‘‘மேஜர்’’ முகுந்த் வரதராஜன்
இந்திய மண்ணின், குறிப்பாக தமிழக மண்ணின் மாபெரும் வீரன்!
தேசம் காக்கும் வீரத்தின் அடையாளம்!
கடுமையான பயிற்சி,- கண் உறங்கா கடமை உணர்ச்சி!
அணிந்த ராணுவ உடை சொல்லும் அவரின் மன உறுதியை!
செலுத்திய தோட்டாக்கள் சொல்லும் அவரின் தவறாத குறியை!
விழுந்த வியர்வை சொல்லும் கடமை உணர்வை!
சிந்திய ரத்தம் சொல்லும் தியாகத்தின் விலையை!
வீழ்த்திய எதிரியின் ஆன்மா சொல்லும் அவரின் பெரும் வீரத்தை!
எதிரிகளுக்கு எமனாய்-, தேசம் காக்கும் காவலனாய்-,
வீரத்தின் முகவரியாய்,- தேசப்பற்றின் முதல் வரியாய்-
எதிரிகளின் தோட்டாக்களை மார்பில் ஏந்தி-
ரத்தம் சொட்டச் சொட்ட… துளியும் பயம் இல்லாமல்
எதிரிகளின் கூட்டத்தில் கடைசி கயவனின் உயிரை எடுத்து,
தாய் மண்ணுக்காக இன்னுயிரைத் தியாகம் செய்த ஒப்பற்ற வீரன்!
பெருமைப்படுகிறது தமிழகம்!
பெருமிதம் கொள்கிறது இந்தியா!
ஜெய்ஹிந்த்! என்று ‘அமரன்’ அறிமுக விழாவில் ஒலித்த வரிகள், இன்னமும் காதுகளில்.
ஓடிடிக்காக
காத்திருக்காதீர்…
ஓடிடியில் வராமலாப் போகும்?
‘‘அமரன்” படத்தை அப்போது பார்ப்போமே… என்று
‘‘பத்தோடு பதினொன்று அத்தோடு இது ஒன்று’’ என்று நினைப்பில்- வீட்டில் முடங்கி விடாதீர்கள்.
படம் ஓடிக் கொண்டிருக்கும் தியேட்டருக்கேப் போய்ப் பார்க்க வேண்டியது, நம் கடமை. அது அமரனுக்கு’’ கட்டாயம். என்ன இருந்தாலும், தியேட்டர் அனுபவம், அது தனி தானே?!
2021-ல் அறிவிக்கப்பட்டு, நேற்றைய தீபாவளி பண்டிகைக்கு அக்டோபர் 30ம் தேதி திரைக்கு வந்திருக்கும் படத்துக்கு கமல்ஹாசன் –- இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி –- சிவகார்த்திகேயன் –- சாய் பல்லவி கூட்டணியின் பகீரதப் பிரயத்தனத்துக்கு நாம் கொடுக்கும் முதல் மரியாதை, மண்ணின் மைந்தன் -– என்றும் நினைவில் வாழும் மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு நாம் செலுத்தப் போகும் வீர வணக்கம். ஒப்புக் கொள்வீர்களா இல்லையா?!
மேஜர் முகுந்த் வரதராஜனாக சிவகார்த்திகேயன், அவரது மனைவி இந்து ரெபக்கா வர்கீஸ் ஆக சாய் பல்லவி : இருவரும் திரையில் வாழ்ந்தே காட்டி இருக்கிறார்கள், மனத்திரையில் இன்னமும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு பிரேமிலும்- உணர்ச்சி துடிப்பு , உயிரோட்டம்.
ஜம்மு காஷ்மீர் எல்லையில் ராணுவ அதிகாரிகளுக்கு நித்திய கண்டம் பூரண ஆயுசு நிலையை ஒவ்வொரு நிமிடமும் உருவாக்கிக் கொண்டிருக்கும் காஷ்மீர் விடுதலை பயங்கரவாதிகள் பின்னணியில் படமாக்கப்பட்டு இருக்கும் காட்சிகள், பயங்கரவாதியாக நடித்திருக்கும் கலைஞர்கள், காஷ்மீர் மக்கள் கூட்டம்…. சிலிர்க்க வைக்கும்!
சாணை பிடிக்கும் கத்தி– அரிவாளிலிருந்து சர் …சர்… என்று பறக்கும் தீப்பொறி மாதிரி பொறி பறக்கும் காட்சிகள், ஸ்டண்ட் இயக்குனர் அன்பரிவ் மற்றும் ஸ்டண்ட் கலைஞர்களின் வியர்வைத் துளிகள்- ராஜ்குமார் பெரியசாமி- சதீஷ் கிருஷ்ணன் (ஒளிப்பதிவாளர்)- ஜிவி பிரகாஷ் (இசையமைப்பாளர்), கலைவாணன் (படத்தொகுப்பு) கூட்டணிக்கு திரைமறைவில் மகுடம் சூட்டி இருக்கிறது! (ரீரிக்கார்டிங்: ஜிவி (கிரேட் விக்டரி)
காதல் -வீரம்- தியாகம்: மூன்றின் கலவையில் அமரன். சிவா -சாய் பல்லவி காதல் காட்சிகள் ஒவ்வொரு பிரேமையும் ருசிக்கு விதத்தில் அழகியல் ரசனையில் செதுக்கியிருக்கிறார் ராஜ்குமார் பெரியசாமி.
‘‘அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்பதில்லையே….’’
‘‘அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே….’’ என்று எழுச்சியூட்டும் உணர்ச்சிப் பிழம் பாக்கும் பாடல் வரிகளை மூன்று வயது மகளுக்கு சொல்லிக் கொடுக்கும் முகுந்தின் அந்தக் காட்சி கல் மனசையும் கரைய வைக்கும். அந்த வீடியோ பாடலிருந்து பொறி தட்டி இருக்கிறது, திரைக்கதையை நகர்த்தும் உத்தியில் ராஜ்குமார் பெரியசாமியை. வீரமகனின் வரலாற்றுச் தியாகத்தை திரையில் கொண்டு வந்து காட்டுவதற்கு அவரைப் பிடர் பிடித்துத் தள்ளி இருக்கிறது. (மகாகவி பாரதிக்கும் இங்கே வீர வணக்கம்).
தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்தி தரணி எங்கும் தமிழனை இன்னும், இன்னும் உயர்த்திப் பிடிக்கும் உன்னத உழைப்பில் கமல்- – ராஜ்குமார் – பெரியசாமி –- சிவகார்த்திகேயன் –- சாய் பல்லவி சங்கமம்.
ராஜ்குமார் பெரியசாமியின் அரியதோர் (பெரியதோர்) வரலாற்றுப் பதிவு!
சிவ கார்த்திகேயன் கலை வாழ்வில் வரலாற்று மைல் கல்!
–வீ. ராம்ஜீ
#Amaran #Sivakarthikeyan #MajorMukundhVaradharajan #Army #Amaran Movie Review #Amaran Tamil Movie Review #Sai Pallavi