கொல்கத்தா, ஜூன் 20–
மேற்கு வங்க பாஜக எம்பிக்கள் 3 பேர் திரிணாமுல் காங்கிரஸுக்கு தாவப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ள நிலையில், பாஜக ராஜ்யசபா எம்பி அனந்த் மகாராஜா, மமதா பானர்ஜியை திடீரென சந்தித்துப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள மொத்தம் 42 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் 29 இடங்களைக் கைப்பற்றியது. பாஜகவால் 12 இடங்களில்தான் வெல்ல முடிந்தது. இதனால் கருத்து கணிப்புகள் அனைத்தும் தவிடுபொடியானது. இதனிடையே தேர்தல் முடிவுகள் வெளியானதில் இருந்தே பாஜகவின் 3 புதிய எம்பிக்கள், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு தாவப் போகிறார்கள் என பாஜக மூத்த தலைவர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
எம்பிக்கள் விலகல்?
இந்த நிலையில் பாஜகவின் சவுமித்ரா கான் என்ற எம்பி, உள்ளூர் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் காலில் விழுந்து வாழ்த்துப் பெற்றார். தற்போதைய தேர்தலில் வெறும் 5,567 வாக்குகளில் வென்றவர் சவுமித்ரா கான். அத்துடன் நிற்காமல் திரிணாமுல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜியை புகழ்ந்தும் பேசி வருகிறார். இவரைப் போலவே வேறு சில பாஜக எம்பிக்களும் திரிணாமுல் காங்கிரசை புகழ்ந்தும் பேசி வருகின்றனர்.
இதன் அடுத்த கட்டமாகவே பாஜகவின் ராஜ்யசபா எம்பி அனந்த் மகாராஜா, முதலமைச்சர் மமதா பானர்ஜியை சந்தித்து பேசியிருக்கிறார். கூச்பிகார் பகுதியை தனிமாநிலமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்துபவர் அனந்த் மகாராஜா. தற்போதைய தேர்தலில் கூச்பிகார் பகுதியில் பாஜக பெரும் பின்னடவை எதிர்கொண்டது. அனந்த் மகாராஜா இம்முறை மமதாவின் திரிணாமுல் கை கோர்த்ததுதான் காரணம் எனவும் கூறப்படுகிறது.
அத்துடன் உள்ளூர் பாஜக நிர்வாகிகளுக்கு எதிராக பல இடங்களில் பாஜக தொண்டர்கள் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். இதனால் மேற்கு வங்கத்தில் பாஜகவின் இருப்பு ஆட்டம் காணும் அபாயம் ஏற்பட்டுள்ளது.