்கு நினைவூட்டுகிறது மற்றும் உடனடி நடவடிக்கை எடுப்பதன் அவசியத்தை உணர்த்துகிறது.
ஆண்டுகளாக மேற்கு தொடர்ச்சிமலைகள் பேரழிவுகளை நேரடியாக சந்திக்கும் பகுதி என்றே அறியப்பட்டு வருகிறது. 2011-ஆம் ஆண்டில் புகழ்பெற்ற சுற்றுச் சூழலியல் அறிஞர் மதவ் காட்கில் தலைமையில் அமைக்கப்பட்ட மேற்கு தொடர்ச்சிமலை சூழலியல் நிபுணர் குழு, 129,037 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட மேற்கு தொடர்ச்சிமலையின் 75% பகுதியை சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி என்று அறிவிக்கப் பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரை அந்த பகுதியின் அடர்ந்த காடுகள் மற்றும் செழிப்பான உயிரின பரிமாணத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆனால், அந்த பரிந்துரைகள் அமல்படுத்தப்படவில்லை. நன்றே செய், அதை இன்றே செய் என்பதை மறந்தோம்! இன்றைய வயநாட்டு நிலச்சரிவின் பின்னணியில் இந்த பேரழிவுகளை தடுக்க அரசு நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சிமலையின் மாநிலங்கள் பெரிய கட்டுமானத் திட்டங்களில் ஈடுபட்டு வந்துள்ளன, இது சுற்றுலா பொருளாதாரத்தை உயர்த்தியிருக்கிறது, ஆனால் இதன் விளைவாக சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுத்தியுள்ளது. காலநிலை மாற்றம் இந்த சவால்களை மேலும் தீவிரமாக்கியுள்ளது. ஒரே ஒரு நூற்றாண்டில் ஒரு முறை நிகழும் அபாய நிகழ்வுகள், இப்போது ஒரு தசாப்தத்தில் இரண்டு முறை நிகழ்கின்றன, இதனால் மலைப்பகுதிகளில் நிலச்சரிவுகளின் நிகழ்வுகள் அதிகரிக்கின்றன. இது இந்தப் புதிய காலநிலை நிலைமை. இந்த பகுதியை பாதுகாக்க உடனடி மற்றும் வலுவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது. மேற்கு தொடர்ச்சிமலையின் எழில் அதன் முக்கியமான பணியான அரணாய் நமது இயற்கையின் சமநிலையைப் பாதுகாக்கிறது என்ற செய்யாடுகளை மாறக்க செய்துவிட்டது.
நமது துணைக்கண்டத்தின் காலநிலை மற்றும் சூழலியல் முறைகளை ஒழுங்குபடுத்துவதில் அவை முக்கிய பங்காற்றுகின்றன. இந்த நுட்பமான சமநிலையை குலைப்பது உள்ளூர் வாழ்வாதாரங்களை அழிப்பதோடு மட்டுமல்லாமல், பரந்த சூழலியல் நிலைத்தன்மையை அடிப்படையாகக் குலைத்தும் வருகிறது. தமிழ் நாடு, கேரளா மற்றும் பிற மாநிலங்கள் இந்த மாற்றங்களை புரிந்து கொண்டு உரிய உடனடி நடவடிக்கைகளை எடுப்பார்களா? இதுவே காலத்தின் குரல், மேற்கு தொடர்ச்சி மலையின் ஆறு மாநிலங்களான குஜராத், மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ் நாடு ஆகிய அனைத்து மாநிலங்களுக்கும் விழிப்புணர்வு அழைப்பு. மேற்கு தொடர்ச்சிமலைகள் biodiversity அதாவது உயிரின பரிமாணம், ரசனைமிகு உல்லாச சுற்றுலா வளமான பகுதி மட்டுமல்ல; அவை நாட்டின் சூழலியல் ஆரோக்கியத்தின் முக்கிய உயிர்நாடி.
தொடர்புடைய பதிவுகள்:
வயநாடு நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 160 ஆக அதிகரிப்பு