சிறுகதை

மெது வடை இல்லம் – மு.வெ.சம்பத்

முருகன் சென்னையில் வேலைக்குச் சேர்ந்ததும் மிகவும் பெருமையாக நினைத்தான். தனது கனவு பலித்ததென மனதில் ஆரவாரம் தெரிக்க அலுவலகம் நோக்கி நடந்தான். தனது பணிவான நடவடிக்கையாலும் தனது தந்தை மற்றும் ஆசிரியர் கூறிய அறிவுரைகளை மனதில் ஆழப் பதித்துக் கொண்டு செய்கையில் அதை அமுல் படுத்தியதாலும் அவனுக்கு நல்ல பலன்களே கிடைத்தது. முதல் ஊதியம் வாங்கியதும் ஊருக்கு வந்து தருவான் என்று எதிர்பார்த்த தந்தை ஏமாந்து போனார்.

தந்தையின் வங்கிக் கணக்கிற்கு ஒரு தொகையை அனுப்பி விட்டு கடிதம் மூலம் பணி அலுவல் கராணமாக நேரில் வர இயலவில்லை என எழுதியிருந்தான். தந்தைக்கு சற்று ஆறதலாக இருந்தாலும் அடுத்தடுத்த மாதங்களும் இதே நிகழ்வு நடந்தது கண்டு வருத்தமடைந்தார். அப்போது வீட்டிற்கு வந்த ஆசிரியர் பணி நிரந்தரமானதும் உடனே திருமண ஏற்பாடுகளை செய்யுங்கள். அப்போதாவது வருகிறானா என்று பார்ப்போம் என்றார். அனுபவிக்கும் வயசு என இருவரும் ஒட்டு மொத்தமாகக் கூற அங்கு சற்று அமைதி நிலவியது. பறக்கும் பறவை ஒரு இடத்தில் நிற்குமா என்ற ஆசிரியரிடம் முருகன் தந்தை ஒரு கட்டத்தில் கூட்டுக்கு வரத் தானே வேண்டும் என்றார். முருகன் கிராமம் ஒரு டவுனை ஒட்டியே இருந்ததால் வசதி வாய்ப்புகள் நிறையவே இருந்தன.

அன்று வந்த கடிதத்தில் முருகன் தனக்கு பணி நிரந்தரம் ஆனதாக எழுதியதைப் படித்த அவனது தந்தை இதை சொல்லக் கூட நேரில் வரக் கூடாதா என நினைத்த வேளையில் அங்கு வந்த ஆசிரியர் சீக்கிரம் மேளம் கொட்டி விடுங்கள் என்றதும் முருகன் தந்தை உடனே செய்து விடுவோம் என்றார். மனதிற்குள் பையனைக் கேட்காமல் பண்ணினால் அவன் மறுத்தால் என்ன செய்வது என்ற எண்ணம் வந்தது. ஒரு கடிதம் மூலம் அவனது விருப்பத்தை அறிந்து கொள்ளுவோம் என நினைத்து கடிதம் அனுப்பினார். இரண்டு நாளில் முருகன் தங்கள் விருப்பமே என் விருப்பம் என்று பதில் எழுதினான். வீட்டு வாசல் வழியாகச் சென்ற சிவாவை அழைத்த முருகனின் தந்தை என்னப்பா, உன் நண்பன் எவ்வாறு உள்ளான் என்று கேட்க, சிவா சற்று தாழ்ந்த குரலுடன் எங்கே அவன் நகர வாழ்க்கையில் சிக்கி அதுவே சொர்க்கம் என உள்ளான் என்றான். என்ன செய்வது அவனுக்கு ஊரே மறந்து போச்சு என்ற சிவாவிடம் முருகன் தந்தை சரி பார்க்கலாம் என்று ஒரு விரக்தியான பதில் அளித்ததும் சிவா வருகிறேன் என்று விடை பெற்றான்.

அன்று டவுனுக்குச் சென்ற முருகன் தந்தை மாணிக்கம் தனது நண்பன் ராமு வீட்டிற்குச் சென்று ராமுவை சந்தித்து உரையாடினார். ராமு மாணிக்கத்திடம் பையன் எப்படியுள்ளான் என்று கேட்டதும் நன்றாகவே நகர வாழ்க்கையை அனுபவிக்கிறான் என்றார். ராமு உனது பெண்ணை எனது பையனுக்கு திருமண பந்தம் ஏற்படுத்தினால் என்ன என்று மாணிக்கம் கேட்க, ராமு தனது மகளை அழைத்து என்னம்மா, முருகனைத் திருமணம் செய்து கொள்கிறாயா என்றார். அவர் மகள் வள்ளி சரியென தலையை மட்டும் அசைத்து தனது விருப்பத்தைத் தெரிவித்தவுடன் மாணிக்கம் சீக்கிரம் மேளம் கொட்டலாம் என்றதும் ராமு உனது பையனின் விருப்பம் கேட்க வேண்டுமென்றான்.

மாணிக்கம் நேற்று என் பையனிடம் பேசி விட்டுத் தான் வந்தேன். அவனுக்கும் விருப்பமே என்றதும், புன்னகை பூத்த முகத்துடன் ராமு மேளம் கொட்டி விடலாமென்றார்.

திருமணம் முடிந்து சென்ற முருகன் கிராமத்துப் பக்கமே வரவில்லை. வள்ளி மற்றும் இரண்டு தடவை வந்து சென்றாள். மாணிக்கத்தை தொடர்பு கொண்ட ராமு, ஒரு சின்ன யோசனை என்றார். அதாவது நாமிருவரும் தனித்தனியாக இருக்காமல் ஒரே இடத்தில் இருக்கலாமே என்றார்.

