சென்னை, ஜூன் 8–
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் மூளைச் சாவு அடைந்த கூலித் தொழிலாளி ஒருவரின் உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டதில் 5 பேருக்கு மறு வாழ்வு கிடைத்துள்ளது.
வேலூர் மாவட்டம், மது மண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 47). மாதவரம் அருகில் உள்ள மஞ்சம்பாக்கத்தில் உள்ள லாரி பழுது பார்க்கும் பணி மனையில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி பத்மாவதி. இவர்களுக்க வெண்மதி, மதுமதி ஆகிய 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் பிரபாகரன் கடந்த 4ந் தேதி மாலை லாரி மேல் ஏறி மாங்காய் பறிக்கும்போது கால் தடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வந்த அவருக்கு பல்வேறு துறை மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்து வந்தனர். கடந்த திங்கட்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி அவர் மூளைச் சாவு அடைந்தார்.
இதையடுத்து அவரது உடல் உறுப்புக்களை தானம் அளிக்க உறவினர்கள் முன் வந்தனர். அதன்படி, அவரது உடலிலிருந்து 2 சிறுநீரகங்கள், விழி வெண்படலங்கள் மற்றும் தோல் ஆகியவை தானமாகப் பெற்றப்பட்டு 5 நோயாளிகளுக்கு வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது.