தண்ணீரை சீரான முறையில் பயன்படுத்த விவசாயிகளுக்கு அரசு வேண்டுகோள்
சென்னை, ஜூலை 28–
மேட்டூர் அணைக்கு கர்நாடக அணையிலிருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளதாலும், அணையின் முழுகொள்ளளவான 120 அடியில் உள்ளதாலும், நீர்வளத்துறை அலுவலர்களால் உபரிநீர் திறந்து விடுவதை சீரான முறையில் அனுப்பிடவும், அந்நீரினை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ளவும் விவசாயிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வெள்ள தடுப்பு பணிகளை மேற்கொள்ள நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு அரசு அறிவுறித்தியுள்ளது. பொதுமக்கள் வெள்ள அபாய எச்சரிக்கையை கருத்தில் கொண்டு விழிப்புடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இதுசம்பந்தமாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
முதலமைச்சரால் 12.6.2025 அன்று மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக நீர் திறந்து விடப்பட்டதுடன், மேட்டூரிலிருந்து திறந்த விடப்பட்ட நீர் கல்லணை வந்தவுடன், கல்லணை மதகுகளையும் 15.6.2025 அன்று திறந்து வைத்து, நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுமென விவசாயிகளை அறிவுறுத்தினார்.
முன்னதாக, இந்த ஆண்டு 98 கோடி ரூபாய் செலவில் துார்வாரும் பணிகள் சீரிய முறையில் மேற்கொள்ள ஆணையிடப்பட்டு, பாசனத்திற்கு நீரை கொண்டு செல்ல தேவையான துார்வாரும் பணிகள் முடிக்கப்பட்டதனால் கடைமடை பகுதிகளுக்கும் பாசன நீரானது சென்றுள்ளது. பயிர் சாகுபடி சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கர்நாடக அணையிலிருந்து குறிப்பாக கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளிலிருந்து அதன் நீர்பிடிப்பு பகுதியில் மழைபொழிவு அதிகரித்து உள்ளதால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நேற்று முதல் வினாடிக்கு 35 ஆயிரம் கனஅடி முதல் 70 ஆயிரம் கனஅடி வரை அதிகரித்துள்ளது.
16 கண் மதகுகள் வழியாக
நேற்று (27–ந் தேதி) மாலை 4 மணி நிலவரப்படி 75,400 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழுக்கொள்ளளவான 120 அடியில் உள்ளது, இச்சூழலில் 16 கண் மதகுகள் வழியாக உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. இதற்கு தேவையான வெள்ள அபாய எச்சரிக்கையினை விடுக்க சம்பந்தப்பட்ட நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.
மேலும் கிடைக்கும் உபரி நீரை முறை சார்ந்த குளங்கள், ஏரிகள் மற்றும் சரபங்கா போன்ற திட்டங்களுக்கு திருப்பிவிட்டு நீரை முடிந்த அளவு சேமிக்க நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையானது கடந்த நான்கு பாசன ஆண்டுகளில் 2021–-2022, 2022–-2023 மற்றும் 2024–-2025-இல் அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
கடந்த 2024–-2025–ம் ஆண்டில் 30.7.2024, 12.8.2024 மற்றும் 31.12.2024 ஆகிய நாட்களில் முழுகொள்ளளவை (120 அடி) எட்டியது. இந்த ஆண்டில் ஜூன் மாதம் 29.6.2025 தேதியிலும், ஜூலை மாதத்தில் 5–ந் தேதி, 20–ந் தேதி மற்றும் 25–ந் தேதிகளில் முழுக்கொள்ளளவை (120அடி) எட்டியது குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
![]()





