சிறுகதை

மெடிக்கல் ஷாப் – ராஜா செல்லமுத்து

நாகராஜுவுக்கு கோபம் அதிகம் இருப்பதால் பிளட் பிரஷர் கொஞ்சம் தூக்கலாக இருக்கும். அது நோய் இல்லை என்றாலும் தன்னுடைய மனநிலை பொறுத்து தான் ரத்த ஓட்டம் மாறுபடுகிறது என்று நாகராஜுக்கு நன்றாகவே தெரியும். இருந்தாலும் மருத்துவரின் ஆலோசனைப்படி காலை மாலை என்று பிரஷருக்கான மாத்திரைகளை போட்டுக் கொண்டே வந்தார்.

நண்பர் சிவா ஒரு நாள் நாகராஜிடம் கேட்டார்

நாகராஜ் வாக்கிங், ஜாக்கிங் போனாலே இந்த சுகர், பிரஷர் எல்லாம் ஒன்னும் இல்லாம போகும். இதுக்கு மருந்து மாத்திரை எல்லாம் கிடையாது .அதுக்கு கட்டுப்படவும் செய்யாது .அதனால தினமும் நடங்க .உடற்பயிற்சி செய்யுங்க; அப்படி செஞ்சாலே கிட்டத்தட்ட பிரஷர் ,சுகர் உங்கள அண்டவே அண்டாது என்று நாகராஜன் பிரஷருக்கு மாற்று வழியைச் சொன்னார்.

சிவா நீங்க சொல்றதும் சரிதான் வாக்கிங், ஜாக்கிங் கூட மாத்திரையும் சாப்பிட்டா தான் உயிர் பிழைச்சு வாழ முடியும். இல்லன்னா ரொம்பக் கஷ்டம் என்று தன் அனுபவ அறிவைப் பொழிந்தார் நாகராஜ் .

இதற்குப் பதில் எதுவும் சொல்லாத சிவா சிரித்தபடியே அந்த இடத்தை விட்டு நகர்ந்தார் .

வழக்கம் போல காலை மாலை என்று பிரஷர் மாத்திரையைப் போட்டுக் கொண்டிருக்கும் நாகராஜ் அன்று காலை அவர் பிரஷருக்கு போடுவதற்கான மாத்திரை கைவசம் இல்லாமல் இருந்தது

சரி பக்கத்துல இருக்கிற கடையில வாங்கிக்கலாம் என்று நினைத்தவர் அவர் வீட்டில் இருந்து இரண்டு திருப்பங்கள் தள்ளி இருந்த கீதா மெடிக்கல் ஷாப்புக்கு சென்றார் .

அங்கே மெடிக்கல் ஷாப்பில் இருந்தவன் செல்போனில் பேசிய அப்படியே இருந்தான் .

அவனிடம் தனக்கு தேவையான மாத்திரை சொல்லிவிட்டு நின்று கொண்டிருந்தார் நாகராஜ். மெடிக்கல் ஷாப்பில் இருந்தவன், நாகராஜ் பேச்சுக்கு தலையைக் கூட ஆட்டாமல் அவன் பாட்டுக்கு பேசிக் கொண்டிருந்தான்.

ஏதோ முக்கியமான விஷயமாகத்தான் பேசிக் கொண்டிருக்கிறான் பாேல என்று நினைத்த நாகராஜ் எதுவும் பேசாமல் இருந்தார்.

மாத்திரை எடுத்துக் கொடுக்காமல் அவன் என்ன பேசுகிறான்? என்பதை கவனித்தார் நாகராஜ்

எதோ ஒரு நண்பருடன் வெற்று அரட்டை அடித்துக் கொண்டிருப்பது அவர் காதில் விழுந்தது. சிறிது நேரம் நின்று பார்த்த நாகராஜ் சட்டென்று

ஹலோ நான் மாத்திர கேட்டுகிட்டு இருக்கேன். நீங்க பாட்டுக்கு செல்போன்ல பேசிட்டு இருக்கீங்க இது தவறில்லையா ?என்று கேட்டார் .

இதைச் சற்றும் எதிர்பார்க்காத அந்த கடையில் இருந்தவன் செல்போன் பேசுவது என்னுடைய பிரைவசி . அதை நீங்க கேட்கக்கூடாது என்றான்.

மாத்திர வாங்க வர்றதுங்களுக்கு அத குடுக்காம தேவை இல்லாத பேச்சு பேசிட்டு இருக்கீங்க .நான் பத்து மணிக்கு இந்த மாத்திரையைப் போடணும். இப்ப மணி 11 ஆயிடுச்சு. இன்னும் பாேடல.

இது ஹோட்டலோ டீக்கடையாே இல்ல உங்கள் இஷ்டத்துக்கு குடுக்கிறதுக்கு. ஒரு நோயாளி நின்னு கேட்டுகிட்டு இருக்கான். அதை விட்டுட்டு நீங்க இப்படி பேசுறது எந்த வகையில் நியாயம் ?என்று காேபத்தாேடு கேட்டார் நாகராஜ்.

அவன் எதற்கும் செவிமடுக்காமல் தன்னுடைய ஆளுமையை அங்கு செலுத்திக் கொண்டிருந்தான்.

கோபம் வந்த நாகராஜ்

உன்ன சும்மா விடமாட்டேன் .உயிர் காக்குற இடத்தில் இருக்கிற நீங்க இப்படி அலட்சியமா இருக்குதுனால தான் நிறைய தவறுகள் நடக்குது .உன் மேல நான் கம்ப்ளைன்ட் பண்ண போறேன் என்று உறுதியாகச் சொன்னபோது அவன் கொஞ்சம் ஆடித் தான் போனான் .எத்தனையோ காரணங்களை சொன்னான். ஆனால் அதற்கு நாகராஜ் செவி மடுக்கவில்லை.

அவருக்குத் தேவையான மாத்திரையை வாங்கி அங்கு இருக்கும் தண்ணீரை எடுத்து அங்கேயே விழுங்கினார்.

அப்போதுதான் மெடிக்கல் ஷாப்பில் இருந்தவனுக்குப் புரிந்தது.

நாகராஜ் உண்மையைத்தான் சொல்கிறார் என்று .

வெளியே வந்த நாகராஜ் அந்த மெடிக்கல் ஷாப்பிங் பாேர்டைப் பார்த்தார்.

அதில் எழுதியிருந்த செல் நம்பருக்கு போன் செய்தார்

ஃபோனில் எதிர் திசையில் இருந்தவர்

சார் சொல்லுங்க என்று கேட்டபோது

நடந்த அத்தனையும் விலாவாரியாக ஒப்பித்தார் நாகராஜ் .

நான் இங்கே இருக்கேன் நீங்க வாங்க என்று சொன்னார்

சிறிது நேரத்திற்கு எல்லாம் இரு சக்கர வாகனத்தில் வந்த இறங்கினார் ஷாப் ஓனர்.

நாகராஜனைப் பார்த்து கை காெடுத்தார்.

நான் தான் உங்களுக்கு போன் பண்ணேன் என்று சொன்னபோது அந்த ஓனர் உள்ளே சென்றவர் கடையில் இருந்தவனை லெப்ட் ரைட் என்று வாங்கினார் .

இனிமேல் உனக்கு இங்க வேலை இல்ல போகலாம் என்று சொன்னார்.

தன் தவறை உணர்ந்து கொண்டவன்

ஸாரி சார் என்றான். இல்ல உயிர் காக்குற மருத்துவத்தில் வேலை செய்றவங்க ரொம்ப நேர்மையாவும் உண்மையாவும் இருக்கணும். இதோட நிறைய கம்ப்ளைன்ட் உன்னப் பத்தி வந்திருக்கு. இனி நீங்க இருக்க வேண்டாம் என்று துரத்தினார்.

அப்போதுதான் அவனுக்குத் தான் செய்த தவறின் உண்மை புரிந்தது. மெடிக்கல் ஷாப்பை விட்டு வெளியேறினான்.

தவறான மனிதர்களை நல்ல இடத்தில் வைக்க கூடாது . அது பல பேருக்கு கெடுதலை உண்டாக்கும் என்று ஷாப் ஓனரிடம் கை கொடுத்து விட்டு நகர்ந்தார் நாகராஜ்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *