செய்திகள் நாடும் நடப்பும்

மெட்ரோ ரெயில்கள் தரும் சொகுசான சவாரி, சென்னையின் புதிய முகம்


ஆர். முத்துக்குமார்


10 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை மாநகர் எப்படி இருக்கும்? என்ற கற்பனையில் மிக முக்கியமான காட்சி நகரெங்கும் ஓடிக்கொண்டிருக்கும் மெட்ரோ ரெயில்களாகத் தான் இருக்கப் போகிறது.

இன்றைய ஜனத்தொகைக்கு ஏற்ப சென்னை விரிவடைந்து வருவது புரிகிறது. ஆனால் நெரிசல்மிகு பகுதிகளான பண்டைய சென்னை குடியிருப்பு பகுதிகளில் இருசக்கர வாகனங்களை கூட நிறுத்த முடியாமல் தவிப்பது அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

இன்றைய மயிலை, திருவல்லிக்கேணி போன்ற பகுதிகளில் உள்ள குடும்பங்கள் கார் வாங்க வசதிகள் இருந்தும் அதை நிறுத்த வழியே இன்றி தவிக்கிறார்கள். ஆக, வாழ்வியல் உயர்வு பெரும்பாலான குடும்பங்களில் எதிரொலிக்க வழியின்றி ஓர் சூழலில் நாம் சிக்கித் தவிக்கிறோம்.

இந்நிலையில் சென்னையின் பல முக்கிய பகுதிகளை இணைக்கும் திட்டங்கள் நகரின் வளர்ச்சிக்கு உந்துதல் சக்தியாக இருக்கிறது.

கார் சவாரியையும் விட குளுகுளு வசதியுடன் பயணிக்கும் வாய்ப்பை மெட்ரோ ரெயில்கள் தருவதால் அதை ரசித்து பயணிக்க பலர் ஆர்வம் காட்ட ஆரம்பித்து வருகிறார்கள். சென்னை மெட்ரோ ரயில்களில், செப்.12–ந் தேதி அன்று ஒரே நாளில் அதிகபட்சமாக 2.30 லட்சம் பேர் பயணம் செய்தனர்.

சென்னை மாநகரில் 2 வழித்தடங்களில் 55 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகின்றன. ஆரம்பத்தில் நாள்தோறும் ஒரு லட்சம் பேர் பயணம் செய்தனர். இதற்கிடையில் கொரோனா பெருந்தொற்று காரணமாக மெட்ரோ ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. மீண்டும் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கிய போது ஆரம்பத்தில் 20 ஆயிரம் பேர் தினசரி பயணித்தனர். இந்த எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வந்தது.

கடந்த சில மாதங்களாக தினமும் 1.50 லட்சம் முதல் 1.80 லட்சம் பேர் பயணம் செய்து வந்தனர். கடந்த ஆகஸ்ட் 29–ம் தேதி 2.20 லட்சம் பேர் பயணம் செய்திருந்தனர். அந்த செப்டம்பர் 12–ந் தேதி அன்று அதிகபட்சமாக சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் 21 ஆயிரத்து 419 பேரும், திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் 11 ஆயிரத்து 189 பயணிகளும், கிண்டி மெட்ரோ ரயில் நிலையத்தில் 10 ஆயிரத்து 599 பேரும், விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்தில் 10 ஆயிரத்து 289 பயணிகளும் பயணம் செய்துள்ளனர்.

நாள்தோறும் காலை, மாலையில் நெரிசல் மிகுந்த நேரங்களில் மெட்ரோ ரெயில்களில் பயணிகள் எளிதாகவும் விரைவாகவும் குறிப்பிட்ட இடத்துக்கு செல்ல முடிகிறது. இதனால் பயண நேரம் மிச்சமாகிறது. சென்னை மெட்ரோ ரெயில்களில் க்யூஆர் குறியீடு பயணச்சீட்டு மற்றும் பயண அட்டைகளைப் பயன்படுத்தி பயணிக்கும் பயணிகளுக்கு 20 சதவீதம் கட்டணத் தள்ளுபடி வழங்கப்படுகிறது. எனவே மெட்ரோ ரயில்களில் பயணிக்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

இந்த நிலை நீடித்தால் பல புதிய மெட்ரோ ரெயில் சேவைகளும் துவங்கிடும் நேரத்தில் கார் வாங்குவோர் சென்னைக்கு அருகாமையில் இருப்பார்கள். கார் சொகுசுக்கு இணையாக மெட்ரோ சேவைகளை ரசிப்போர் இன்றைய சென்னையில் சொகுசுகளை அனுபவித்து வாழ வழி காண்பார்கள்.

Leave a Reply

Your email address will not be published.