சிறுகதை

மெய்ப்பொருள் காண்பது அறிவு | ராஜா செல்லமுத்து

Spread the love

‘‘வெங்கட்.. எங்க இருக்க..?’’

‘‘வீட்டுல..’’

‘‘ம்.. நான் வீட்டுக்கு வரவா..?’’

‘‘வேணாம்..’’

‘‘ஏன்..?’’

‘‘எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு..’’ என்று வெங்கடேஷ் நழுவ அவனை ரவி விடுவதாக இல்லை.

‘‘நான் வாரேன்..’’ என்று கூப்பிடுதற்குள் வெங்கடேஷ் போனைக் கட் செய்தான்.

‘‘அடப்பாவி பேசிட்டு இருக்கும் போதே போன கட் பண்றானே.. இவனெல்லாம் நாகரீகம் தெரிஞ்சவனா என்ன..?’’ என்று சலித்த ரவி மறுபடியும்

வெங்கடேசனுக்கு பொன் செய்தான்.

‘‘டிரிங்.. டிரிங்..’’ வெங்கடேசனின் போன் அலற ஆரம்பித்தது.

‘‘இவனோட ரெம்ப டார்ச்சரா போச்சு.. எப்பப் பாத்தாலும் போன் பண்ணிட்டே இருக்கானே..’’ என்று எரிச்சல் பட்டுக்கொண்டு வெங்கடேஷ் தன் செல்போனை

எடுக்காமலேயே இருந்தான். உடனிருக்கும் நண்பர்கள் அவனை உற்றுப் பார்த்தனர்.

‘‘என்னடா.. அப்பிடி பாக்குறீங்க..?’’

‘‘இல்ல. இவ்வளவு நேரம் உன்னோட போன் அடிச்சிட்டே இருக்கு. எடுக்க மாட்டேங்கிறியே அதான்..’’ என்று நண்பர்கள் கேட்டனர்.

‘‘ஒருத்தனோட ரொம்ப டார்ச்சரா இருக்கு. ராத்திரி பகல்ன்னு பாக்காம எப்போ பாத்தாலும் போன் பண்ணிட்டே இருக்கான்.. அதிலயும் போன எடுத்தா

வைக்கவே மாட்டான். சும்மா தொண தொணன்னு பேசிட்டே இருப்பான்..’’ என்று ரவிச்சந்திரனைக் குற்றம் சாட்டினான் வெங்கடேசன்.

‘‘ரவிச்சந்திரன் யாருடா..?’’ என்று ஒருவன் கேட்டான்.

‘‘என்னோட பிரண்ட்..’’என்று உதட்டில் ஒட்டாம பதில் சொன்னான் வெங்கடேசன்.

‘‘ம்ம்.. பிரண்டுன்னு சொல்ற..?அவன் போன் பண்ணுனா எடுக்காம ரொம்ப டார்ச்சர் பண்றான்னு சொல்ற..? நீயெல்லாம் எப்படிடா ரவிச்சந்திரன் என்னோட பிரண்டுன்னு வாய் கூசாம சொல்ற..?’’ என்று வெங்கடேசனிடம் கேட்க அதற்கு எதுவும் பதில் சொல்லாமலே இருந்தான் வெங்கடேசன்.

‘‘பிரண்டுன்னு இருந்தா.. போன் பண்ணத்தாண்டா செய்வாங்க.. அதுக்காக பேசாம இருக்கக்கூடாது. கால் பண்ணுனா எடுத்துப்பேசு.. இல்ல நீ.. மனுசன்னு சொல்றதுக்கே அர்த்தம் இல்லடா..’’ என்று வெங்கடேசனை விட்டு விலாசினான்.

‘‘ச்சே.. இவன் என்ன ஒரு போன் கால எடுக்கலன்னு தெரிஞ்சிட்டு இப்பிடி பேசிட்டு இருக்கான். ரவியோட டார்ச்சர் பத்தி என்ன தெரியும் இவனுகளுக்கு..?’’

என்று வெங்கடேஷ் சலித்துக்கொண்டான்.

அன்று முழுவதும் ரவிச்சந்திரனின் செல்போன் காலை வெங்கடேஷ் எடுக்கவே இல்லை.

‘‘என்ன.. வெங்கி ரவிச்சந்திரன மொத்தமா நிராகரிச்சிட்ட போல..’’ என்று அவனின் நண்பர்கள் சொன்னார்கள்.

‘‘ஆமா அவனோட தொல்லை தாங்க முடியல காலையிலயும் ராத்திரியும் அலாரம் வைக்கிற மாதிரி கரைக்டா பேசிட்டே இருக்கான் . அவனோட

இந்த டார்ச்சர் தாங்க முடியாமத்தான் இன்னைக்கே அவன் போனையே எடுக்கல..’’ என்று ரொம்பவே வீராப்பாகப் பேசினான் வெங்கடேஷ்.

அவன் பேசுவதை யாரும் பெரிதாகவே எடுத்துக்கொள்ளவில்லை. ரவிச்சந்திரனுக்கு மட்டும் ரொம்பவே வருத்தம் இருந்தது.

‘’நண்பன் நாம என்ன பெருசா கேட்டுரப் போறோம்.. ஒரு ஹாய்.. ஒரு ஹலோ.. ஒரு குட்மாரினிங்.. ஒரு குட்நைட்.. நண்பன் கிட்ட நலம் விசாரிக்கிறது

தப்பா என்ன.. ? இதுக்கு போயி இவ்வளவு சலிச்சிகிட்டு போன எடுக்காம விட்டுட்டானே. இருக்கட்டும்.. இருக்கட்டும்.. யார்கிட்டயும் ரொம்ப வச்சுக்கிட்டம்னால எல்லாமே இப்படித்தான்.. ரொம்ப ஒட்டாம கொஞ்சம் எட்டியே நின்னாதான் நமக்கு மரியாதை; இல்ல நம்மள ரொம்பவே

எளக்காரமா நினைப்பாங்க..’’ என்ற ரவிச்சந்திரனும் கொஞ்சம் கோபமாகவே இருந்தான். காலையிலிருந்து அவனுக்கும் வெங்கடேஷ் மீது கோபமாகவே

இருந்தது. வழக்கம் போல் காலை மாலை என்று பேசுவதை நிறுத்தினான் ரவிச்சந்திரன். ஒரு நாள் முழுக்க ரவிச்சந்திரன் அப்படியிருந்தது அவனுக்கு என்னவோ போல் இருந்தது.

இதற்கு எதிர் மறையாய் இருந்தான் வெங்கடேஷ்…

‘அப்பாடா.. இப்பதான் நமக்கு நிம்மதி. ரவிச்சந்திரனோட போன் வந்தாலே நமக்கு பக்கு பக்குன்னு அடிக்கும். காலையிலயும் சாயங்காலமும் நம்மள போட்டு வறுத்து எடுத்திருவான்..’ என்று நினைத்துக்கொண்டே இரவு நேரத்தில் தன்னுடைய ஸ்மார்ட் போனை பேண்ட பாக்கெட்டில் வைத்துக்கொண்டு டூவிலரில் போய்க்கொண்டிருந்தான். பேண்ட் பாக்கெட்டில் சரியாக வைக்காததால் வெங்கடேசின் ஸ்மார்ட் போன் கொஞ்சம் கொஞ்சமாய் நழுவி வந்து அவன் டூவிலர் ஒரு ஸ்பீடு பிரேக்கில் ஏறிய போது ‘பட்’ எனக்கீழே விழுந்தது. தன்னுடைய செல்போன் கீழே விழுந்தது கூடத் தெரியாமல் போய்க் கொண்டிருந்தான் வெங்கடேஷ் . குறிப்பிட்ட தூரம் சென்ற போது பட்டென தன் பேண்ட் பாக்கெட்டைத் தொட்டுப் பார்த்தவனுக்கு பகீரென்றது.

‘‘ஐயய்யோ நம்ம செல்போன் எங்க காணோம்..?’’ அவன் நின்று கொண்டிருக்கும் இடம் ஒரு ஹைவேஸ். ஆதலால் யாரிடமும் போன் வாங்கிப் பேசவோ டெலிபோன் பூத்தோ – எதுவும் அங்கு இல்லை.

எல்லா போன் நம்பர்களும் சில முக்கியமான டாக்குமெண்ட்ஸ் கூட செல்போன்ல தானே இருக்கு இப்படி போயிருச்சே என்று புலம்பினான் வெங்கடேஷ்.

‘‘யார்கிட்ட எப்பிடி கேக்க முடியும்..? எங்க விழுந்திச்சுன்னு தெரியலையே..? திரும்பிப் போனாலும் கண்டுபிடிக்க முடியாது..’’ என்று குழம்பிப்போய்

நின்று கொண்டிருந்தான் வெங்கடேஷ்

**அப்போது ரவிச்சந்திரன்

‘‘ச்சே.. இவன் தான் மனுசனா இல்லன்னா.. நாமளும் அப்படியிருக்கக் கூடாது..’’ என்று நினைத்து வெங்கடேசுக்கு போன் செய்தான்.

‘‘டிரிங்.. டிரிங்..’’ என்று அடித்துக்கொண்டே இருந்தது.

‘‘என்ன.. இவன்.. இவ்வளவு நாள் கழிச்சு பேசுறோம்.. இப்பக்கூட போன எடுக்க மாட்டேன்கிறானே..!’’ என்று சலித்துக்கொண்டிருந்த போது

‘‘ஹலோ யாருங்க..?’’ என்று வெங்கடேஷ் போனிலிருந்து யாரோ பேச

‘‘என்னது வெங்கடேசா?’’

‘‘ஹலோ சார்.. இது யார் போன்னுன்னு எனக்கு தெரியாது.. ஹைவேஸ்ல போயிட்டு இருக்கும் போது கீழ கிடந்துச்சு யாராவது போன்

பண்ணுவாங்களான்னு பாத்தா.. இதுவரைக்கும் யாரும் போன் பண்ணல. நீங்க.. பண்ணீட்டீங்க..’’ என்று எதிரி திசையிலிருந்து பேச

‘‘சார்.. நீங்க எங்க இருக்கீங்க..?’’ என்று ரவிச்சந்திரன் கேட்டான்.

‘‘செங்கல்பட்டு ரோட்ல.. ஒரு கோயில் இருக்கும். அது லெப்ட்ல ஒரு சின்ன ரோடு ; அங்க தான் நின்னுட்டு இருக்கேன்..’’

‘‘ஓகே.. சார்.. நான் அங்க வாரேன்..’’ என்று ரவிச்சந்திரன் சொல்ல

‘‘நீங்க ஏன்..? இங்க வாரீங்க..’’ என்று எதிர் திசையில் இருந்தவன் கேட்க

‘‘போன் வாங்க..’’

‘‘என்னது போனா..? யார் நீங்க..? என்று அவன் கேட்டான்.

நான் அந்த போனுக்கு சொந்தக்காருடைய பிரண்டு சார்.என்பேரு ரவிச்சந்திரன் சார்..’’

‘‘இல்லங்க.. சார். நான் போனை உங்க பிரண்ட கையில் தான் கொடுப்பேன். உங்ககிட்ட கொடுக்க முடியாது சார்.. என்று எதிர் தரப்பில் சொன்னவுடன்

‘‘உங்க பேரு என்ன? என்று ரவிச்சந்திரன் கேட்டான்.

‘‘என் பேரு அன்பு..’’ என்று எதிர் திசையிலிருந்து வந்தது.

‘‘எந்த அன்பு..’’ என்றான் ரவி.

‘‘நான் எல்ஐசி அன்பு..’’ என்றான்.

‘‘அன்புன்னா.. கே.கே நகர் அன்புவா..’’

‘‘ஆமா..அப்ப நீங்க..’’

‘‘நான் உங்க பிரண்ட ரவிச்சந்திரன் தான்..’’ என்று ரவி சொல்ல

‘‘நல்லதா போச்சு நண்பா.. இந்த செல்போன எப்பிடி யார்கிட்ட குடுக்கிறதுன்னு நினைச்சிட்டு இருந்தேன்.. சரியா நீயே பேசிட்ட ரவிச்சந்திரன்..’’ என்று அன்பு சொன்னான்.

நான் அங்க வாரேன். நீ அங்கேயே இரு என்று ரவிச்சந்திரன் அன்புவிடம் பேசிவிட்டுஅங்கே சென்றான். இருவரும் நலம் விசாரித்தனர்.

அன்பிடமிருந்து செல் போனை கையோடு வாங்கி வந்தான் ரவி.

** ஒரு மணி நேர இடைவெளிக்குப்பின் பிறகு வெங்கட் தன் செல்போனுக்கு இன்னொரு நம்பரிலிருந்து போன் செய்திருந்தான்.

‘‘ஹலோ.. நான் வெங்கட் பேசுறேன்.. காணாம போன போன் என்னோடது தான்..’’ என்று அவன் சொன்னான்.

‘‘ஹலோ.. நான் அருண் பேசுறேண்டா.. ஒன்னோட போன் வீட்டுல தான் இருக்கு.. இப்பதான் ஒன்னோடு போன கீழ கிடந்து எடுத்து வச்சிருந்த ஒருத்தங்கிட்டே இருந்து ரவிச்சந்திரன் வாங்கிட்டு வந்து குடுத்தான்..’’ என்று அருண் சொன்ன போது வெங்கடேசுக்கு வேர்த்து விறுவிறுத்தது.

‘‘பாத்தியா உனக்கு எப்பவும் போன் பண்ணும் போது திட்டுவியே.. அவன் சரியான நேரத்துக்கு போன் பண்ணுனதுனால.. தான் ஒன்னோட போன் கெடச்சது. இல்ல.. அவ்வளவு தான் . அதுவும் உன்னோட செல் போன எடுத்தவரு ரவிச்சந்திரனோட பிரண்டாம்.

இனிமேலாவது யார் போன் பண்ணுனாலும்.. எடுத்துப் பேசு. என்ன காரணத்துக்கு.. போன் பண்றாங்கன்னு.. கொஞ்சம் பேசிப் பாத்துட்டு போன கட்பண்ணு’’,

என்று அருண் சொன்ன போது….

வெங்கடேஷின் கன்னங்களில் ‘பளார்..’’ என்று அறைவது போலிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *