11 மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை
சேலம், ஜூலை29-
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு திறக்கப்பட்டுள்ள நீரின் அளவு 20 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 120 அடியை எட்டவுள்ள நிலையில் எந்த நேரத்திலும் உபரி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்படலாம் என்பதால் 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள கபினி, கேஆர்எஸ் அணைகள் நிரம்பி உள்ளன. அந்த அணைகளின் பாதுகாப்பு கருதி, உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் காவிரில் கடந்த 2 வாரங்களாக வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது.
இதன் காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று மாலை வினாடிக்கு நீர்வரத்து 1 லட்சத்து 52 ஆயிரம் கன அடியாக இருந்த நிலையில், இன்று காலை நீர்வரத்து 1 லட்சத்து 53 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது. அணையின் நீர்மட்டம் இன்று காலையில் 116.36 அடியாக உயர்ந்து, நீர் இருப்பு 87.78 டிஎம்சியாக உள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு நேற்று விநாடிக்கு 12,000 கன அடி வீதம் நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. இன்று காலை முதல் படிப்படியாக உயர்த்தி 20,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
நீர்மட்டம் 116 அடியை எட்டியது
மேட்டூர் அணையின் முழு கொள்ளளவான 120 அடியை எட்டுவதற்கு, இன்னும் 3.50 அடியே உள்ளது. இன்னும் 5 டிஎம்சி தண்ணீரை அணைக்குள் தேக்கினால் முழு கொள்ளளவை எட்டிவிடும்.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை விரைவில் எட்ட உள்ளது. அணை நிரம்பினால், உபரி நீரை வெளியேற்றவும், காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்தால், அதனைக் கண்காணிக்கவும் நீர்வளத்துறை சார்பில், அணை வளாகத்தில் வெள்ள நீர் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மேட்டூர் அணை உதவி செயற்பொறியாளர் செல்வராஜ் 11 மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில்,
“இன்று காலை 8 மணி நிலவரப்படி அணை நீர்மட்டம் 116.36 அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணை ஓரிரு நாட்களுக்குள் 120 அடியை எட்டிவிடும். எந்த நேரத்திலும் உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, காவிரி கரையோரத்திலும் தாழ்வான பகுதிகளிலும் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல வேண்டும். உடைமைகள் பாதுகாப்பு உள்பட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
பாசனத்துக்காக
தண்ணீர் திறப்பு
முன்னதாக முதலமைச்சரின் உத்தரவை தொடர்ந்து, மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக நேற்று மாலை 3 மணிக்கு அமைச்சர் கே.என்.நேரு தண்ணீரை திறந்து வைத்தார். அணையின் மேல்மட்ட மதகுகள் வழியாக வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து 8 ஆயிரம், 10 ஆயிரம், 12 ஆயிரம் என படிப்படியாக நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது.
அணையின் மேல்மட்ட மதகுகள் வழியாக திறக்கப்பட்ட தண்ணீர் சிறிது நேரத்திற்கு பிறகு அணையை ஒட்டி அமைந்துள்ள அணை மின்நிலையம் மற்றும் சுரங்க மின்நிலையம் வழியாக திறந்து விடப்பட்டது. இதையடுத்து நீர்மின்நிலையங்களில் மின் உற்பத்தி தொடங்கி உள்ளது.
தண்ணீர் திறப்புக்கு முன்பாக காவிரி அன்னைக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இதையடுத்து அமைச்சர் கே.என்.நேரு மதகுக்கான பொத்தானை அழுத்தி தண்ணீரை திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து சீறிப்பாய்ந்து வெளியேறிய தண்ணீரில் மலர்கள் மற்றும் நவதானியங்களை தூவி வழிபட்டார்.
இதன்மூலம், சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை ஆகிய 13 மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.