சிறுகதை

மேடு பள்ளம் – ராஜா செல்லமுத்து

நகரில் உள்ள பிரதான தெருக்களெல்லாம் தார் இட்டு சீர்செய்யப்பட்டிருந்தன.

ஒரே ஒரு தெரு மட்டும் குண்டும் குழியுமாக மேடு பள்ளமாக இருந்தது. எத்தனை முறை அரசாங்கம் மறுபடியும் மறுபடியும் சாலைபோட்டாலும் அந்தத் தெரு மட்டும் மறுபடியும் மறுபடியும் மேடுபள்ளமாக இருந்தது.

இதை அந்த வழியாக செல்லும் ஒரு இரு சக்கர வாகன ஒட்டி கவனித்தார்கள்.

அந்தத் தெரு வழி தான் பிரதான சாலைக்கு போக வேண்டும் என்று இருந்ததால் இதை கவனித்த முருகன்.

எதற்காக இந்த தெருவை மட்டும் கொத்திக் கொதறி போட்டு இருக்கிறார்கள்? என்றவனுக்கு விளங்கியது.

தன் இருசக்கர வாகனத்தை ஒட்டியபடியே சிரித்துக் கொண்டே செல்வான்.

மற்றவர்கள் எல்லாம் இந்த தெரு மட்டும் தான் இப்படி இருக்கு. இந்த அரசாங்கம் சரியா வேலை செய்வதில்லை. இந்தத் தெருவ மட்டும்தான் இப்படி வஞ்சிக்கிறாங்க. இதை நாம மேல் இடத்திற்கு தெரியப்படுத்தவும் இங்கே ரோடு சரியா போடணும். மேடு பள்ளமா இருக்கு என்று அரசாங்கத்தை வசை பாடிச் செல்வார்கள்.

ஆனால் முருகன் மட்டும் சிரித்தபடியே தான் அந்த அந்தத் தெருவைக் கடந்து செல்வார்.

அவருக்கு எந்தவிதமான கோபமோ வருத்தமோ இருந்ததாக தெரியவில்லை. முன்பு காரணம் அறியாத போது சட்டென்று வந்த கோபம் இப்போது மேடு பள்ளமாக ஏன் இந்த தெரு கிடக்கிறது என்பது அவருக்கு விளங்கிய பிறகு கொஞ்சம் கூட மனம் காேணாமல் அந்தத் தெரு வழியாத அலுவலகம் போகும்போதும் வரும் போதும் சிரித்துக்கொண்டு செல்வார்.

அந்த தெரு தான் அவருக்குப் பிரதானம் .

ஆனால் எப்போதும் அந்த தெருவையைத் திட்டிக் கொண்டு செல்லும் அந்த நபர்களும் முருகனும் ஒரே புள்ளியில் சந்தித்தார்கள்.

முருகன் அரசாங்கத்தில் நல்ல பதவியில் இருந்ததால் இவர் நினைத்தால் முடியும் என்று உடன் வந்த வாகன ஓட்டிகள் முருகனை இடைமறித்தார்கள் .

சார் இந்த தெரு மட்டும்தான் இப்படி இருக்கு. அதுக்கு ஒரு ஏற்பாடு செய்யுங்க என்று உடன் வந்தவர்கள் சொன்னபோது அவர்களை மேலும் கீழும் பார்த்த முருகன் எதுவும் பேசாமல் இருந்தார்.

என்ன சார் நாங்க சொல்றது தப்பா? மற்ற தெரு எல்லாம் நல்லா தானே இருக்குது? இதுக்கு தார் சாலை போட்டு வண்டி எல்லாம் நல்லா போற மாதிரி ஏற்பாடு பண்ண வேண்டியதுதானே? என்றார் அந்த வாகன ஓட்டி.

இதைக் கேட்ட முருகன் சிரித்தார் பதில் சொல்லவில்லை .

அப்போது அவர்கள் வாகனங்கள் செல்லும்போது குறுக்கே மறுக்கே , முதியவர்கள், ஆடு மாடு, கோழிகள் நாய்களென்று உலவி குறுக்கே சென்று கொண்டிருந்ததைக் கவனித்த முருகன்

அங்க பாத்தீங்களா? என்ற பாேது அந்த வாகன ஓட்டிகள் எதுவும் தெரியாதுபோல் விழித்தார்கள்.

இந்த தெருவில் நிறைய குழந்தைங்க ஆடு மாடு கோழி உயிரினங்கள் இருக்கு. இதுல தார் ராேடு பாேட்டு நீங்க ஓவர் ஸ்பீடுல போனீங்கன்னா, இந்த மக்கள் குறுக்க மறுக்க போய் வர முடியாது வேக வேகமா வாகனம் போகும்.

ஆனா இப்ப பாருங்க மேடு பள்ளம் குண்டு குழியுமா இருக்கிறதுனால தான் நம்ம மெல்ல போறோம்.

இந்த தெருவ நாம கடக்கிறதுக்கு ஒரு 50 செகண்ட் ஆகலாம். அந்த அம்பது செகண்ட் அவங்க வாழ்க்கையை தீர்மானிக்கும். நாம கொஞ்சம் தாமதமா போறது தப்பு இல்ல என்றார் முருகன்.

இதைக் கேட்ட அந்த வாகன ஓட்டிகள் இப்படி ஒன்னு இருக்கா? எங்களுக்கு தெரியாம போச்சே? அப்படின்னா இந்த தெரு மேடும் பள்ளமாவே இருக்கட்டும் .

இப்படி மனுசங்க குழந்தைங்க வாழ்ற இடத்துல ராேடு மேடு பள்ளமா போறது தப்பு இல்ல என்று அந்த தெருவுக்கு நற்சான்றிதழ் வழங்கினார்கள் அந்த வாகன ஓட்டிகள்.

அப்படி அவர்கள் பேசிக் கொண்டு போகும் போது ஒருத்தி தன் இடுப்பில் குழந்தை வைத்துக் கொண்டு அழகாக அந்தச் சாலையை கடந்தாள்.

இதைப் பார்த்த முருகனுக்கும் மற்ற வாகன ஓட்டிகளுக்கு மனதில் சந்தோஷம் முகிழ்த்தது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *