துணை முதலமைச்சரின் பேட்டிக்கு கண்டனம்
சென்னை, ஜூலை 3–
மேகதாது அணை திட்டத்தை தமிழ்நாட்டிற்கு புரிய வைக்க முயற்சிப்பதாக கூறும் கர்நாடக மாநில துணை முதலமைச்சருக்கு ஓ. பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
கர்நாடகத்தில் பல அணைகள் கட்டப்பட்டபோது வேடிக்கை பார்த்தது, காவேரி நதிநீர்ப் பிரச்சனை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கினை திரும்பப் பெற்றது, காவேரி நதிநீர் ஒப்பந்தத்தை புதுப்பிக்கத் தவறியது, மத்திய ஆட்சியில் இருந்து கொண்டே காவேரி நடுவர் நீதிமன்ற இறுதித் தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிட நடவடிக்கை எடுக்காதது என கர்நாடகத்திற்கு சாதகமான நிகழ்வுகள் தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நடைபெற்றதன் காரணமாக, தி.மு.க. ஆட்சியில் இருக்கும்போதெல்லாம் தமிழ்நாட்டிற்கு பாதகமான நடவடிக்கைகள் எடுப்பதை அண்டை மாநிலங்கள் வாடிக்கையாக கொண்டிருக்கின்றன.
அண்டை மாநிலமான கேரளாவில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியுடன் நெருக்கமாக இருப்பதாக சொல்கின்ற முதலமைச்சரால் தமிழ்நாட்டிற்கு சாதகமாக எதையும் செய்ய முடியவில்லை. மாறாக, தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து முல்லைப் பெரியாறு பகுதியில் உள்ள மரங்களை வெட்ட அளிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்தது, பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள விடாதது, பேபி அணை கட்டப்படும் என்று அறிவித்தது என பலவிதமான இன்னல்களைக் கேரள அரசு கொடுத்துக் கொண்டு வருகிறது.
இந்த நிலையில், கர்நாடகத்தில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள காங்கிரஸ் கட்சி தனது பங்கிற்கு மேகதாது அணையை கட்டுவோம் என்று கூறி வருகிறது. இதுகுறித்து அண்மையில் புதுடெல்லியில் பேட்டி அளித்துள்ள கர்நாடக மாநில துணை முதல்அமைச்சர், மேகதாது திட்டத்தால் தமிழ்நாட்டிற்கு எந்தவித நஷ்டமும் இல்லை என்றும், இதை புரிய வைக்க முயற்சிக்கிறோம் என்றும் கூறியிருக்கிறார்.
மேகதாது குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், மேகதாது அணை குறித்து தமிழ்நாட்டிற்கு எதிராக தொடர்ந்து கர்நாடக துணை முதலமைச்சர் பேட்டி அளிப்பது கடும் கண்டனத்திற்கு உரியது. ஆட்சிக்கு வந்தவுடன் மேகதாது குறித்து கடுமையாக அம்மாநில துணை முதலமைச்சர் பேசியபோது, மேகதாது பற்றிய முழு விவரத்தை அதிகாரிகள் இன்னும் கர்நாடக துணை முதலமைச்சருக்கு சொல்லியிருக்க மாட்டார்கள்” என்று நகைச்சுவையாக தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் பதில் அளித்தார். இந்தமுறை அளித்துள்ள பேட்டியும் அதேபோல்தான் அமைந்துள்ளது.
தமிழ்நாட்டிற்கு இழைக்கும்
துரோகம்
இந்த நிலையில் கர்நாடக அரசுக்கு எதிராக போராட முடிவு செய்திருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கூறியிருக்கிறார். தமிழ்நாட்டின் உயிர்நாடிப் பிரச்சனையில், கர்நாடகத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியுடன் பேசி, தமிழ்நாட்டிற்கு தண்ணீர் பெற்றுத்தரவும், மேகதாது அணை கட்டப்படாது” என்று கர்நாடக அரசை அறிவிக்கச் சொல்லவும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி நடவடிக்கை எடுக்காமல், போராடப் போவதாக கூறுவது தமிழ்நாட்டிற்கு இழைக்கும் துரோகமாகும்.
தற்போது கர்நாடக அணைகளின் மொத்த கொள்ளளவில் 60 விழுக்காடு நீர் இருக்கின்ற போதே, தமிழ்நாட்டிற்கு மாதாந்திர அடிப்படையில் தர வேண்டிய உரிய நீரை தர கர்நாடகம் மறுக்கின்றது. அணைகள் நிரம்பி வழிந்தால் தான் உபரி நீர் திறந்துவிடப்படும் என்ற முடிவில் கர்நாடக அரசு இருக்கின்றது. இந்த நிலையில், 67 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட மேகதாது அணை கட்டப்பட்டால், ஒரு சொட்டு நீர் கூட தமிழ்நாட்டிற்கு கிடைப்பதற்கான வாய்ப்பு இல்லை.
இந்த நிலையை முதலமைச்சர் ஸ்டாலின், கர்நாடக மாநில முதலமைச்சருக்கு புரிய வைத்து, மேகதாது திட்டத்தினை கைவிட வலியுறுத்த வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.