செய்திகள் போஸ்டர் செய்தி

‘‘மூத்த கலைஞர்களுக்கும், வளரும் கலைஞர்களுக்கும் உறவுப்பாலம் டிரினிட்டி கலை விழா’’: நர்த்தகி நட்ராஜ்

Spread the love

சென்னை, டிச. 11
மக்கள் குரல் – டிரினிட்டி மிரர் இணைந்து நடத்தி வரும் 8ம் ஆண்டு டிரினிட்டி இசை கலை விழாவுக்கு பிரபல நாட்டிய கலைஞர் பத்மஸ்ரீ நர்த்தகி நட்ராஜ் மனமார்ந்த பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
டிசம்பர் இசை விழா நேரத்தில் டிரினிட்டி கலைவிழாவில் நல்ல பல நிகழ்ச்சிகளை நடத்தி வருவது மகிழ்ச்சிக்கும் பெருமைக்குரியதாகவும் இருக்கிறது. ‘டிரினிட்டி’ நல்ல ஆரோக்கியத்துடன் கலை வளர்க்கும் நிறுவனத்திற்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்து வருகிறது. இசைக் கலை விழா 8 நாள் நிகழ்ச்சியில் நாட்டியக்கலை குறித்து ‘நவதீஷா’ அமைப்பின் சார்பில் கருத்தரங்கு நடத்தி வருவதும் பாராட்டுக்குரியது இசை மற்றும் நாட்டியத்தில் நிபுணத்தும் பெற்றிருக்கும் கலைஞர்கள், அறிஞர் பெருமக்களை வரவழைத்து அவர்களை கொண்டு சிறப்புரை , விளக்கவுரை, அதேநேரத்தில் பார்வையாளர்கள் எழுப்பும் சந்தேகங்களுக்கு அவர்களைக் கொண்டு பதில் தர வைத்திருப்பது வரவேற்கத்தக்கது.
பார்வையாளன் என்ற முறையில் நானும் இந்த கருத்தரங்கு நிகழ்வில் பங்கேற்றேன். வளரும் கலைஞர்களுக்கும், வளர்ந்து இருக்கும் மூத்த கலைஞர்களுக்கும் அரிய பல தகவல்களை இதன் மூலம் சொல்லி வருவதால் நல்ல பலன் கிடைக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவத்தார்.
இளையதலைமுறைகள்
வருகை கூடுகிறது…
மேலும் மூத்த கலைஞர்களை அடையாளம் கண்டு அவர்களை விருதளித்து கௌரவிக்கும் அதே நேரத்தில் அவர்களுக்கு ஆடுவதற்கும் சந்தர்ப்பம் தருவது பெருமைக்குரியது. மூத்த கலைஞர்களின் நாட்டியத்தை பார்ப்பதற்கு இளைய தலைமுறைகள் பெருமளவுக்கு அரங்கிற்கு வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. இது டிரினிட்டி (முக்கடவுள், சங்கீதமும்மூர்த்திகள் தஞ்சை நால்வர்) அனுகிரகம் என்றால் அது மிகையல்ல என்றார்.
நாட்டியத்திற்கு அடிநாதமாய், முதுகெலும்பாய் நம்மோடு நிறைந்திருப்பது தஞ்சை நால்வரின் (சின்னையா, பொன்னையா, சிவானந்தம், வடிவேலு சகோதரர்கள்) நடனம். குரு கிட்டப்பா பிள்ளையின் மாணவி என்ற முறையில் தஞ்சை நால்வரின் புகழ் பாடும் இந்த கலை விழா இருப்பது எனக்கு எல்லையில்லா மகிழ்ச்சியை தந்து இருக்கிறது. தஞ்சை நால்வரின் நடனத்தை மூத்த கலைஞர்கள் இங்கே மேடை ஏற்றுவதன் மூலம் ஆலமரத்தின் விழுதுகள் அடுத்த தலைமுறையிலும் வேர்விடுவதை கண்ணெதிரில் காண்கிறேன். மகிழ்ச்சியில் திளைக்கிறேன்.
நாட்டியத்துக்கான அடிப்படை அடவுகள், அலாரிப்பிலிருந்து தில்லானா வரை மார்க்கம் உருவாக அடித்தளம் இட்டவர்கள் தஞ்சை நால்வர். அவர்களின் பரிபூரண ஆசி டிரினிட்டி கலை விழாக்குழு நிர்வாகிகளுக்கு நிச்சயம் உண்டு என்றும் நர்த்தகி நடராஜ் மனம் திறந்து பாராட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *