ஆர்.முத்துக்குமார்
இன்று, மார்ச் 20, உலக சிட்டுக்குருவிகள் தினம்…. நம் மனதில் நகரங்களிலும் கிராமப்புறங்களிலும் காணவே முடியாதா? என்ற தவிப்பை ஏற்படும் தினம் என்றுதான் சொல்ல வேண்டும்.
எண்ணிக்கை குறைந்து விட்டதே; அறவே நம்முடன் இல்லையே என கவலைப்படும் இத்தருணத்தில், செல்போன் அலைவரிசையின் எதிரொலியாய் இந்த மெல்லிய இனம் செத்து மடிந்து வருவதாக கூறப்படுகிறது.
டிவி ஒளிபரப்பு, செல்போன் சாதனங்கள் எல்லாமே ஒலி- ஒளியை உலகெங்கும் பரப்பி வருவதால், அந்த அலைகீற்று மெல்லிய குருவிகளை அழித்து விட்டதாக சொல்லப்படுவதை மறுப்பதற்கு இல்லை. ஆனால் பல நாடுகளில் கூட்டம் கூட்டமாக கூடி “தவ்வித் தவ்வி” சென்று ‘விடுக் விடுக்’கென்று பறந்து, வாழ்ந்து கொண்டுதானே இருக்கிறது.
அப்பகுதிகளிலும் இதே செல்போன் டவர்களும் டிவி ஒளிபரப்பும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆகவே குருவிகளின் அழிப்பை பற்றிய கவலையை மறந்து விட்டு, குருவிகள் நம்மோடு மீண்டும் மகிழ்ச்சியாக வாழ வழிகாண்பதே சரியான முடிவாக இருக்கும்.
முறையான அறிவியல் பூர்வமாக நல்ல திட்ட வடிவத்தை தயார் செய்து, அதை பொதுமக்கள் கடைபிடிக்கச் செய்தால் குருவிகளின் எண்ணிக்கையை உயர்த்தி விடலாம். முதலில் ‘சிமெண்ட் காடாக’ நாம் மாற்றிவிட்ட நகர்ப்பகுதிகளில் குருவிகளுக்கும் காக்கைகளுக்கும் உணவு, குடிக்க தண்ணீர், ஒதுங்க நிழல் தரும் இடங்களை அமைத்தாக வேண்டும்.
நம் இல்லங்களில் நிழல் உள்ள பகுதிகளில் பறவைகளின் கண்ணில் படும்படியான இடத்தைத் தேர்வு செய்து, அங்கே தினமும் கம்பு, தினை, அரிசி போன்ற தானியங்களை ஒரு தட்டில் வைக்கலாம். பின்னர் அதன் அருகிலேயே ஒரு மண் பானையில் தண்ணீரும் வைக்கலாம்.
சில வாரங்களில் சின்னஞ்சிறு பறவைகள் ஒன்று, இரண்டாக வரத் தொடங்கும். அடுத்த சில நாட்களில், காகம், மைனா, புறா போன்ற பறவைகளும் வரத் தொடங்கும்.
சில நாட்களில் சிட்டுக்குருவிகளும் வரும். அவை தினமும் வரத் தொடங்கிய பின், கூடு அமைப்பதற்கு எளிதாக சிறிய மரப்பெட்டிகள், மூங்கில் குழல்கள் அல்லது அட்டைப் பெட்டியை யார் கைக்கும் எட்டாத உயரத்தில் உறுதியாக அசையாதவாறு இணைத்து வையுங்கள். பெட்டிக்குள் குருவிகள் செல்லும் துவாரத்தை சிறிதாக ஒன்றரை அங்குலத்தில் வைக்க வேண்டும்.
இனப்பெருக்க காலம் தொடங்கியவுடன் குருவிகள் ஒன்றன் பின் ஒன்றாக வரத் தொடங்கும். பின்னர் வலிமையான பறவைகள் அந்தக் கூட்டை நாடி வரும். இணை சேர்ந்து கூடு அமைத்த பின்னர் மூன்றில் இருந்து நான்கு முட்டைகள் வரை இட்டு, பதினாறு நாட்கள் அடைகாத்து குஞ்சுகளைப் பொறிக்கும்.
முட்டையில் இருந்து வெளியில் வந்த குஞ்சுகள், தாயிடமிருந்து புழு, பூச்சி போன்ற புரதமிக்க உணவைப் பெற்று, விரைந்து வளரும். குஞ்சுகள் முழு வளர்ச்சி அடைந்த பதினாறு நாட்களில் கூட்டை விட்டு வெளியேறும். பின்னர் சிறிது காலம் தாயுடன் திரியும். ஓரிரு மாதங்களில் இக்குஞ்சுகள் தங்களின் வாழ்க்கையைத் தனியாக தொடங்கும். நம்மால் பெரிய காடுகளைக் காப்பாற்ற முடியாவிட்டாலும்கூட இந்த சின்னஞ் சிறு சிட்டுக்குருவிகளைக் காப்பாற்றி விட முடியும்.
முற்றத்தில் வந்தமரும் சிறுகுருவி இறுக்கமான மனதுக்கு ஆறுதல் தரும் அருமருந்து என்பதை ரசித்தவர்கள் கூறுவர்!