செய்திகள்

மூத்த பத்திரிக்கையாளர் – இசை ஆய்வறிஞர் வாமனன் எழுதிய ‘‘டி. எம். எஸ்: ஒரு பண்- – பாட்டுச் சரித்திரம்’’ புத்தகம்: நடிகர் ராஜேஷ் வெளியிட்டார்

‘பாடத் தெரிந்த நடிகன்; நடிக்க தெரிந்த பாடகன்’ : டி.கே.எஸ். கலைவாணன் புகழஞ்சலி

சென்னை, மார்ச் 27–

கலைமாமணி வாமனன் எழுதிய நூற்றாண்டு நாயகர் பத்மஸ்ரீ டிஎம்எஸ்- ஒரு பண்–பாட்டுச் சரித்திரம் என்னும் நூல் வெளியீட்டு விழா மயிலை பிஎஸ் மேல்நிலை பள்ளி வளாகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்கில் நடைபெற்றது. இந்நூலை தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத் தலைவர் ராஜேஷ் வெளியிட்டு உரையாற்றினார்.

விழாவுக்கு ‘அவ்வை’ டி.கே. சண்முகத்தின் புதல்வர், கலைமாமணி டி.கே.எஸ். கலைவாணன் தலைமை வகித்து உரையாற்றினார். (இதை பேருரை என்றுதான் சொல்ல வேண்டும். புகழுரை அருமை, இனிமை, தலைமைக்குப் பெருமை).

காலத்தை வென்று டி எம் எஸ் பாடல்கள் நின்றது எப்படி? ஒவ்வொரு பாட்டையும் பாடுவதற்கு முன் ஒலிப்பதிவுக் கூடத்தில் அவர் எடுத்துக்கொண்ட பக்தி சிரத்தை எப்படி? எத்தனை “டேக்குகள்” வாங்கினாலும், தனக்கு ஆத்ம திருப்தி வரும் வரை அந்தப் பாடலைப் பாடி அதன் பின்னரே ஒலிப்பதிவு செய்ய வேண்டும் என்ற தணியாத தாகம் இருந்தது ஏன்? என்பதை டி.எம்.எஸ். பக்கத்தில் இருந்து தான் பார்த்ததை, காதுபடக் கேட்டதை அனுபவப்பூர்வமாக, உள்ளது உள்ளபடி தெளிவாக விளக்கினார் சுவைபட டி.கே.எஸ். கலைவாணன்.

டி.எம்.எஸ். பாடல்களில் காதல்- சோகம்- வீரம்–பக்தி–நவரசங்கள் ஒலித்ததில் உலக அளவில் ஒப்பாரும் மிக்காரும் இன்றி உன்னதமான ஒரு கலைஞன் என்று புகழாரம் சூட்டினார்.

பாடத் தெரிந்த நடிகன், நடிக்கத் தெரிந்த பாடகன் டி.எம்.எஸ். தமிழை தமிழாக உச்சரித்தவர். தன் குரலில் ஏற்ற இறக்கம் காட்டியவர். யாருக்காக பாடுகிறோம்,- அந்தக் கலைஞர்கள் (எம்ஜிஆர், சிவாஜி, ஜெய்சங்கர்… இப்படி) யார் யார் ?அவர்கள் நடிப்பு எப்படி என்பதை அனுமானித்து, படத்திற்கு உயிர் கொடுத்த கலைத்தாயின் தவப்புதல்வன் டி எம் எஸ் என்று பெருமிதத்தோடு கூறி புகழஞ்சலி செலுத்தினார்.

T என்றால் தமிழ், M என்றால் மியூசிக், S என்றால் சவுண்ட்: தமிழ் இசைக்கு- அதன் பாட்டுக்கு, ஒலி கொடுத்து காந்தக் குரலாலே – பூமிப் பந்தில் எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கிறார்களோ அவர்களின் உள்ளங்களில் உறைந்து இருப்பவர் டிஎம்எஸ் என்று சிலாகித்துப் பேசினார்.

எம் எஸ் குடும்பத்தோடு தனக்கு இருக்கும் 40 ஆண்டுகால நெருங்கிய நட்பை, அவரின் படவுலக வெற்றி பவனியை 30 நிமிடத்தில் படம் பிடித்துக் காட்டியதில் தலைமை உரைக்கு மிக மிக பொருத்தமே டி.கே.எஸ். கலைவாணன் என்று பார்வையாளர்களை கோரசாகச் சொல்ல வைத்தார். (டி.எம்.எஸ். பாணியில் 13 பாடல்களைப் பாடி கைத்தட்டலோடு ஏகோபித்த பாராட்டைப் பெற்றார்)

எதிர்பார்த்து

ஏமாற்றம்

உள்ளூர் சினிமாவில் இருந்து உலக சினிமா வரை படித்து வைத்திருக்கும் நடிகர் ராஜேஷ், தமிழ் சினிமாவில் சரித்திர சாதனை நாயகன் டி.எம்.எஸ். பற்றி அலசி அருமையாக பேசுவார், டி.எம்.எஸ்சின் பொற்காலம் பற்றி உரையாற்றுவார் என்று எதிர்பார்த்து வந்தனர் திரை இசை ஆர்வலர்கள். ஆனால் ராஜேஷோ, டி.எம்.எஸ். பற்றிய முழுநீள புத்தகத்தைத் தொடாமல், நூலாசிரியர் வாமனன் பற்றியும், சம்பந்தமில்லாத வேறு விஷயங்களைப் பற்றியும் விஸ்தாரமாய் பேசியதில் ஏமாற்றம் அடைந்தனர்.

ஊடகவியலாளர் சிவசு வாழ்த்துரைத்தார். மயிலை கபாலீஸ்வரர் கோயில் ஓதுவாமூர்த்தி சற்குருநாதன் இறைவணக்கம் பாடினார். நிகழ்ச்சிகளை அழகு தமிழில் இலக்கியச் சுவையோடு கவிஞர் காவிரி மைந்தன் தொகுத்து வழங்கினார். சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்த மணிவாசகர் பதிப்பகத்தின் உரிமையாளர் மீனாட்சி சுந்தரம் நன்றி கூறினார். வந்திருந்த அனைவரையும் நிர்வாகி குருமூர்த்தி வரவேற்றார். முடிவில் நூலாசிரியர் வாமனன் ஏற்புரை ஆற்றினார்.

மணிமேகலை பிரசுரம் ரவி தமிழ்வாணன், பிரகாஷ் சுவாமி, எழுத்தாளர் என்.சி.மோகன் தாஸ், சேவா ஸ்டேஜ் மூத்த கலைஞர் துரை உள்ளிட்ட இலக்கிய ஆர்வலர்கள் பலரும் பங்கேற்றார்கள்.

‘‘முத்திரை பதித்த முத்தமிழ்ப் பாடகர், வித்தகர் இவர் தான் வேந்தன் – ஒலியில்’’ என்று 32 வரிகளில் சிவநேயப் பேரவை நிறுவனர் கவிஞர் ஈசநேசன் மகஸ்ரீ வாழ்த்துப்பா அளித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *