சென்னை, நவ. 29:
மூளைச் சாவு ஏற்பட்ட ஒரு பெண்ணின் குடும்பத்தினர் உறுப்புத் தானத்திற்கு முன்வந்ததின் மூலம் 8 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது என்று வடபழனியில் உள்ள ‘சிம்ஸ்’ மருத்துவமனையின் துணைத்தலைவர் மற்றும் மூத்த மருத்துவரான டாக்டர் ராஜு சிவசாமி கூறினார்.
சென்னை வடபழனியில் உள்ள ‘சிம்ஸ்’ மருத்துவமனையில், மதுரவாயிலைச் சேர்ந்த 51 வயது பெண்ணை நவம்பர் மாதம் 25-ம் தேதி மிகவும் கவலைக்கிடமான நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அனைத்து துறைகளின் மூத்த மருத்துவ நிபுணர்களின் கண்காணிப்பில், அவர் நான்கு நாட்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்கப்பட்டபோது, பின்புற சுருட்சி பக்கவாதம் இருப்பது கண்டறியப்பட்டது. எனினும் சிகிச்சை பயனளிக்காத காரணத்தால், அவர் மூளைச் சாவு அடைந்தார்.
இந்த துயரமான நேரத்திலும், அவரது கணவர், சகோதரர் மற்றும் மகன் ஆகியோர் அந்த பெண்ணின் உறுப்புகளை தானம் செய்ய தாமாகவே முன்வந்தனர்.
மூளைச் சாவு உறுதி செய்யப்பட்ட ஒருவருக்கு செய்யப்பட வேண்டிய அனைத்து பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு, அவரது உறுப்புகள் மீட்கப்பட்டன. அவரது கல்லீரல் மற்றும் ஒரு சிறுநீரகம் சிம்ஸ் மருத்துவமனையில் உள்ள இரண்டு நபர்களுக்கு பொருத்தப்பட்டது.
அதேபோல், இரண்டு நுரையீரல்கள் குளோபல் மருத்துவமனையில் உள்ள ஒரு நோயாளிக்கும், இருதயம் எம்ஜிஎம் மருத்துவமனையில் உள்ள ஒரு நோயாளிக்கும் பொருத்தப்பட்டது. இரண்டு விழிப்படலங்கள் சங்கர நேத்ராலய மருத்துவமனையின் கண் வங்கிக்கு தானமாக வழங்கப்பட்டது என்று மருத்துவமனை துணைத்தலைவர் டாக்டர் ராஜு சிவசாமி கூறினார்.
![]()





