வாஷிங்டன், பிப்.11-
மெக்சிகோ வளைகுடாவை அமெரிக்க வளைகுடா என பெயர் மாற்றி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 4-ம் தேதி புளோரிடா மாகாணத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், “விரைவில் ஒரு மாற்றத்தை அறிவிக்க உள்ளோம். மெக்சிகோ வளைகுடாவின் பெயரை அமெரிக்க வளைகுடா என மாற்றப்போகிறோம். ஏனென்றால் அது எங்களுடையது. அமெரிக்க வளைகுடா ஒரு அழகான பெயர். அது மிகச்சரியாக உள்ளது” என்று அறிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலையில், தற்போது மெக்சிகோ வளைகுடாவை, அமெரிக்க வளைகுடா என பெயரை மாற்றம் செய்யும் உத்தரவில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
மெக்சிகோவில் நடை பெறவுள்ள கால்பந்து போட்டியை காண விமானத்தில் பறந்துகொண்டிருந்தபோது, இந்தப் பெயர் மாற்றத்துக்கான உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
மேலும், பிப்ரவரி 9-ம் தேதியை அமெரிக்க வளைகுடா நாள் என்றும் அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அந்த உத்தரவில்,
“மெக்சிகோ வளைகுடா என முன்னர் அறிவிக்கப்பட்ட பகுதி நீண்ட காலமாக வளர்ந்து வரும் நமது தேசத்தின் ஒருங்கிணைந்த சொத்தாக இருந்து வந்தது. அமெரிக்காவின் அழிக்க முடியாத பகுதியாக மெக்சிகோ இருந்து வருவதாக கூறப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கையை மேற்கொண்டேன். அமெரிக்காவின் மகத்துவமான வரலாற்றில் அதன் பெருமையை மீட்டெடுத்துள்ளோம்” என்று கூறியுள்ளார்.