மாணிக்கம் ராமு நீ இங்கு வந்து விடு, இது பெரிய வீடு எங்களால் பராமரிக்க இயலவில்லை. உனது வீட்டை வாடகைக்கு விட்டு விடு என்றார். சரி என்ற ராமு மாணிக்கம் வீட்டிற்கு வந்து தங்கினார். இருவருக்கும் பொழுது நன்றாகவே சென்றது. பேரப் பிள்ளைகளைப் பார்க்க மாணிக்கம் மற்றும் முருகன் குடும்பத்தினர் இருவரும் சென்று வருவார்கள். முருகனிடம் வந்து சென்ற போதெல்லாம் ஒரு தொகையைத் தருவார்கள்.

காலங்கள் உருள, கிராமத்தில் வாழ்ந்த மாணிக்கம் மற்றும் ராமு தம்பதியினர் தங்களது வாழ்வுப் பயணத்தை முடித்துக் கொண்டு சென்று விட, முருகன் எல்லா சொத்துக்களையும் விற்று விட்டு குடும்பத்தில் உள்ளவர்கள் பெயரில் பிரித்து வங்கியில் நிரந்தர வைப்புத் தொகையில் கட்டினான். வள்ளிக்கு மிகவும் வருத்தம் இவர் எல்லாவற்றையும் ஒட்டு மொத்தமாக விற்றது. முருகன் பையன்கள் வெளி நாட்டில் வேலைக்குச் சென்றதால் முருகன் மிகவும் மகிழ்வடைந்தான்.

முருகனுக்கு வர வர பணத்தின் மேல் நாட்டம் அதிகமானது. ஏற்கனவே சென்னையில் வீடு வாங்கியிருந்ததால் பணம் முழுவதும் வங்கிக் கணக்கில் சென்றது. இதற்குப் பிறகு முருகனின் போக்கே மாறி விட்டது.

முருகன் தனது நண்பனின் வீட்டு மங்கல நிகழ்விற்காக கிராமத்திற்குச் சென்றான். அங்கு வந்த அனைவரும் மிகுந்த அன்பு மற்றும் பாசத்துடன் முருகனிடம் பேசினார்கள். முருகன் தனது உடம்பில் புது இரத்தம் பாய்ந்தது போன்று உணர்ந்தான்.

அப்போது சிவா வா நமது டீக்கடைக்கு சென்று வருவோம் என அழைக்க, முருகன் அங்கு சென்று அவனது விருப்பமான மெதுவடையைச் சாப்பிட்டான். பின் மண்டபத்திற்கு வந்தவர்கள் விழாவில் மும்மரமானார்கள். மங்கல நிகழ்வு முடிந்ததும் ஒருவர் வந்து முருகன் காதில் ஒரு சங்கதியைச் சொன்னார். ஏதும் ஒரு பதில் கூறாமல் முருகன் சரியென்று சொல்லி நகர்ந்தான். மனதில் நகர வாழ்க்கையை விட முடியாமலும் கிராம வாழ்க்கையை திரும்பவும் ஏற்றுக் கொள்ள முடியாமலும் இரு தலை கொள்ளி எறும்பு போன்ற நிலையில் முருகன் தள்ளப்பட்டதாக உணர்ந்தான்.

சென்னைக்கு வந்ததும் மனைவியிடம் சென்று வந்ததைப் பற்றி விவரித்தான். வள்ளி ஏதும் பதில் கூறாமல் வெறும் தலையை மட்டும் ஆட்டினாள். வரும் நாட்களில் முருகன் சில நடவடிக்கைகளை மேற்கொண்டான். தனது கிராமத்தில் தான் விற்ற வீட்டை வாங்கி சில மாற்றங்கள் செய்தான். எல்லா பொறுப்புக்களையும் சிவாவிடம் ஒப்படைத்தான். வீட்டு வேலை முடிந்து வீடு புதுப்பிக்கப்பட்டதும் ஒரு சிறு விழாவிற்கு ஏற்பாடு செய்தான். வள்ளி தனது தோழிகளுடன் கலந்து கொண்டாள். எல்லோர் வாய் முணுமுணுக்குமாறு வீட்டிற்கு முருகன் பெயரிட்டதது தான். வீட்டை முருகனுக்கு திருப்பித் தந்தது மெது வடை, டீ விற்கும் மாரி தான். அதன் நன்றிக் கடனாக வீட்டிற்கு மெது வடை இல்லம் என்று பெயரிட்டான். என்னே நன்றிக் கடன். உயிரோடு தந்தை இருக்கும் போது தந்தைக்கு நன்றிக் கடன் செலுத்தவில்லையே என்றார்கள் சிலர். காலை விழாவிற்கு மாரியோட சிற்றுண்டி தான். மெது வடை ஒரு பிரதான சிற்றுண்டி. மெது வடை, சிவா ,மெது வடை இல்லம், என்னே கிராம மக்கள்,. என்னே அன்பின் பரிமாற்றம் என்று சொல்லிக் கொண்டிருந்த முருகனை வள்ளி என்னங்க என்ன இப்படி புலம்புகிறீர்கள் என்று உலுப்ப, முருகன் மெது வடை சாப்பிட்டியா என்று கேட்க, வள்ளி என்ன கனவா சரியான ஆள், கிராமத்திற்கே செல்லுங்கள் என்று கூறி விட்டு நகர்ந்ததும், முருகன் தான் கண்டது கனவா என்று மனதிற்குள் நினைத்து மறுபடியும் மெதுவடை இல்லம் என்று கூறி சிரித்தான்.

#சிறுகதை

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *