சிறுகதை

மேசை – ராஜா செல்லமுத்து

பிரதான சாலையின் ஓரத்தில் பூக்கடை வைத்திருந்தாள் மகேஸ்வரி.

அதிகாலை, மாலை என்று இரண்டு நேரங்களிலும் அந்தச் சாலையில் பூக்களை வைத்து விற்பது வழக்கம்.

இரவு நேரமானால் அருகில் உள்ள கடையின் ஓரத்தில் தன்னுடைய மேசையை வைத்து விட்டு சென்று விடுவாள்.

மறுநாள் அதிகாலையில் அந்த மேசையை எடுத்துப் பூக்களைப் பரப்பி வைத்து விற்பனை செய்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்தாள் மகேஸ்வரி.

இருபக்கமும் வாகனங்கள் சென்று வரும் பாதை என்பதால் வியாபாரம் கொஞ்சம் தடபுடலாகவே இருக்கும்.

இதனால் மகேஸ்வரி கொஞ்சம் கடனில் இருந்து மீண்டிருந்தாள். இன்னும் ஒரு வருடங்கள் இந்த பூ வியாபாரம் செய்தால் வாங்கிய கடனையும் அடைத்து வயிறார சாப்பிட முடியும். குழந்தைகள். வேலைக்கு சென்றாலும் பணத்தை வீட்டிற்கு தராத கணவன். அத்தனையும் சமாளித்து விடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தாள் மகேஸ்வரி.

வழக்கம் போல அந்த இரவு பூ வியாபாரத்தை முடித்துவிட்டு பூக்களைப் பரப்பி வைத்திருக்கும் மேசையைக் கடையின் ஓரத்தில் வைத்து விட்டு இரவு வீட்டிற்குச் சென்று விட்டாள்.

மார்கழி மாதம் என்பதால் கோயிலுக்கு சென்று வரும் பக்தர்களின் கூட்டம் அந்த சாலையில் இருக்கும் என்பதால் அன்று அதிகாலை ஐந்து மணிக்கு எல்லாம் கட்டிய பூக்களை அள்ளிக் கொண்டு தான் எப்போதும் கடை விரித்திருக்கும் இடத்தைத் தேடி விரைந்தாள் மகேஸ்வரி.

அந்தக் கடையில் தான் வைத்த மேசையைத் தேடினாள். அந்த மேசை அங்கே இல்லை. தேடினாள். சுற்றும் முற்றும் தேடினாள். எங்கும் இல்லை .

இங்கதான வச்சாேம்; தினந்தோறும் இங்கே தான் வச்சிட்டு எடுத்துட்டு போவோம்; இப்ப காணமே ?என்று அவள் மனது படபடத்தது சற்று முற்றும் தேடினாள் அந்த மேசை கிடைக்கவே இல்லை.

அவளின் தேடுதல் வேகம் அதிகமானது. மேசையைத் தேடி அலைந்தாள். அது அவள் கண்ணில் தட்டுப்படவே இல்லை.

நேரம் வேறு நெருங்கிக் கொண்டிருந்தது .தரையில் பூக்களைப் பரப்பி வைப்பதற்கும் அந்த சாலை போதுமான வசதியானதாக இல்லை. அந்த மேசை இருந்தால் மட்டுமே பூக்களைப் பரப்பி வைக்க முடியும் என்று அந்த மேசையைத் தேடித் தேடி அலைந்தாள்.

ஒரு வழியாக விடிந்தே விட்டது. கட்டிய பூக்கள் எல்லாம் விற்பனை செய்யப்படாமல் இருந்தன.

ஒரு சில வாடிக்கையாளர்கள் பூக்களைக் கேட்டபோது தான் முடிந்து வைத்திருந்த கட்டில் இருந்து பூக்களை எடுத்துக் கொடுத்ததோடு சரி, பெரிய வியாபாரம் நடக்கவில்லை.

அந்த மேசை எங்கே போனது? என்று தெரியவில்லை.

அன்று அவளுக்கு வியாபாரம் மந்தமானது .வெயில் சுள் என்று அடித்த போது சாலையில் போக்குவரத்து நெரிசலாக ஆரம்பித்தது.

அன்று அவளின் பூ வியாபாரம் படுத்து விட்டது . அன்று அமோகமாக விற்பனை செய்து விடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த பொழுது ஏமாற்றமே இறுதியில் மிஞ்சியது.

அந்த மேசை ராசியான மேசை அதில் பூக்களைப் பரப்பி வைத்தால் நல்ல வியாபாரம் நடக்கும் என்று அவள் மனதிற்குத் தெரியும். ஆனால் அந்த மேசை காணாமல் போனதிலிருந்து அவளின் மனது ரொம்பவே கஷ்டப் பட்டது .

மேசை தயார் செய்ய வேண்டுமென்றால் 2000 ரூபாய்க்கு மேலே செலவு செய்ய வேண்டும் என்ன செய்வது ?என்று யோசித்தாள்.

இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வந்து கொண்டிருந்தோம். அதற்குள் இப்படி ஒரு பெரிய தொகையை கடவுள் செலவு செய்த வைத்து விட்டானே ? என்று வருத்தப்பட்டாள் மகேஸ்வரி .

எதிர் திசையில் தினமும் அவள் கடை போடுவதைப் பார்த்துக் கொண்டிருந்த செருப்புத் தைக்கும் தொழிலாளி மகேஸ்வரியின் பாட்டை அறிந்தார்

தாயி, என்னமாத் தேடுற என்று அவர் கேட்டபோது

ஐயா, எப்பயும் வியாபாரம் செய்ற மேசையை காணாங்க இங்கதான் ராத்திரி வச்சுட்டு போனேன். எங்க போச்சுன்னு தெரியல ஐயா.யாரோ தூக்கிட்டு போய்ட்டாங்கன்னு நினைக்கிறேன். இனி மறுபடியும் ஒரு மேசை செய்யணும்னா நிறைய ரூபாய் ஆகும் .என்ன பண்றதுன்னு தெரியல? என்று வருத்தத்தோடு சொன்னவர்களை ஆறுதல் படுத்தினார் அந்தச் செருப்பு தைக்கும் தொழிலாளி.

நீயேம்மா வருத்தப்படுற ? சித்த இரு என்று சொல்லிய அந்த செருப்பு தைக்கும் தொழிலாளி

சிறிது நேரத்திற்கு எல்லாம் தன் தலையில் ஒரு மேசையைத் தூக்கிக் கொண்டு வந்தார் .

இந்தா மேசை. வீட்ல சும்மா தான் கிடைக்குது. இதுல வச்சு வியாபாரம் பண்ணு என்றார்.

ஐயா இது உங்களுக்கு வேணாமா?இன்று அவள் தயங்கிக் கேட்ட போது,

அட போம்மா, வீட்ல அலங்காரமாக இருக்கிற பொருள் இது. உன்னுடைய அத்தியாவசியத்திற்கு பயன்படுத்துனா அதைவிட சந்தோஷம் வேற எதுவும் எனக்கு இல்லம்மா போ ஏவாரத்த பாரு என்று வாழ்த்தி அனுப்பினார்.

மகேஸ்வரி கண்களில் நீர் பொங்க அந்த மேசையைத் தூக்கிக் கொண்டு வந்து தன் பழைய இடத்தில் வைத்து வியாபாரம் செய்ய ஆரம்பித்தாள்.

ஒரு செருப்பில் ஊசியைக் குத்தியபடியே அந்த செருப்பு தைக்கும் தொழிலாளி மகேஸ்வரி பார்த்துச் சிரித்தார்.

கூறுகெட்ட புள்ள. எதை நம்பி இந்த மேசய இங்கன வச்சுட்டு போச்சுன்னு தெரியல. இந்த புள்ள ஏவாரத்த கெடுக்கிறதுக்குன்னு யாராவது செஞ்ச சூழ்ச்சியா இருக்குமாே ? இல்ல எவனாவது இந்த பனிக்கு கூதல் காயுறதுக்கு மேசைய தூக்கிட்டு போயிட்டானுகளோன்னு தெரியல. எது எப்படியோ? அந்த புள்ள ஏவாரம் நல்லா நடந்தா சரிதான் என்று மனதில் நினைத்தபடியே செருப்பு தைக்க ஆரம்பித்தார் அந்தத் தொழிலாளி.

பிய்ந்து பாேன செருப்பை தைத்துத் தூக்கி நிமிர்த்தினார்.

சரியா இருக்கான்னு பாருங்க என்று செருப்புக்காரனிடம் சொல்ல

அவன் காலில் செருப்பை போட்டுக்கொண்டு ரொம்ப நல்லா இருக்குங்க என்று செருப்பு தைக்கும் தொழிலாளியிடம் பணத்தை நீட்டினான்.

மகேஸ்வரியின் வியாபாரமும் அன்று படுஜோராக நடந்து கொண்டிருந்தது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *