போஸ்டர் செய்தி

மேட்டூர்-–கொள்ளிடம் இடையே 3 தடுப்பணைகள்: பழனிசாமி உத்தரவு

சேலம்,ஆக.13–
மேட்டூர் அணையில் இருந்து கொள்ளிடம் வரை 3 தடுப்பணைகள் கட்டப்படும் என்றும், காவிரி–கோதாவரி இணைப்பு திட்டம் உறுதியாக செயல்படுத்தப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
காவிரி டெல்டா பாசனத்திற்காக, மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை திறந்து வைத்தார். பின்னர் காவிரி நீருக்கு மலர்கள் தூவி வரவேற்பு கொடுத்தார். இதையடுத்து அங்கு நடந்த விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:–-
வேளாண் பெருமக்களின் கோரிக்கையை ஏற்று, இன்றைக்கு மேட்டூர் அணையிலிருந்து காவேரி டெல்டா பாசனத்திற்கான தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இன்றைக்கு மேட்டூர் அணை 101 அடியை எட்டியுள்ளது, அணையில் 66 டி.எம்.சி தண்ணீர் இருக்கிறது. மேலும் இப்பொழுது 2 லட்சத்து 30 ஆயிரம் கன அடி தண்ணீர் அணைக்கு வந்துகொண்டிருக்கிறது. ஆகவே, அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டும் என்று நாம் எதிர்பார்க்கின்றோம்.
இன்னும் பருவமழை பெய்யவில்லையே, இன்றைக்கு விவசாயிகளுக்கெல்லாம் தண்ணீரை எப்படி திறப்பது என்று எண்ணிக்கொண்டு வேதனை பட்டுக்கொண்டிருந்தேன். திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்துவிட்ட வந்தவுடனே மழை பொழியும், ஆனால் இந்த முறை கொஞ்சம் காலதாமதமாக பெய்திருக்கிறது.
நம்முடைய விவசாயப் பெருமக்களுக்குத் தேவையான நீர் முழுவதும் இந்த ஆண்டு வழங்கப்படும். அம்மாவினுடைய அருளாசியோடு படிப்படியாக தண்ணீர் திறக்கப்பட்டு, வருகின்ற நீரைப் பொறுத்து, நம்முடைய விவசாயிகளுக்கு தேவையான அளவிற்கு தண்ணீர் திறக்கப்படும்.
16 லட்சம் ஏக்கர்
நிலம் பாசன வசதி பெறும்
இதன் மூலமாக சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மற்றும் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயப் பெருங்குடி மக்கள் பாசன வசதியை பெறுவர். இன்றைக்கு இந்த தண்ணீர் திறப்பின் மூலமாக, சுமார் 16.05 லட்சம் ஏக்கர் நிலம் பாசனம் பெறுகின்றது. மிகப்பெரிய பாசனம் பெறுகின்ற ஒரு ஜீவநதி என்று சொன்னால் அது காவேரி நதி தான்.
இன்றைக்கு தேவைப்படும் மொத்த நீரின் அளவு சுமார் 339 டிஎம்சி ஆகும். மேட்டூர் அணையிலிருந்து 220 டிஎம்சி தண்ணீர் மற்றும் மீதமுள்ள 119 டிஎம்சி தண்ணீர் வடகிழக்கு பருவமழை மூலமும் உறுதி செய்யப்படும். மேட்டூர் கிழக்கு, மேற்கு கால்வாய்களுக்கு இன்று முதல் 132 நாட்களுக்கு மேட்டூர் அணையிலிருந்து விநாடிக்கு 1000 கன அடி தண்ணீர் திறக்கப்படும், இதனால் சுமார் 45,000 ஏக்கர் நிலம் பாசனம் பெறுவதால் ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயப் பெருமக்கள் பயன்பெறுவார்கள். இதற்காக சுமார் 9.6 டிஎம்சி தண்ணீர் தேவைப்படும். மேலும் காவேரி ஆற்றிலிருந்து சுமார் 155 திட்டங்களின் மூலம் தினசரி 1700 மில்லியன் லிட்டர்-க்கும் மேற்பட்ட தண்ணீர் 8 மாவட்டங்களிலுள்ள பொதுமக்களின் குடிநீருக்காக பயன்படுத்தப்படுகின்றது. மேலும், 20 மாவட்ட மக்களுக்கு காவேரி நீர் குடிநீர் ஆதாரமாகவும் திகழ்கிறது என்பதையும் தெரிவிக்க விரும்புகின்றேன். அதுமட்டுமல்லாமல், நீர் மின் நிலையம் மூலம் 50 மெகாவாட் மின்சாரமும், சுரங்க மின் நிலையங்கள் மூலம் 200 மெகாவாட் மின்சாரமும், ஆகமொத்தம் 250 மெகாவாட் மின்சாரம் நமக்கு கிடைக்கின்றது. மேலும், காவேரி ஆற்றின் குறுக்கே உள்ள 7 கதவணை நீர் மின் நிலையங்கள் மூலம் 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
மேட்டூர் அணை கட்டப்பட்டதிலிருந்து பல்லாண்டு காலமாக தூர்வாரப்படாமல் இருந்தது, அந்த தூர்வாருகின்ற நிகழ்ச்சியும் அம்மாவின் ஆட்சியில்தான் நடைபெற்றது. இதன் மூலம் 1949 விவசாயிகள் 2.70 லட்சம் கனமீட்டர் அளவு வண்டல் மண்ணை எடுத்துச் சென்று பயனடைந்துள்ளனர்.
விவசாய பெருங்குடி மக்களுக்கு தேவையான அளவு உரிய நேரத்தில் வழங்கப்படும். காவேரி டெல்டா விவசாய பெருங்குடி மக்கள் மற்றும் மேட்டூர் கால்வாய் பாசன பகுதி விவசாயப் பெருங்குடி மக்கள் அனைவரும் நீரை பங்கீட்டு, நிலைமைக்கேற்ப தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி ஒத்துழைக்குமாறும், மிக அதிக மகசூல் பெற்று பயன்பெற வேண்டுமென்றும் விவசாயப் பெருங்கடி மக்களை கேட்டுக் கொள்கிறேன். இந்த ஆண்டு வருண பகவானின் கருணையால் டெல்டா பாசன விவசாயிகளுக்குத் தேவையான நீர் வழங்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.
இன்றைய தினம், மேட்டூரில் 101 அடி தண்ணீர் இருக்கிறது, 66 டிஎம்சி தண்ணீர் தற்போது இருப்பு இருக்கின்றது. தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இப்போது கர்நாடகத்தில் கபினியிலிருந்தும் மற்ற அணைகளிலிருந்தும் தண்ணீர் திறக்கப்பட்டிருக்கின்றது, போதுமான தண்ணீர் திறக்கப்படும். ஏனென்றால், கர்நாடகத்தில் 4 அணைகளுமே நிரம்பிவிட்டன. ஆகவே, இனி பெய்கின்ற மழைநீர் முழுவதும் கர்நாடகத்திலிருந்து 4 அணைகளின் வழியாக மேட்டூர் அணைக்கு வந்து சேரும். இது உங்களுடைய அரசு, மக்களுடைய அரசு, மக்கள் என்ன எண்ணுகின்றார்களோ அதை நிறைவேற்றுகின்ற அரசு எங்களுடைய அரசு. இன்றைக்கு கடுமையான வறட்சி தமிழகத்தில் நிலவினாலும்கூட இன்றைக்கு பாசன விவசாயிகளுக்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
குடிமராமத்துத் திட்டம்
இன்றைக்கு விவசாயிகளுக்குத் தேவையான திட்டங்களை நாங்கள் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றோம். குடிமராமத்துத் திட்டத்தை பொறுத்தவரைக்கும் முழுக்க முழுக்க விவசாயிகள்தான் அந்தத் திட்டத்தை எடுத்துச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
2017–2018ம் ஆண்டு 1,519 ஏரிகளுக்கு பரீட்சார்த்த முறையில் ரூபாய் 100 கோடி ஒதுக்கி அந்தப் பணியை துவக்கினோம். விவசாயிகளிடத்திலே அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததன் விளைவாக, 2018–2019ம் ஆண்டு 1,511 ஏரிகள் எடுக்கப்பட்டு ரூபாய் 328 கோடி இந்தத் திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டு, அந்தப் பணி முடிவுறும் நிலையில் இருக்கின்றது. இந்தத் திட்டத்திற்கு வலு சேர்க்கும் விதமாக விவசாயிகளுடைய கோரிக்கையை ஏற்று அந்தத் திட்டத்தை விரிவுபடுத்தும் விதமாக சுமார் ரூபாய் 500 கோடி மதிப்பீட்டில், சுமார் 1,829 ஏரிகள் இந்த ஆண்டு எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
இவ்விழாவில், அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.பி.அன்பழகன், கே.சி. கருப்பண்ணன், எம்.ஆர். விஜயபாஸ்கர், டாக்டர் சரோஜா, சேலம் மாவட்ட கலெக்டர் ராமன், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *