மேட்டூர், செப்.2–
கர்நாடகா அணைகளில் இருந்து காவிரியில் விடுவிக்கப்பட்ட தண்ணீர் இன்று காலை மேட்டூர் அணைக்கு நீர் வரத் தொடங்கியதன் காரணமாக மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 5018 கன அடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை காலை 48.92 அடியிலிருந்து 48.48 அடியாக குறைந்தது. இந்நிலையில், கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் விடுவிக்கப்பட்ட தண்ணீர், மேட்டூர் அணைக்கு இன்று வரத் தொடங்கியதால், அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 562 கன அடியிலிருந்து 5018 கன அடியாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 8,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 16.86 டி.எம்.சி.யாக உள்ளது.