செய்திகள்

மேம்பாலம் இடிந்த விபத்து: 3 பேர் மீது வழக்குப்பதிவு

மதுரை, ஆக. 29–

மதுரையில் மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது தொடர்பாக மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரையில் துவங்கி திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வரை 35 கி.மீ. தூர சாலையை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ரூ.1,028 கோடியில் நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்து வருகிறது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக மதுரையிலிருந்து ஊமச்சிகுளம் வரை 7.5 கிமீ தூரத்திற்கு பறக்கும் பாலம் கட்டும் பணிகள் கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கின. பாலம், சாலை விரிவாக்க பணிகள் துவங்கிய பிறகே, பிரதமர் மோடி நாகர்கோவில் விழாவில் இப்பணிகளுக்கும் சேர்த்து அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். மொத்தம் 225 ஒற்றை தூண்கள் அமைக்கப்பட்டு, இந்த பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது.

3 பேர் மீது வழக்கு

புதுநத்தம் சாலையில் உள்ள இந்த பாலத்தின் ஒரு பகுதி, நேற்று மாலையில் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 2 தொழிலாளர்கள் காயமடைந்த நிலையில், உத்தர பிரதேசத்தை சேர்ந்த 45 வயதான ஆகாஷ் சிங் என்ற தொழிலாளி உயிரிழந்தார்.

இந்நிலையில், மதுரையில் மேம்பாலம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்து தொடர்பாக பணிகளை மேற்கொள்ளும் நிறுவன திட்ட பொறுப்பாளர் பிரதீப் ஜெயின், பொறியாளர் சத்தியேந்தர் வர்மா, ஹைட்ராலிக் மெஷின் ஒப்பந்ததாரர் பாஸ்கரன் ஆகியோர் மீது தல்லாகுளம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *