செய்திகள்

மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 8,539 கன அடியாக சரிவு

சேலம், மே 25–

மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 8,539 கன அடியாக சரிந்துள்ளது.

தமிழக, கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் பலத்த மழை பெய்வதால் காவிரி ஆற்றுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகமானது.

இதைத்தொடர்ந்து சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கடந்த சில நாட்களாக படிப்படியாக அதிகரித்தது. இதையடுத்து அணையின் நீர்மட்டம் 117 அடியாக உயர்ந்ததால், நடப்பாண்டு காவிரி டெல்டா விவசாயிகளின் நலன் கருதி, குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து வழக்கமாக நீர் திறக்கப்படும் நாளான ஜூன் 12-ந் தேதிக்கு முன்பாகவே மே 24ந் தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இதன்படி நேற்று காலை மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசன குறுவை சாகுபடிக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீரை திறந்து வைத்தார்.

இந்த நிலையில் மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்துள்ளதால், அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்துள்ளது. இதன்படி மேட்டூர் அணையில் நேற்று 10,508 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 8,539 கன அடியாக சரிந்துள்ளது.

அணையின் நீர்மட்டம் 117.92 அடியாக உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து தற்போது வினாடிக்கு 5,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், அணையின் தற்போது 90.19 டி.எம்.சி அளவு நீர் இருப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒகேனக்கலில் பரிசல் இயக்க அனுமதி

இன்று ஒகேனக்கலில் நீர்வரத்து விநாடிக்கு 8,000 கனஅடியாக குறைந்தது.

சுற்றுலா பயணிகளின் வசதிக்காகவும், சுற்றுலா வருவோரை நம்பியுள்ள பரிசல் இயக்குபவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும் இன்று காலை 9 மணி முதல் ஒகேனக்கல் காவிரியாற்றிலும் அருவியிலும் குளிக்கவும், பரிசல் இயக்கவும் பாதுகாப்பு தொடர்பான நிபந்தனைகளுடன் கூடிய அனுமதியை மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.