சிறுகதை

மெய்வருத்தக் கூலி – ராஜா செல்லமுத்து

விஞ்ஞானம் என்பது வேறு; ஜோதிடம் என்பது வேறு விஞ்ஞானத்திற்கும் ஜோதிடத்திற்கும் தொடர்பு இருக்கிறது என்று சொன்னாலும் சில விஷயங்கள் அதைப் பொய் என்று நிரூபித்துக் கொண்டுதான் இருக்கிறது .

அதற்கு பரசுவின் வாழ்க்கையே ஒரு சாட்சியாக இருந்தது.

பரசு பத்தாவது மேல் படிக்க மாட்டான் .அவனுக்குப் படிப்பு ஏறாது என்று அவனை சின்ன வயதில் சொல்லி வைத்தான் ஒரு ஜோதிடர்.

குடும்பத்தில் இருப்பவர்கள் கஷ்டப்படுவார்கள் .அப்பா வேலை வெட்டி இல்லாமல் பரதேசம் போவார். குடும்பம் விளங்காது என்றெல்லாம் அபசகுனமான வார்த்தைகளை அள்ளி விட்டுக் கொண்டிருந்தான் அந்த ஜோதிடர்

அந்த மாவட்டத்தில் அந்த ஜோதிடரின் பெயர் பிரபலம் என்பதால் அவர் என்ன சொல்கிறாரோ அதையெல்லாம் உண்மை என்று நம்பி அவரின் வாக்குப் படியே வாழ்ந்து வந்தார்கள் மக்கள் .

நம்பிக்கை வேறு .மூடநம்பிக்கை வேறு எதையும் பகுத்தறிவு செய்து வாழ்க்கை நடத்துவன் தான் உண்மையான மனிதன்.

கைரேகை கிளி ஜோசியம் இவைகள் எல்லாம் பார்த்துக் கொண்டு அது சொல்லும் சொல் படி நடந்து வாழ்க்கையை வீணாக்கிக் கொண்டு இந்த மண்ணில் நிறைய மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்

பரசு இன்றைக்கு பெரிய இடத்தில் இருக்கிறான். நல்ல நிலைமையில் கை நிறைய வருமானம். படுக்கைய றைக்குள் கார் செல்லும் அளவிற்கு விரிந்து பறந்த பங்களா. வங்கிக் கணக்கில் கோடிக்கணக்கான சொத்துக்கள். ஆயிரம் பேருக்கு மேல் வேலை கொடுத்து அவர்கள் வாழ்க்கையைச் சமப்படுத்தி கொண்டிருக்கும் ஒரு முதலாளி .

ஆனால் அவன் ஊரில் அந்த பிரபல ஜோதிடம் சொன்ன விஷயம் பரசுக்கு பத்தாவது மேல் படிப்பு கிடையாது. குடும்பம் நிர்மூலமாகும்; அப்பா பரதேசம் போவார்; வறுமையின் பிடியில் சிக்கித் தவிப்பீர்கள்: என்றெல்லாம் சொல்லிவிட்டு போன அந்த ஜோதிடரின் வாக்கை அப்படியே புரட்டிப் போட்டான் பரசுராம்.

பல்கலைக்கழகம் வரை படிப்பு கைகடிய போதும் போதும் என்ற அளவிற்கு வரும் வருமானம் . அவரை நம்பி ஊழியர்கள் என்று எவ்வளவோ பேர் பரசுவை நம்பி இருந்தார்கள். பரசுஅவருடைய நிறுவனத்தில் வேலை செய்யும் மனிதர்கள் யாரும் ஜோதிடம் பார்க்கவோ ஆருடம் சொல்லவும் அவர்கள் அது இதுவென்று சொல்லிக் கொண்டு வருவதையோ அவர் நம்ப மாட்டார்.

காரணம் தன் வாழ்க்கையில் நடந்த நிகழ்வை தன் சிறுவயதில் ஒரு ஜோதிடம் சொன்ன பொய்யை அப்படியே அடித்து நொறுக்கி இன்றைக்கு நிமிர்ந்து நிற்கிறார் என்றால் “தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்” என்ற திருக்குறளைத் தான் என்று அடிக்கடி சொல்வார் பரசு.

அவரின் அலுவலகத்தில் அன்று ஒரு நாள் திருவள்ளுவர் படம் பொறித்த காலண்டரை வாங்கி வந்தான் ஒரு ஊழியன்.

அதை பரசுராம் தன் அறையில் மாட்டச் சொன்னார் . அதனடியில் “தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்” என்ற குறள்ப்பாவை எழுதி ஒட்டச்சொன்னர்.

அந்த ஊழியன் எந்த திசையில் திருவள்ளுவர் படத்தை நன்றாக இருக்கும் என்று கேட்டான்.

பரசுராம் அவனைப் பார்த்து திட்டவோ முறைக்கவாே இல்லை ; மாறாகச் சிரித்தார் .

‘‘அறைக்குள் வருவோர் பார்க்கும் இடத்தில் வை ’’ என்றார்.

அப்படியே வைத்தான்; படம் பார்த்தான்; குறள்ப்பாவைப் படித்தான்; பொருள் புரிந்து நெஞ்சை நிமிர்த்திப் பெருமிதத்துடன் சென்றான்.

அவனைப் பரசுராம் கம்பீரமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *