சென்னை, கீழ்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் 112–வது ஆண்டு விழா சிறப்பாக கொண்டாட ஏற்பாடானது. சுத்திகரிப்பு நிலையத்தில் பணி செய்து கொண்டிருந்த பணியாளர்கள் எல்லாம் அந்தச் சுத்திகரிப்பு நிலையத்தை ஒரு கோயிலாகக் கொண்டாடினார்கள். அங்கு பணிபுரிந்து கொண்டிருக்கும், மணி அந்தச் சுத்திகரிப்பு நிலையத்தில் இருக்கும் எல்லா இடங்களிலும் பூக்கள் வைத்து சாமி கும்பிடுவதற்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தார். அங்கு புதிதாக வேலைக்குச் சேர்ந்த ரஞ்சித்துக்கு இது ஒன்றும் விளங்கவில்லை .எதற்காக குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை ஒரு கோயில் போல கொண்டாடுகிறார்கள்? என்று அவனுக்கு விளங்காமல் இருந்தது.
மணியிடம் வந்த ரஞ்சித் “ஏன் இந்தக் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தைக் கோயில் மாதிரி கொண்டாடுறீங்க?” என்று வியப்பாய் கேட்டான்.
” ரஞ்சித், நீங்க புதுசா வந்திருக்கீங்க. உங்களுக்கு வேணும்னா இது வியப்பா இருக்கலாம். எங்களுக்கு இது கோயில் மாதிரி. 1870 ஆண்டுகள்ல சென்னை நகரச் சுத்தி கிணறுகளும் குளங்களும் தான் இருந்தன .இந்த கீழ்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலைய குடிநீர் தான் சென்னைக்கு தொடர்ந்து குடிநீரைக் கொண்டு வந்துச்சு.
1872ல ஜேம்ஸ் பிரேசர் என்பவரால் அறிமுகப்படுத்திய குடிநீர் வழங்கும் திட்டம் சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சுத்திகரிக்கப்படாத தண்ணீர் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திறந்த வெளி வாய்க்கால்ல வந்து தண்ணீரைக் குடிச்சு, நிறையப் பேருக்கு காலராவும் வேற நோயும் வந்தது. மக்களுடைய நலனைக் கருதி அப்போதைய சென்னை மாநகராட்சியின் பொறியாளராக இருந்த ஜே டபிள்யூ மேட்லி ஐயா தான் இங்கு குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை உண்டாக்கினார். பல்வேறு சவால்களை எதிர்கொண்டு அதை நிறைவேற்றினார். 1914 டிசம்பர் 17 ந்தேதி சென்னை கவர்னர் லார்ட் பென்ட்லாண்ட் இந்த சுத்திகரிப்பு நிலையத்தைத் திறந்து வைத்தார்.
1935–ம் ஆண்டு பொருத்தப்பட்ட மின்சார பம்ப் செட்டுகள் இப்போ வரைக்கும் பயன்பாட்டில இருக்கு.
இந்தக் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் சிவப்பு செங்கல், இந்தோ –- சாராசெனிக் கட்டிடக்கலை பாணியில கட்டப்பட்டிருக்கு. 110 ஆண்டுகளுக்கு மேலாக சென்னை நகரத்தின் முக்கிய குடிநீர் விநியோகிக்கும் இடமா இருக்கு. 1914 ஆம் ஆண்டு பொறியாளர் மேட்லியால் அமைக்கப்பட்ட இரும்புக் குழாய் வழியா தண்ணீர் வழங்கும் திட்டம் 1935 ஆம் ஆண்டுல நீராவி நீரேற்று தொழில் நுட்பத்தை மாற்றி மின் மோட்டார்கள் இந்த ஆலையில் பொருத்தப்பட்டு, இப்ப வரைக்கும் 100 சதவீதம் செயல்பாட்டுல இருக்கு என்று மணி சொல்வதை வியப்பாய் கேட்டுக் கொண்டிருந்தான், ரஞ்சித்
ஒரு காலத்தில் தியாகராய நகர் கிராமமாக தான் இருந்தது. இது முதல்ல செங்கல்பட்டு மாவட்டத்தினுடைய ஒரு பகுதியா இருந்தது. அப்புறம் 1946–ம் ஆண்டு சென்னையுடன் இணைக்கப்பட்டது. தி.நகர் மற்றும் மேற்கு மாம்பலம் பகுதியில் அமைந்திருக்கும் இந்த இடம் ஏரியாக தான் இருந்துச்சு. 1923 தி.நகர் விரிவாக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த ஏரி நிலமாக மாற்றப்பட்டுப் புதிய குடியிருப்பு பகுதிகளாக மாற்றப்பட்டுச்சு. அதன் பிறகு தான், இந்த மேட்லி சாலை உருவாச்சு. நீதிக்கட்சி ஆட்சி காலத்தில் 1923 முதல் 1925–ம் ஆண்டு வரை மாம்பலத்தின் தெற்குப் பகுதியில் நன்கு திட்டமிடப்பட்ட நகரமாக தி.நகர் உருவாக்கப்பட்டபோது, இந்த நகரத்தின் ஆரம்ப காலத்தில் மேட்லி சாலை அது சுற்றியுள்ள பகுதிகள் அமைதியான குடியிருப்பா இருந்தது. 1960க்கு அப்புறம் தி.நகர் வணிக மையமான இடமாக மாறத் தொடங்கியது.
இப்ப மேட்லி சாலை தி.நகரின் முக்கிய சாலையா இருக்கு. இந்தச் சாலை மேற்கு மாம்பலம் புனித ஜார்ஜ் கோட்டை, கிண்டியை இணைக்கும் முக்கிய சாலையாக இருக்கு .கீழ்பாக்கத்துல மேட்லி என்ற பெயரில் ஒரு சாலை இருக்கு. பிரிட்டிஷ் பொறியாளராக இருந்த ஜேம்ஸ் டபிள்யூ மேட்லி சென்னை மாநகரத்தின் சிறப்பு பொறியாளரா இருந்த போது, அவர் ஆரம்பிச்சது தான் இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையம். சென்னை நகரின் பாதுகாக்கப்பட்ட குடிநீரின் தந்தை ஜேம்ஸ் டபிள்யூ மேட்லி . அவரின் நினைவா தான் மேட்லி சாலைன்னு பேரு வச்சிருக்காங்க. இப்ப நூற்றாண்டு விழா கண்டிருக்கு இந்தச் சுத்திகரிப்பு நிலையம். இப்ப வரைக்கும் சென்னைக்கு குடிநீர் வழங்கிட்டு இருக்கிறது இந்தக் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் தான்.
சென்னையின் அடையாளச் சின்னமாக இருக்கும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, அது மாதிரி இன்னைக்கு குடிநீர் வழங்கும் கீழ்ப்பாக்கம் சென்னையாேட அடையாளங்களில் ஒன்று மணி சொல்ல, ஆச்சரியப்பட்டான், ரஞ்சித்.
விழாவுக்கான ஏற்பாடுகள் சிறப்பாகச் செய்யப்பட்டன. அன்று கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் 112–வது ஆண்டு விழா கொண்டாட ஏற்பாடானது.
தியாகராய நகர் பகுதியில் உள்ள மேட்லி சாலைக்குள் இவ்வளவு வரலாற்றுச் செய்திகள் ஒளிந்திருக்கின்றன.
![]()





