சிறுகதை

மூட நம்பிக்கை – எம் பாலகிருஷ்ணன்

அறிவழகன் என்பவர் ஐம்பத்தைந்து வயதுள்ளவர். அவர் தனியார் துறையில் பணி பார்ப்பவர். மிகவும் நல்லவர் என்று பெயரெடுத்தவர். அவருக்கு நல்ல நல்ல பழக்க வழக்கங்கள் இருந்தன. யாராவது உதவி என்று கேட்டால் அவரால் முடிந்த உதவிகள் செய்வார்.

அவரின் மனதை எப்படி தூய்மையாக வைத்திருக்கிறாரோ அதுபோல் அவரின் உடலையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்வார்.

தினமும் வேலை முடிந்ததும் மாலைவேளையில் நடைப்பயிற்சி மேற்கொள்வார். அது முடிந்ததும் வீட்டுச் செடி கொடிகளுக்கு தண்ணீர் விடுவார். பிறகு பேரப்பிள்ளைகளுக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் பள்ளிக்கூடப் பாடம் நடத்திக் கொடுப்பார்.

அப்படிப்பட்ட அவர் தீவிர பக்தியுள்ளவர். வீட்டில் தினந்தோறும் சாமி படங்களுக்கு சூடமேற்றி பூஜை செய்வார். வாரம் தவறாமல் வெள்ளிக்கிழமை கோவிலுக்குச் செல்வார் இப்படி பழக்க வழக்கமுள்ள அவர் ஜோதிடத்தின் மீதும் சாஸ்திர சம்பிராயத்தின் மீதும் அதிக நம்பிக்கையுள்ளவராக இருப்பார்.

அதன் விளைவாக சகுனங்களின் மீதும் அபார நம்பிக்கையுள்ளவராகவும் இருப்பார்.

அவர் சாலையில் செல்லும் போது திடீரென பூனை குறுக்காக பாய்ந்தால் அதை கெட்ட சகுனமாக நினைப்பார். வீட்டில் அவர் இருக்கும் போது அவர் மேல் பல்லிகள் விழுந்தால் உடனே பஞ்சாங்கத்தை பார்க்கத் தொடங்கிடுவார். அதாவது தலையில் பல்லி விழுந்தால் நல்ல சகுனமா அல்லது தீய சகுனமா என்று பார்ப்பார். அதேபோல் உடலில் பல்லி விழுந்தால் என்ன பலன் என்று பார்ப்பார்.

இப்படி ஒவ்வொரு விசயத்திலும் சாஸ்திரங்கள் பார்க்கக் கூடியவர். மேலும் நல்ல நேரம் கெட்ட நேரம் என்று பூதக்கண்ணாடி வைத்து பார்த்து ஆராய்ந்த பிறகு தான் தொடங்குவார்.

இப்படியாக பல விசயங்களில் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் செயல்படுவார்.

அவரின் அதீத சாஸ்திர சகுனங்களின் பழக்கத்தை சிலர் அவரை வியப்பாக பார்ப்பார்கள். ஆனால் அதைப் பற்றி எள்ளளவு கவலைப்பட மாட்டார். ஒருநாள் அவரின் நண்பர் ‘‘ஏம்பா … அறிவழகா நான் சொல்றேன்னுதப்பா நினைக்காதே, உன்னுடைய கடவுள் நம்பிக்கையை பாராட்டுறேன். ஆனா உன்கிட்ட இருக்கிற மூட நம்பிக்கையை நான் வெறுக்கிறேன் என்றார்.

அதற்கு அறிவழகன் என்னப்பா சொல்லுறே எனக் கேட்டார். ஆமாம்பா நீ பூனை குறுக்கே வந்தா நேரம் சரியில்லைன்னு சொல்றே . அந்தப் பூனை எலியை பிடிக்க அவசரமாய் போகும். அதுக்கு நமக்கு நேரம் சரியில்லைன்னு சொல்லுறது அதுவும் இந்த விஞ்ஞான காலத்துல இதை நம்புறியே எனக்கேட்டால் அதற்கு அறிவழகன் உனக்கு நம்பிக்கையில்லை. ஆனா எனக்கு நம்பிக்கை இருக்கு. அவ்வளவு தான் வித்தியாசம் என்று வாயடைப்பார். அவர் நண்பரும் அதைப் பற்றி பேசாமல் இருந்திடுவார்.

அவரைப் போல் மேலும் சிலர் அறிவழகனிடம் பேசிப் பார்ப்பார்கள். அவர்களிடமும் இதே பதிலைக் கூறுவார். பிறகு அவர்களும் இதைக்கேட்க மாட்டார்கள்.

ஆனால் தனது பேரப்பிள்ளைகளிடம் டேய் அந்த மரத்துப்பக்கம் போகாதீங்க. பேய் இருக்கும் என்று பயமுறுத்தி வந்தார். அவர் இப்படி சாஸ்திர சகுணங்கள் மீது கடுமையான வெறிகொண்டு வாழ்ந்து வந்தார் அறிவழகன்.

மாதங்கள் சென்றன. ஒரு நாள் அவர் மகன் வேலை விசயமாய் வெளியூர் செல்ல நேரிட்டது. வீட்டில் அவரும் அவர் மனைவியும் பேரப்பையனும் இருந்தனர்.

அப்போது மாலைவேளையில் அவருடைய பேரன் மாடிப்படியில் அங்குமிங்கும் விளையாடிக் கொண்டிருந்தான். அறிவழகனும் அவர் மனைவியும் வீட்டு வாசலில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

மாடிப்படியில் உற்சாகமாக விளையாடியவன் திடீரென்று கால்கள் இடறி படியிலிருந்து உருண்டு கீழே விழுந்து விட்டான்.

அடடா அவருடைய பேரன் கீழே விழுந்ததில் அவன் மண்டை உடைந்தது. ரத்தம் கொட்டியது.

தாத்தா என்று கத்தினான். பேரனின் சத்தம்கேட்டு திடுக்கிட்ட அவர் ஓடிச் சென்று தூக்கினார்.

பேரன் தலையில் வழிந்த ரத்தத்தை ஒரு சிறு துணியால் மறைத்துக் கொண்டு மனைவியை அழைத்து,

‘வாடி ஆஸ்பத்திரிக்கு போவோம்’ என்று கத்தினார். அவருடைய மனைவியும் இவனை மாடிப்படியில விளையாடதேடான்னு சொன்னா கேட்கமாட்டேன்கிறான். இப்ப மண்டை உடைஞ்சி ரத்தம்கொட்டுதே என்று புலம்ப, அடியே இப்ப புலம்புறதுக்கு நேரமில்ல. இவனை பிடிச்சிக்க நான் போய் டூ வீலரை எடுத்துட்டு வந்துடுறேன் என்றவாறு அறிவழகன் தனது இருசக்கர வாகனத்தை எடுத்து உடனே அவர் பேரனை உட்கார வைத்தார். பிறகு அவரின் மனைவியையும் உட்கார வைத்து வேகமாக இரு சக்கரத்தை வாகனத்தை ஓட்ட அப்போது அந்த நேரம் பார்த்து ஒருபூனை திடீரென குறுக்கே பாய்ந்தது.

இதைச் சற்றும் எதிர்பார்க்காத அறிவழகன் திகைத்துப் போய் வண்டியின் வேகத்தை குறைத்து அப்படியே நின்றுவிட்டார்.

வண்டி நிற்கவும் இதைக் கவனித்த அவர் மனைவி என்னங்க வண்டியை நிப்பாட்டிட்டீங்க என்று அதிர்ச்சியுடன் கேட்க அதற்கு அவர் பூனை குறுக்கே பாய்ஞ்சிடிச்சி. இப்ப போனா நேரம் சரியிருக்காதே.

நம்ம வேகமாக போகும் போது ஏதாவது காரோ லாரியோ மோதிடும். அதனால வண்டியை நிப்பாட்டி

ஆட்டோவுல போவோம் என்று அவர் சொல்ல உடனே அவரின் மனைவிக்கு கோபம் தலைக்கேறியது.

ஏய்யா உனக்கு புத்தி கெட்டு போச்சா. பூனை குறுக்கே வந்திடிச்சின்னு ஆஸ்பத்திரிக்கு போகாம வண்டியை நிப்பாட்டிட்டே. இது உனக்கு நல்லா இருக்கா? அது போக நம்ம பேரனுக்கு மண்டை உடைஞ்சி ரத்தம் கொட்டிட்டு வருது. இப்ப போயி சகுனம் பாக்கலாமா முட்டாத்தனமா இருக்கு.

இப்ப எந்த ஆட்டோவும் வரலை. அதுவரைக்கும் ஆஸ்பத்திரிக்கு போகாம இருக்க முடியுமா என்று கடுமையான முறையில் கத்தினாள் அவரின் மனைவி.

அதற்கு அறிவழகன், மீனாட்சி நான் என்ன சொல்லவர்றேன்னு நீ முதல்ல புரிஞ்சிக்க என்று பேச்சை இழுத்தார்.

நீ ஒன்னும் சொல்ல வேணாம். முதல்ல இந்தவண்டியை விட்டு இறங்கு என்று அவரை கீழே இறங்கச்சொல்லி

உடனே தனது பேரனை வண்டியில் உட்கார வைத்து வண்டியை அவளே ஓட்டத் தொடங்கினாள்.

இதை எதிர்பார்க்காத அறிவழகன் அப்படியே சிலையாக நிற்க அவர் மனைவி, இந்தா பாருய்யா உன்னோட மூட நம்பிக்கையை வச்சி நீயே அழு. எனக்கு என்னோட பேரன் தான் முக்கியம்.

நீ இங்கேயே இரு. ஆஸ்பத்திரிக்கு வர வேண்டாம். உன்னோட மூடநம்பிக்கை என்ன செய்யுதுன்னு பார்ப்போம் என்று கூறிக்கொண்டே அவரின் மனைவி தலையில் காயம்பட்ட தனது பேரனுக்கு வைத்தியம் பார்க்க இரு சக்கர வாகனத்தில் வேகமாக மருத்துவமனைக்கு விரைந்தாள்.

அந்த இடத்தில் அங்குள்ளவர்கள் இதை கவனிக்க அவமானத்தால் தலை குனிந்தார் அறிவழகன்.

அவருடைய மூட நம்பிக்கையால் சொந்தப்பேரனை மருத்துவ மனைக்கு கொண்டு செல்லமுடியாமல் போனதை மற்றவர்கள் அவரை கேலியாக பேசியதையும் அவர் மனைவியே ஆண் பிள்ளை போல் இரு சக்கர வாகனத்தை ஓட்டியதையும் நினைத்து கூனிக் குறுகி வெட்கத்தால் தலைகாட்ட முடியாமல் நின்றதை அவரால் தன்னை சமாதானப்படுத்த முடியாமல் திணறினார்.

அதில் இந்த மூட நம்பிக்கை தேவையா தமக்கு என்று கேள்விகளைக் கேட்டு அதை இன்றோடுவிட்டுவிடுவது என முடிவெடுத்தார் அறிவழகன்.

#சிறுகதை

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *