சென்னை, ஏப். 29–
மெட்ரோ ரெயில் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த ஸ்மார்ட் கார்டு விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. அப்போது ஸ்மார்ட் கார்டு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது, டோக்கன் முறையும் இருந்தது. மெட்ரோ ரெயில் பயணிகளில் 38 லட்சம் பேர் ஸ்மார்ட் கார்டை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஸ்மார்ட் கார்டு பயன்பாட்டை மெட்ரோ ரெயில் நிர்வாகம் நிறுத்தியுள்ளது. அதிகமாக விரும்பி பயன்படுத்தப்படும் ஸ்மார்ட் பயண அட்டை இனி பயணிகளுக்கு வழங்கப்படாது. ஆனாலும் ஏற்கனவே கார்டு வைத்திருப்பவர்கள் அதை ரீசார்ஜ் செய்து தொடர்ந்து பயன்படுத்தலாம் என்று மெட்ரோ ரெயில் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து மெட்ரோ ரெயில் தரப்பில் கூறுகையில், ஸ்மார்ட் கார்டு விற்பனை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நிறுத்தப்பட்டுவிட்டது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நேஷனல் காமன் மொபிலிட்டி கார்டை வழங்கி வருகிறோம். பொதுப் பயன்பாடு உள்ள அந்த கார்டை ஊக்குவிப்பதற்காக ஸ்மார்ட் கார்டு வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. ஷாப்பிங் மற்றும் பிற போக்குவரத்து முறைகளில் பயணிக்க இக்கார்டை பயன்படுத்தலாம். ஆனால் சில பயணிகளிடம் இது சென்றடையவில்லை என்று கூறினர்.