எனக்கு போன் செய்த அனுஷா, ” மாதவன், நாளைக்கு ரிஜிஸ்தர் ஆபீஸ்ல நடக்க இருக்கிற நம்ம கல்யாணம் கேன்சல்.எங்கப்பா ஹார்ட் அட்டாக்ல இறந்திட்டார்” என்றாள்.
” ஓ மை காட்!”அனுஷா எனக்காக வாங்கிக்கொடுத்த காரில் அவள் வீட்டுக்கு புறப்பட்டேன்.
அனுஷா….கோடீஸ்வரி! இரண்டு திருமணங்கள் செய்து தோல்வியடைந்தவள்.நான் அவளின் தந்தை தொழிதிபர் சிவாச்சலத்தின் புதிய மேனேஜர்.வயது 40.ஒரு நாள்,” நீங்க ஏன் மாதவன் கல்யாணமே பண்ணிக்கலை”என்று கேட்டாள்.
” என் முதல் காதல் தோல்வி.அதான் பண்ணிக்கலை” என்றேன்.” என் ரெண்டு திருமணமும் தோல்வி.நான் என் வாழ்க்கையை முடிச்சுக்கலாம்னு இருக்கேன்.”” ச்சே..ச்சே..உங்க குழந்தைகளுக்காக நீங்க வாழ்ந்தாகனும்”” நீங்க ஏன் என்னை கல்யாணம் செய்து கொள்ளக்கூடாது? ஐ லைக் யூ மாதவன்!”அதிர்ந்தேன்.
சிறிது நேரத்தில் எனக்குள் ரசாயன மாற்றம்.ஒரு மேனேஜர் முதலாளியாகும் யோகம் என பூரித்தேன்.சம்மதம் சொன்னேன்.
சிவாச்சலம் எங்கள் திருமணத்தை அங்கீகரிக்கவில்லை. அனுஷாவின் பிடிவாதத்தால் நாளை ரிஜிஸ்டர் ஆபீஸில்….சிவாச்சலத்தை அடக்கம் செய்து முடித்ததும் அனுஷா என்னை தனியாக அழைத்து ,” அப்பா ஹார்ட் அட்டாக்ல இறக்கலை; தற்கொலை பண்ணிக்கிட்டார்” என்றாள்.
” என்னது?!”ஒரு கடிதத்தை நீட்டினாள்.
வாங்கிப்பார்த்தேன்.அதில்–என் முதல் மனைவி பத்மா இறந்ததும் நான் கௌரியை இரண்டாம் தாரமாக மணந்தேன்.கௌரிக்கு குழந்தை பிறக்கவில்லை.பத்மாவுக்கு பிறந்த அனுஷாவுக்கும் கௌரிக்கும் ஒத்து வரவில்லை.அதே சமயம் என் கோடிக்கணக்கான சொத்துக்கு ஒரே வாரிசு அனுஷாதான் என்பதை கௌரியால் ஜீரனிக்க முடியவில்லை.கௌரி தன் சொந்த தங்கை மாலதியை எனக்கு மூன்றாம் தாரமாக கட்டாயப்படுத்தி கட்டி வைத்தாள்.மாலதி மூலம் இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தது.ஆனால் அனுஷாவோ… எங்களை மதிக்காமல் தன் இஷ்டத்துக்கு இரண்டு திருமணங்கள் செய்து விவாகரத்தும் வாங்கிவிட்டாள்.
இப்போது எங்கள் கம்பெனியின் புது மேனேஜர் மாதவனை ஆசைப்பட்டு அவருக்குபுதுகார் வாங்கிக்கொடுத்து அவரை மூன்றாவது திருமணம் செய்யப்போகிறாள்.அனுஷாவின் இந்தச் செயல் என்னை அவமானப்படுத்தி விட்டது.ஒரு நல்ல தந்தையாக அனுஷாவை வளர்ப்பதில் தோற்றுவிட்டேன்.வாழ பிடிக்கவில்லை.விஷம் அருந்திவிட்டேன்.
இப்படிக்கு சிவாச்சலம்.
கடிதத்தை படித்துவிட்டு,” சாரி அனுஷா” என்று சொல்லி கடிதத்துடன் கார் சாவியையும் அனுஷாவிடம் கொடுத்து விட்டு ‘ ஒரு மேனேஜர் முதலாளியாகும் என் திட்டம்’ புஸ்வானமானதை எண்ணி வருத்தத்துடன் அங்கிருந்து வெளியேறினேன்.