செய்திகள்

மேகாலயா – அசாம் எல்லையில் ஏற்பட்ட வன்முறை: 5 பேர் பலி

இணைய சேவை ரத்து; வேறு மாநில வாகனங்களுக்கு தடை

சில்லாங், நவ. 23–

மேகாலயா – அசாம் எல்லையில் போலீசாருடன் நடந்த மோதலில் மேகாலயாவைச் சேர்ந்த 5 பேர் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, இணைய சேவை ரத்து செய்யப்பட்டதுடன், வேறு மாநில வாகனங்கள் மேகாலயா-வுக்குள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேகாலயா மாநிலத்தில் அசாம் எல்லையையொட்டி உள்ள மேற்கு ஜெய்ன்டியா மாவட்டத்தில் லாரியில் மரம் கடத்துவதாகக் கூறி, அசாம் வனத்துறையினர் தடுத்து நிறுத்தினர். இது தொடர்பாக ஓட்டுநர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அங்கு குவிந்த மக்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் நடந்தது.

இரண்டு மாநில மோதல்

துப்பாக்கிச்சண்டையில் மேகாலயாவைச் சேர்ந்த 5 பேரும், அசாமைச் சேர்ந்த வனப் பாதுகாவலரும் உயிரிழந்தனர். இது இரு மாநில மோதலாக மாறியுள்ளது. வன்முறையைத் தடுக்க மேகாலயாவில் உள்ள 7 மாவட்டங்களில் இணைய சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

அசாம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து மேகாலயாவுக்கு வாகனங்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அசாம் அரசு, நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதுடன், சிபிஐ விசாரணைக்கும் பரிந்துரை செய்துள்ளது. இதேபோல, மத்திய படை விசாரணை நடத்த வலியுறுத்தி இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா-வை மேகாலயா அமைச்சரவைக் குழு நாளை சந்திக்க உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *