செய்திகள்

மேட்டூர் அணை நீர்மட்டம் 71 வது முறையாக 100 அடியை எட்டியது

Makkal Kural Official

மேட்டூர், ஜூலை 27–

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 71 வது முறையாக 100 அடியை எட்டியுள்ளது.

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்ததை ஒட்டி, கர்நாடகாவில் உள்ள அணைகள் நிரம்பின. இதையடுத்து, கபினி, கே.ஆர்.எஸ் உள்ளிட்ட அணைகளில் இருந்து, விநாடிக்கு ஒரு லட்சம் கன அடிக்கும் கூடுதலாக நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த நீரானது மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருப்பதால், அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

அணைக்கு நேற்றிரவு 8 மணிக்கு விநாடிக்கு 81,552 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து 93,828 கன அடியாக உயர்ந்தது. தொடர்ந்து, காலை 9 மணியளவில் அணைக்கு விநாடிக்கு நீர்வரத்து ஒரு லட்சம் கன அடியை நெருங்கியது. அணையின் நீர்மட்டம் நேற்று இரவு 95.50 அடியாக இருந்தது.

100 அடியை எட்டியது

இந்நிலையில் அணையின் நீர்மட்டம் இன்று காலை 9 மணியளவில் 100 அடியை எட்டியது. இதையடுத்து அணையின் 16 கண் மதகினை நீர் தொட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியதையொட்டி 16 கண் மதகு பகுதியில் காவிரி அன்னைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. தொடர்ந்து, பூக்களை தூவி காவிரி நீரை நீர்வளத்துறை அதிகாரிகள் வரவேற்றனர். அப்போது, மேட்டூர் நீர்வளத்துறை நிர்வாக பொறியாளர் சிவக்குமார், உதவி செயற்பொறியாளர் செல்வராஜ், உதவி பொறியாளர் சதிஷ் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

அணைக்கு நீர்வரத்து ஒரு லட்சம் கனஅடியாக உள்ள நிலையில், நீர் வெளியேற்றம் விநாடிக்கு ஆயிரம் கன அடியாக உள்ளது. மேட்டூர் அணையில் 120 அடி வரை நீரை தேக்கிவைக்க அனுமதிக்கப்படுகிறது. இது 93 டிஎம்சி ஆகும். இந்நிலையில் இப்போதைய நிலவரப்படி அணையில் 64 டிஎம்சி தண்ணீர் இருப்பு உள்ளது.

கடந்தாண்டு ஜூலை 17 ந் தேதி மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியாக இருந்தது. அதன் பின்னர், 405 நாட்களுக்குப் பின்னர், இன்று 100 அடியை எட்டியது. அணை வரலாற்றில் 71 வது முறையாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டி சாதனை படைத்துள்ளது. கடந்த 2005-2006ம் ஆண்டு, மேட்டூர் அணை நீர்மட்டம் 428 நாட்கள் தொடர்ந்து 100 அடியாக நீடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *