உமா ஒரு மிகவும் அன்பான, சாதுவான பெண். அவளின் அம்மா, அப்பா இருவருமே அவளின் சிறு வயதிலேயே இறந்து விட்டனர். அவர்கள் இருவருமே காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டவர்கள். அதனால் அவர்களை யாரும் வீட்டில் சேர்க்க மறுத்து விட்டார்கள். உறவினர்களும் அதே மாதிரி ஏற்றுக்கொள்ளவில்லை. ஒரே ஒரு தூரத்து உறவினர் அதுவும் ஒரு பாட்டி மட்டும் அவளை வளர்க்க ஆதரவு தந்தாள். உமா நல்ல முறையில் வளர துணை புரிந்தாள்.
பாட்டியும் கண்ணுக்கு கண்ணாக வளர்த்தாள். வீடு சொந்த வீடு. இரு வீடுகளை வாடகைக்கும் விட்டிருந்தாள். பணப்பிரச்சனை எதுவும் இல்லை. மற்றபடி சொந்தம் என்று சொல்லிக்கொள்ள யாரும் இல்லை.
பாட்டி, உமாவிற்கு வீணை வாசிக்க மட்டும் கற்றுக் கொடுத்தாள். கல்லூரி படிப்பை முடித்தவுடன் உமாவுக்கு ஒரு பேங்க்கில் வேலையும் கிடைத்தது.
வீணை கச்சேரியும் செய்வாள். வீணை வாசிப்பில் சிறந்தவள் என்றும் பெயர் பெற்றாள். தனிமையைப் பற்றி உமா அவ்வளவாக கவலைப்படவில்லை. அவளுக்கு மனம் புரிய யாரும் முயற்சியும் எடுக்கவில்லை. பாட்டியும் வயது முதிர்ச்சி காரணமாக இறந்து போனாள்.
உமாவுடன் வேலை பார்த்து வந்தான் சுதாகர். உமாவை கனிவாக பார்த்துக் கொண்டான். அன்புடன் பழகி வந்தான். சில நேரங்களில் வீணை கச்சேரி ஏற்பாடும் செய்து கொடுப்பான். அவனுடைய அன்பும் ஆதரவும் உமாவுக்கு மிகவும் பிடித்துப் போனது.
அவ்வப்போது வீட்டிற்கும் வருவான். அவனின் வருகை உமாவிற்கு மன மகிழ்ச்சியை தந்தது. பாதுகாப்பாகவும் உணர்ந்தாள். இப்படியே சில மாதங்கள் உருண்டோடின.
ஒரு நாள் சுதாகர் மிகவும் சோர்வாக இருந்தான். உமாவும் காரணம் கேட்டாள்.
தனக்கு திடீரென ஒரு செலவு ஏற்பட்டு விட்டது. பணமுடையாக உள்ளது என்றும் கூறினான். உமா நான் தருவதாகக் கூறினாள். அவன் கேட்ட தொகையை உடனே கொடுத்து உதவினாள். உமாவுக்கு சுதாகர் மணமானவன் என்பதும் தெரிய வந்தது. அவளும் அதைப் பெரிது படுத்தவில்லை. ஏதோ தன் மேல் அன்பு செலுத்துவதை மட்டுமே பெரிதாக நினைத்தாள்.
அவ்வப்போது பணம் தேவைப்படுகிறது என்று கேட்டு வாங்குவான். உமாவும் அதைப் பெரிதுபடுத்தவில்லை.
ஒரு நான் தன் பிறந்தநாளுக்கு என்று ஒரு புதிய சேலை வாங்கி வைத்திருந்தான். அதை பீரோ முழுவதும் தேடினாள் கிடைக்கவில்லை. எதேச்சையாக கேட்ட சுதாகரிடம் சேலையைக் காணவில்லை தேடுகிறேன் என்று சொன்னாள்.
சுதாகர் சொன்னான், என் மனைவி இந்த மாதிரி சேலை வேண்டும் என்றாள். அதனால் அதை எடுத்துச் சென்று அவளிடம் கொடுத்துவிட்டதாக சொன்னான்.
சுதாகரிடம் உமா சொன்னாள். இதை என்னிடம் கேட்டாலே கொடுத்திருப்பேனே என்று கடிந்து கொண்டாள். ஆனாலும் உமாவுக்கு மனதில் ஒரு உறுத்தல் ஏற்பட்டது.
