அமைச்சர் துரைமுருகன் பேட்டி
சென்னை, ஜூன் 4–
தமிழகத்திற்கு ஜூன் மாதம் தர வேண்டிய தண்ணீரை கர்னாடகா தரவில்லை என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து பேசுவதற்காக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று டெல்லி புறப்பட்டு செல்கிறார். அவர் நாளை மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செஷகாவத்தை சந்தித்து பேச உள்ளார். இந்நிலையில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
“கர்னாடக அரசு ஜூன் மாதம் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய தண்ணீரை வழங்கவில்லை. ஜூன் மாதம் 9.19 டி.எம்.சி தண்ணீர் கொடுத்திருக்க வேண்டும், ஆனால் 2.83 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே வழங்கப்பட்டது. தண்ணீரை வழங்காததால் 6.357 டி.எம்.சி நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின்படி கர்னாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிட வேண்டும். தமிழ்நாட்டிற்கு நீர் வழங்க கர்னாடக அரசை காவிரி மேலாண்மை ஆணையம் அறிவுறுத்த வேண்டும். தமிழக விவசாயிகளின் நலனுக்காக டெல்லி சென்று மத்திய அமைச்சரை சந்தித்து வலியுறுத்த உள்ளேன்.
தடுப்பணை விவகாரத்தில் தமிழக அரசுடன், கர்னாடக அரசு பேசினால் வரவேற்போம். நமக்கான உரிமையை நாம் கேட்கிறோம். மேகதாது அணை ஏன் கூடாது என்பதை காரணத்தோடு கர்னாடகாவிடம் விளக்குவோம்” என்று கூறினார்.