ஒரு ஆபீஸில் உடன் வேலை பார்ப்பவன் மகள் திருமணத்திற்கு செல்லும்படி ஆனது.
சுதாகர் தன் மனைவி, குழந்தையுடன் வந்திருந்தான். அவனைக் கண்டதும் மிகவும் அன்புடன் பார்த்தாள். ஆனால் அவன் அவளை கண்டுகொள்ளவே இல்லை. ஒரு மலர்ந்த முகம் கூட காட்டவில்லை. அத்துடன் அவள் கழுத்தில் உமாவின் நெக்லசும் இருந்தது. அவளுடைய பட்டுப் புடவை உடுத்தி இருந்தாள்.
உமா மிகவும் அதிர்ச்சி அடைந்ததுடன் வேதனைப் பட்டாள். இரவு முழுவதும் தூங்காமல் தன் நிலையை எண்ணி வேதனைப் பட்டாள். மறுநாளும் இதே நிலைமை நீடித்தது.
மறுநாள் இரவு திடீரென ஒரு முடிவு எடுத்தாள். மறுநாள் ஒரு முதியோர் இல்லத்திற்குச் சென்றாள். நேராக அந்த இல்லம் நடத்தும் தலைவியிடம் சென்றாள் உமா. தான் இரு முதியோர்களை தத்து எடுத்து என் வீட்டில் பாதுகாப்பாக வைத்து அவர்களுக்கு புதுவாழ்வு கொடுக்க விரும்புவதாக சொன்னாள்.
இதுவரை இது மாதிரியாக யாரும் கேட்டு அவளிடம் வந்ததில்லை. குழந்தைகளை மட்டும் தத்து எடுப்பதையே கேள்விபட்டிருந்தாள்.
சரிம்மா ஆனால் ஒரு மாதம் அவர்கள் உன் வீட்டில் இருக்கட்டும். பின் அவர்களின் சம்மதத்துடன் உன் வீட்டில் இருப்பதாக இருந்தால் இருக்கட்டும். அவர்களின் முடிவே முக்கியம் என்றாள் அந்த தலைவி. உமா அதற்கு சம்மதித்து விட்டாள்.
முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த ஒரு தாத்தா, பாட்டியை உமாவின் வீட்டிற்கு அனுப்பினார்கள். உமாவே உடன் இருந்து தன் வீட்டின் அனைத்து பகுதிகளையும் சுற்றிக் காட்டினாள்.
பாட்டி தாத்தாவின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. பக்கத்து கடை, பேங்க், எல்லாவற்றையும் கொண்டுபோய் காட்டினாள். இல்லத் தலைவியிடம் தாங்கள் அங்கேயே தங்கிக் கொள்வதாக உறுதி கூறினார்கள்.
உமாவும் வேலைக்கு போக ஆரம்பித்தாள். வீட்டிற்கு வந்த உடன் பாட்டி சுவையான டிபன் செய்து வைத்திருப்பாள். தாத்தா, மின் கட்டணம் செலுத்துதல் ரேஷன் வேலை அனைத்தையும் செய்து வைத்திருப்பார்.
உமா, தாத்தாவிற்கு பிடித்த தினசரி பேப்பர்களை வாங்கி வைத்திருப்பாள். அன்றாடம் பேப்பர்களை படிப்பார். தன் மகன், மகளின் உறவை அதிகம் நினைத்ததில்லை. உமாவை தங்கள் சொந்த பேத்தியாகவே நினைத்தனர். தினமும் பாட்டி தன் தோட்டத்திலிருந்த பவளமல்லிப் பூக்களை சேகரித்து மாலையாகக் கட்டி சாமி படத்துக்குப் போட்டிருந்தாள். வீடே மங்களகரமாக மாறி விட்டது. உறவுகளின் பாசத்தைப் பற்றி தெரிந்து கொண்டாள் அவர்களின் மூலமாக.
சில நாட்கள் கழித்து சுதாகர் வீட்டிற்கு வந்தான். அவனை உள்ளே வரச்சொல்வேயில்லை உமா.
காலம் கடந்து விட்டது. சுதாகர் என்று மட்டும் கூறி கதவை மூடினாள். வெளிக்கதவை மட்டும் அல்ல தன் மனக்கதவையும் தான்.